Published:Updated:

"மோடி காலில் விழவும் தயார்'' - 'தலைமைச் செயலாளர்' விவகாரத்தில் மத்திய அரசை ஒருகை பார்க்கும் மம்தா!

பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்
பாஜக - திரிணாமுல் காங்கிரஸ்

மத்திய அரசு Vs மம்தா அரசு: மே. வங்க தலைமைச் செயலாளர் விவகாரத்தில் நடப்பது என்ன..?

கடந்த 26-ம் தேதியன்று ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கிடையே கரையைக் கடந்தது `யாஸ்' புயல். இதனால் மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. புயல் பாதித்த இடங்களைக் கடந்த மே 28-ம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்தார் பிரதமர் மோடி. முதலில் ஒடிசா சென்ற மோடி, அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் புயல் பாதிப்புகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொண்டார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார்.

பிரதமரைக் காக்க வைத்த மம்தா!

இதையடுத்து மேற்கு வங்கம் சென்ற பிரதமர் மோடி, புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார். அதன் பிறகு, அவர் மேற்கு வங்க முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில், ஆய்வுக் கூட்டத்துக்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாவும் 30 நிமிடங்கள் தாமதமாகவே ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்தார். புயல் பாதிப்பு குறித்த அறிக்கைகளை சமர்பித்துவிட்டு, பிரதமருடன் தனியாக 15 நிமிடங்கள் ஆலோசனையில் ஈடுபட்டார் மம்தா. பின்னர், வேறு பணிகள் இருப்பதாகக் கூறிவிட்டு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார் மம்தா.

மம்தா பானர்ஜி - மோடி
மம்தா பானர்ஜி - மோடி
தீ…தி-1: கம்யூனிஸ்ட் கோட்டையில், காவிகளின் எதிர்ப்பில்… மம்தாவின் தொடர் வெற்றி சாத்தியமானது எப்படி?

பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோரை அரை மணி நேரமாகக் காக்க வைத்தது மட்டுமல்லாமல், ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் மம்தா வெளியேறிச் சென்றது பா.ஜ.க-வினரைக் கொந்தளிக்கச் செய்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மம்தாவின் செயல் எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது'' என்றார். பா.ஜ.க எம்.எல்.ஏ-வும் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, "மம்தாவைப் போல் எந்தவொரு முதல்வரும் நடந்துகொள்ளவில்லை. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தைச் சீரமைப்பதற்கான வழி குறித்துச் சிந்திப்பதை விடுத்து இதில் அரசியல் செய்து வருகிறார்'' என்றார்.

மம்தா தாமதம் ஏன்?

பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ``தன் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்து, நந்திகிராம் தொகுதியில் தன்னை எதிர்த்து நின்று வீழ்த்திய சுவேந்து அதிகாரிக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை மம்தா விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த மம்தா ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை'' என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

மற்றொரு தரப்பினரோ, "தன்னைத் தொடர்ந்து சீண்டி வரும் மத்திய பா.ஜ.க அரசை அவமானப்படுத்தும் வகையில்தான் தாமதமாக வந்து பிரதமரைக் காக்க வைத்ததோடு, ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் சென்றிருக்கிறார் மம்தா'' என்கிறார்கள்.

தலைமைச் செயலாளர் மாற்றம்?

மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பண்டியோபாத்யா மே 31-ம் தேதியோடு ஓய்வு பெறுவதாக இருந்தது. `கொரோனா தடுப்பு பணிகளை மனதில் கொண்டு தலைமைச் செயலாளருக்கு மூன்று மாத காலம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்' என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார் மம்தா. இதையடுத்து கடந்த 24-ம் தேதி, அவருக்கு மூன்று மாத கால பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது மத்திய அரசு. இந்தநிலையில், பணி நீட்டிப்பு வழங்கிய நான்கே நாள்களில் அவரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் பயிற்சி மையத்துக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு.

அலபன் பண்டியோபாத்யா
அலபன் பண்டியோபாத்யா
ANI

"பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வருடன் இணைந்து அரை மணி நேரம் தாமதமாக வந்ததால்தான், மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாவை பணிமாற்றம் செய்து பழி தீர்த்திருக்கிறது மத்திய அரசு. அதுமட்டுமல்லாமல் மம்தாவின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியை அவரிடமிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறது'' என்று திரிணாமுல் காங்கிரஸார் குற்றம்சாட்டுகின்றனர்.

`காலில் விழவும் தயார்!'

தலைமைச் செயலாளர் பணிமாற்றத்தைச் சற்றும் எதிர்பாராத மம்தா இது தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். "மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பழிவாங்கும் அரசியலைச் செய்து வருகிறது. சட்டசபைத் தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்றுக்கொள்ள முடியாத பா.ஜ.க, முதல் நாளிலிருந்தே பிரச்னை செய்து வருகிறது. தலைமைச் செயலாளர் என்ன தவறு செய்தார்?'' என்று கூறியிருக்கிறார் மம்தா.

மாநிலத்தின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் மோடியின் காலில் விழ வேண்டும் என்று சொன்னால், அதற்குக்கூட நான் தயாராக இருக்கிறேன்!
மம்தா பானர்ஜி

மேலும், "கொரோனா தடுப்பு பணிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் தலைமைச் செயலாளரைத் திரும்ப அழைத்திருப்பது நிச்சயம் பழி வாங்கும் அரசியல்தான். ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தேன் என்கிறார்கள். பிரதமரும், முதல்வரும் பங்கேற்க வேண்டிய இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க தலைவர்களை ஏன் அழைக்க வேண்டும்? குஜராத், ஒடிசா மாநிலங்களில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லையே?'' என்று காட்டமாகக் கேள்வியெழுப்பியிருக்கிறார் மம்தா. அதோடு மத்திய அரசின் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் மம்தா.

தலைமைச் செயலாளரை விடுவிக்காத மம்தா!

மே 31-ம் தேதிக்கு முன்பாக தலைமைச் செயலாளரை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மே 31, திங்கட்கிழமை அன்று காலை 10 மணியளவில் டெல்லியிலுள்ள பணியாளர் பயிற்சி மையத்தில், அலபன் பண்டியோபாத்யா பணியில் இணைய வேண்டுமென்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், தற்போது வரை மேற்கு வங்க தலைமைச் செயலாளர் பணியிலிருந்து, அவர் விடுவிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது நாளை (ஜூன் 1) முதல்வருடன் நடைபெறவிருக்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வோரின் பட்டியலிலும் அலபனின் பெயர் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

 Modi - Mamata
Modi - Mamata
File Photo

மம்தா இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்திலும், "மேற்கு வங்கம், இந்த நெருக்கடியான நேரத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்காது'' என்று குறிப்பிட்டு, அதிரடி காட்டியிருக்கிறார். இன்று, மத்திய பணியாளர் பயிற்சி மையத்தில் இணையாத காரணத்தால் அலபன் பண்டியோபாத்யாவுக்கு எதிராக ஒழுக்க ரீதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

மத்திய அரசு Vs மம்தா!

மம்தாவுக்கும் மத்திய அரசுக்கு இடையில் நடக்கும் மோதல் குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள் சிலர், ``மத்திய அரசுக்கும், மம்தா அரசுக்குமிடையே பனிப்போர் நடந்து வருகிறது. மூன்றாவது முறையாக முதல்வர் அரியணை ஏறியதிலிருந்தே மம்தா அரசுக்குத் தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் அழுத்தம் கொடுத்து வருகிறது மத்திய அரசு. மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கலவரம், எப்போதும் இல்லாத வகையில் பதவிப் பிரமாண மேடையிலேயே மம்தாவுக்கு ஆளுநர் அறிவுரை வழங்கியது, `நாரதா' வழக்கைத் தோண்டி எடுத்து முக்கிய அமைச்சர்களைக் கைது செய்தது எனத் தொடர்ந்து மத்திய அரசு மம்தாவைச் சீண்டி வருகிறது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
52 மணி நேர வீடியோ டேப்... ஸ்டிங் ஆபரேஷனுக்கு உதவிய திரிணாமுல் எம்.பி-`நாரதா' வழக்கில் நடந்தது என்ன?

அறுதிப் பெரும்பான்மை பெற்றுத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தின் ஆட்சிக் கட்டிலில், முழு நம்பிக்கையுடன் அமர்ந்திருக்கும் மம்தாவுக்கு, மத்திய அரசின் செயல்கள் நிச்சயம் எரிச்சலூட்டியிருக்கும். எனவேதான் பிரதமரின் ஆலோசனைக் கூட்ட விவகாரத்திலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற தலைமைச் செயலாளர் விவகாரத்திலும் அதிரடி காட்டியிருக்கிறார் மம்தா. இதுமட்டுமல்லாது, இனி வரும் காலங்களிலும், மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் மம்தா ஈடுபடுவார் என்பதில் சந்தேகமில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கான ரேஸில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவும் மத்திய அரசுக்கு எதிரான இதுபோன்ற காரியங்களில் மம்தா ஈடுபடுகிறார் எனலாம். மத்திய அரசும் அவரை அசைத்துப் பார்க்கும் நோக்கில் பல்வேறு விஷயங்களைச் செய்து வருகிறது. இதில் வெற்றி பெறப் போவது யார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு