``கட்சி நோ... அரசியல் ஓகே” - ரஜினி விவகாரத்தில் நடக்கப்போவது என்ன?

இனியும் அரசியல் விவகாரத்தில் ரஜினி ஒரு நிலையான முடிவெடுக்காவிட்டால் ரசிகர்களே `இனி வந்தால் என்ன... வராவிட்டால் என்ன...’ என்கிற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். அதை ரஜினியும் அறிந்துவைத்திருக்கிறார்.
`அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா...’ என்கிற எதிர்பார்ப்போடு இருபத்தி ஐந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டனர் ரஜினி ரசிகர்கள். தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார் ரஜினி. இதனால் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

`2017-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று தனது ரசிகர்கள் முன்னிலையில் பதிவுசெய்த ரஜினி, அதற்குப் பிறகு மீண்டும் வழக்கம்போல அமைதியானார். இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்தநிலையில் தனது அரசியல் செயல்பாடு குறித்து அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்தார். அப்போது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ``தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே நான் அரசியலுக்கு வருவேன். ஆனால் முதல்வர் வேட்பாளராக நான் இருக்க மாட்டேன்” என்று தடாலடியாக அறிவித்தார். இந்தநிலையில் கொரோனா நோய்த் தாக்கம் காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே ரஜினி பொதுவெளியில் வராமலும், அரசியல் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமலும் இருந்தார்.
இந்தநிலையில் கடந்த மாதம் ரஜினி பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில் உடல்நிலையைக் காரணம் காட்டி கொரோனா தொற்றுக்கு ஜனவரி மாதத்துக்குள் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால், தனது அரசியல் பயணம் இருக்காது என்று அந்த அறிக்கையிலிருந்தது. இந்த அறிக்கை ரஜினி தரப்பிலிருந்து நேரடியாக வரவில்லை. இந்த அறிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ரஜினி அந்த அறிக்கை என்னால் வெளியிடப்படவில்லை. ஆனால், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட எனது உடல்நிலை மற்றும் மருத்துவர்களின் கருத்துகளுக்கு நான் உடன்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்கிற பேச்சு வலுப்பெற்றது. இந்தநிலையில் மீண்டும் தனது நிர்வாகிகள் சந்திப்பை ரஜினி நவம்பர் 30-ம் தேதி (இன்று) நடத்துகிறார்.
இந்தச் சந்திப்பில் தனது அரசியல் நிலைப்பாட்டை ரஜினி தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், ``அவருக்கு அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால் அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளைப் பற்றி அவர் நிறைய யோசிக்கிறார். அவர் வீட்டிலேயே அவருடைய இரண்டாவது மகள் சௌந்தர்யா அப்பாவின் அரசியல் ஆசைக்கு ஒத்துழைக்கிறார். ஆனால், பா.ஜ.க தரப்பிலிருந்து தனக்கு வரும் அழுத்தம், சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்கிற குழப்பம் அவரிடம் இருக்கிறது. மேலும், அவரது உடல்நிலை அவர் எண்ணத்துக்கு ஈடுகொடுக்கும் அளவில் இல்லை என்பது உண்மை. ஒருவேளை கட்சி ஆரம்பித்து அது தேர்தலில் எடுபடாமல் போனால் அவரது ஒட்டுமொத்த இமேஜுக்கும் சரிவு வந்துவிடும். ஆந்திராவில் ரஜினி நண்பர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்துச் சந்தித்த சவால்களை அவரே ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்.
மற்றொருபுறம் அமித் ஷா வந்தபோது ரஜினி சந்திக்காமல் போனதில் பா.ஜ.க தரப்பு அப்செட்டில் இருக்கிறது. அரசியல் விவகாரத்திலும் தன் மீது பேட் இமேஜ் இருப்பதை ரஜினி விரும்பவில்லை. எனவே, வரும் தேர்தலில் அரசியல் செய்யலாம், ஆனால் கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்றே அவர் நினைக்கிறார். குறிப்பாக 96-ம் ஆண்டு தேர்தல்போல, தனது ஆதரவை மட்டும் கொடுத்துவிட்டு அமைதியாக ஒதுங்கிவிடலாம் என்கிற எண்ணமே பிரதானமாக அவருக்கு இருக்கிறது. அப்படி ஒரு நிலையை, தான் எடுத்தால் ரசிகர்கள் அதற்கு ஒத்துவருவார்களா அல்லது அரசியல் கட்சியை இத்தனை குறுகியகாலத்தில் ஆரம்பித்து வெற்றியடையச் செய்ய முடியுமா என்கிற கேள்வியை நிர்வாகிகளிடம் வைக்கப்போகிறார்.

நிர்வாகிகள் தரப்பில் என்ன கருத்து சொன்னாலும், தன் மனதில் தோன்றியதை மட்டுமே செய்யக்கூடியவர் ரஜினி. வரும் தேர்தலில் ஒரு கட்சிக்கு மட்டும் ஆதரவு கொடுத்து அரசியல் செய்யலாம். அதற்குப் பிறகு கட்சி ஆரம்பிப்பதைப் பற்றி யோசிக்கலாம் எனச் சொல்லும் மனநிலையே அவருக்கு இருக்கிறது” என்கிறார்கள். ஆனால், மற்றொரு தரப்பில், ``கண்டிப்பாகக் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பிருக்கிறது. அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் சமீபகாலம் வரை டிசம்பர் 12-ம் தேதி எனது ரவுண்டு ஆரம்பிக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதனால் அரசியல் அறிவிப்பு நிச்சயம் என்று இப்போதும் நம்பிகையோடு இருக்கிறோம்” என்கிறார்கள்.
இனியும் அரசியல் விவகாரத்தில் ரஜினி ஒரு நிலையான முடிவெடுக்காவிட்டால் ரசிகர்களே `இனி வந்தால் என்ன... வராவிட்டால் என்ன...’ என்கிற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். அதை ரஜினியும் அறிந்துவைத்திருக்கிறார்.