Published:Updated:

`அனைத்தும் இலவசம், மாணவர் சேர்க்கை இல்லை' - திராவிடப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மூடப்படும் அபாயம்!

திராவிடப் பல்கலைக்கழகம்
News
திராவிடப் பல்கலைக்கழகம்

``கல்விக் கட்டணம் மட்டுமல்லாமல், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் முதற்கொண்டு தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் சூழலிலும்,மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வருவதுதான் மூடப்படும் சூழலுக்கான காரணம்'' என்கிறார் திராவிடப் பல்கலைக்கழகதின் தமிழ்துறைத் தலைவர் பத்மநாபன்.

டெல்லி பல்கலைக்கழகத்திலும், குப்பத்தில் இயங்கிவரும் திராவிடப் பல்கலைக் கழகத்திலும் தமிழ் வகுப்புகள் பிரிவு மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள், தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுத்துவருகின்றன.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குப்பத்தில் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது திராவிடப் பல்கலைக்கழகம். தமிழ்நாடு , கர்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற திராவிட மொழித்துறைகள் இருக்கின்றன. இதனால் தமிழகம், கேரளா, கர்நாடக அரசுகளின் உதவியுடன் இந்த பல்கலைக்கழகத்தை ஆந்திர அரசு நடத்திவருகிறது. இதேபோல் தலைநகர் டெல்லியிலுள்ள, புது டெல்லி பல்கலைக்கழகத்திலும் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை இயங்கிவருகிறது. ஆனால், மேற்கண்ட இரண்டு பல்கலைக்கழகங்களிலும் கடந்த சில வருடங்களாகவே தமிழ்த்துறை முழு வீச்சுடன் செயல்படாததால், தமிழ்ப் பிரிவுகள் அகற்றப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தமிழக அரசுக்குச் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கனிமொழி அறிக்கை
கனிமொழி அறிக்கை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''டெல்லி பல்கலைக்கழகத்திலும், குப்பம் திராவிடப் பல்கலைக் கழகத்திலும் (ஆந்திரா) தமிழ் வகுப்புகள் பிரிவு (திராவிடப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பாடப் பிரிவு) மூடப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்பது வேதனைக்குரிய, அதிர்ச்சிக்குரிய செய்தி. நமது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், மாண்புமிகு முதலமைச்சர் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு, போதிய நிதி உதவிகள் ஒதுக்கீடு செய்து, பிற மாநிலங்களிலும் செம்மொழியாம் நம் மொழிப் படிப்பு பாதுகாக்கப்படவும், வளர்க்கப்படவுமான ஆக்கங்களை உடனடியாகச் செய்ய தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசர, அவசியமாகும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு சரிசெய்ய வேண்டுமென திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``கல்விக்கட்டணம் மட்டுமல்லாமல், விடுதிக் கட்டணம், உணவுக்கட்டணம் முதற்கொண்டு தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் சூழலிலும், மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வருவதுதான் மூடப்படும் சூழலுக்கான காரணம்'' என்கிறார் திராவிடப் பல்கலைக்கழகதின் தமிழ்துறைத் தலைவர் பத்மநாபன். அவர் பேசும்போது,

``இங்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. முதுகலை வகுப்பில் ஆண்டுக்கு 15 மாணவர்கள் இருந்த காலம் மாறி, தற்போது ஏழு பேர் மட்டுமே இருக்கின்றனர். கல்விக் கட்டணம், உணவு, விடுதி என அனைத்தும் இலவசமாக இருந்தபோதும், பணம் கட்டி தனியார் கல்லூரிகளில் சேர்ந்து பல மாணவர்கள் படித்துவருகிறார்கள். முதலில், இங்கு அனைத்தும் இலவசம் என்பதே பலருக்குத் தெரியாமல் இருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில், இந்தச் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு இல்லாத காரணத்தால்தான் சேர்க்கை இல்லாமல் போகிறது. தமிழ்த்துறை கைவிடப்படுமோ என்ற ஐயம் நிலவுகிறதே ஒழிய எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை'' என்றார்.

பேராசிரியர் உமா
பேராசிரியர் உமா

திராவிடப் பல்கலைக்கழகத்தின் நிலை இவ்வாறிருக்க , டெல்லி பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நிலை குறித்து பேராசிரியர் உமாவிடம் பேசினோம்.

``இங்கு தமிழ் படிக்கும் மாணவர்கள் பெரும்பான்மையானோர் சுற்றுவட்டார மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து, தென்மாநிலங்களிலிருந்து வருபவர்கள் மிக மிகக் குறைவு. அவ்வாறிருக்க , தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் பாடங்களாகக் கற்க மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. இங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களே அதிகமாகப் படிக்கிறார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தி தமிழ் படிக்க வைக்கவும் முடியாது. காரணம், அதற்கேற்ற வேலைவாய்ப்புகள் மிகக் குறைவு. இந்த 15 வருடங்களில் , முதுகலைத் தமிழ்த்துறையில் 20 மாணவர்களே தேர்ச்சிபெற்று பட்டம் பெற்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவிர, கடினமான பாடத் திட்டத்தாலும் மாணவர்களின் சேர்க்கை மிகக் குறைவாக உள்ளது. இந்த ஆண்டு , இதுவரை ஒரே ஒரு மாணவரே விண்ணப்பித்துள்ளார். ஒரு மாணவருக்காக 5 ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுத்து நிர்வகிப்பது கடினம். மாணவர்களே இல்லாத வகுப்பறையில் பாடம் எடுப்பது என்பது ஆசிரியரான எங்களின் ஊக்கத்தைக் கெடுக்கிறது. மாணவர் எண்ணிக்கை அதிகமிருக்கும் பட்சத்தில் பல்கலைக்கழகமே பேராசிரியர்களை நியமிக்கும். தமிழ் அல்லாத பிற மொழி மாணவர்கள் எளிதாக தமிழ் கற்கும் வண்ணம் பாடத் திட்டங்களை எளிதாக்கினாலே மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்'' என்கிறார் அவர்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது பற்றி திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசும்போது,

`` தற்போது எழுந்திருக்கும் இந்தப் பிரச்னைகளின் பின்விளைவுகள் உணர்ந்து, 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் திமுக சார்பில் அறிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால், எந்தத் தீர்வும் கிட்டவில்லை. தற்போது இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்தவுடனேயே , திமுக எம்.பி கனிமொழி, டெல்லி பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள், இரண்டு துணை பேராசிரியர்களை நியமிப்பது குறித்து மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். மேலும் , முதல்வர் ஸ்டாலின் , திராவிட பல்கலைக்கழகத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அவர்களிடம் பேசியதோடு, பல்கலைக்கழகம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளையும் ஏற்று நிறைவேற்றும் பணியில் அரசு செயல்படுகிறது. கண்டிப்பாக பிற மாநிலங்களில் முழுவீச்சுடன் தமிழ்த்துறை செயல்பட தேவையான அனைத்தையும் அரசு பார்த்துக்கொள்ளும்'' என்றார் உறுதியாக.

பல்கலைக்கழகத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், தமிழக மாணவர்களிடம் விழிப்புணர்வையும் அரசு உண்டாக்கினால் மாணவர் சேர்க்கை அதிகமாகும் என்பதே தமிழ் உணர்வாளர்கள் முன்வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது.