Published:Updated:

பறிபோகும் பதவி?... மனைவியை முதல்வராக்கும் திட்டத்தில் ஹேமந்த் சோரன்?! ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு

ஜார்க்கண்ட் அரசியல்

பறிபோகிறதா ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி... அடுத்த முதல்வர் யார்... ஜார்க்கண்ட் அரசியலில் என்ன நடக்கிறது?

பறிபோகும் பதவி?... மனைவியை முதல்வராக்கும் திட்டத்தில் ஹேமந்த் சோரன்?! ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு

பறிபோகிறதா ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி... அடுத்த முதல்வர் யார்... ஜார்க்கண்ட் அரசியலில் என்ன நடக்கிறது?

Published:Updated:
ஜார்க்கண்ட் அரசியல்

கடந்த சில மாதங்களாகவே தேசிய அரசியல் களம் பரபரப்பாகவே காணப்படுகிறது. `சி.பி.ஐ-யை வைத்து எங்களை மிரட்டிப் பார்க்கிறது பா.ஜ.க' என டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி ஒருபுறம் குரலெழுப்ப, மறுபுறம், `தேர்தல் ஆணையத்தை கைக்குள் வைத்துக்கொண்டு எங்கள் அரசைக் கவிழ்க்க நினைக்கிறது பா.ஜ.க' என்று குற்றம்சாட்டியிருக்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பதவியிலிருந்து நீக்கத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனால், மாநிலத் தலைநகர் ராஞ்சியில் அரசியல் சந்திப்புகள் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஜார்க்கண்ட்டில் நடப்பது என்ன?

2019 ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் அடங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைத்தது. ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தன. சிறிய கட்சிகளும் ஆதரவு தர, ஹேமந்த் சோரன் முதலமைச்சரானார். 25 இடங்களை வென்ற பா.ஜ.க எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ஆரம்பம் முதலே சிறு சிறு விவகாரங்களில், ஆளும் தரப்பும், எதிர்க்கட்சியும் மோதிக்கொண்டன. இந்த நிலையில், `முதல்வர் பதவியிலிருந்து ஹேமந்த் சோரன் நீக்கப்படுவார்' என்ற செய்திகள் உலவத் தொடங்கியதும், இரு தரப்புக்குமான மோதல் முற்றியது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல்?

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரித் துறையைத் தன்வசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில், தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், தன் பெயரிலேயே சுரங்கங்களை ஒதுக்கிக் கொண்டார் என்று ஹேமந்த் சோரன்மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தைத் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு சென்ற பா.ஜ.க, `மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் கீழ்வரும் பிரிவு 9-ஏ-யை மீறிவிட்டார் ஹேமந்த் சோரன். இந்த விவகாரத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கிறது. எனவே, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தது.

இதன் அடிப்படையில், ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரணையும், சோதனைகளையும் நடத்திய தேர்தல் ஆணையம், `ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யலாம்' என்ற பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தச் செய்தியை ஆளுநரோ, தேர்தல் ஆணையமோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை, ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவி பறிபோனால், அவரின் முதல்வர் பதவியும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், இந்த விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாகியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பா.ஜ.க Vs ஹேமந்த் சோரன்!

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயஸ், ``நான் இரண்டு நாள்கள் டெல்லி எய்ம்ஸில் இருக்கப்போகிறேன். ராஜ்பவனுக்குத் திரும்பிய பின்னர்தான் இது பற்றிப் பேச முடியும்'' என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களோ, ``ஹேமந்த் சோரனின் ஊழல் அம்பலமாகிவிட்டது. இனி அவராகவே பதவி விலக வேண்டும்'' என்று சொல்லிவருகிறார்கள். பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, ``சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.

ஹேமந்த் சோரன், சிபு சோரன்
ஹேமந்த் சோரன், சிபு சோரன்

ஹேமந்த் சோரன், ``தேர்தல் ஆணையம் ஒரு சீல் வைக்கப்பட்ட கவரை அனுப்பியிருக்கிறார்கள் என்பதே உண்மையான தகவல். ஆனால், பா.ஜ.க தலைவர்களும், அவர்களுக்கு ஒத்தூதும் மீடியாக்களும்தான், தேர்தல் ஆணையத்தின் அறிக்கை பற்றிக் கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலமைப்பு அதிகாரிகளையும், பொது நிறுவனங்களையும் பா.ஜ.க தலைமைதான் இயக்குகிறது. இதுபோன்ற வெட்கக்கேடான விஷயங்களை இந்திய ஜனநாயகம் இதற்கு முன்பு கண்டதில்லை'' என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை இன்று (ஆகஸ்ட் 26) கூட்டியிருக்கிறார் ஹேமந்த் சோரன். `எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க பக்கம் தாவி விடக்கூடாது; ஒருவேளை பதவி பறிபோனால் யாருக்கு முதல்வர் பதவி வழங்குவது' உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மனைவியை முதல்வராக்கும் திட்டம்?

முதல்வர் பதவி பறிபோனால், தன்னுடைய மனைவி கல்பனா சோரனை முதல்வராக்கும் திட்டத்தில் ஹேமந்த் சோரன் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதுவரை அரசியல் பக்கமே தலைகாட்டாத கல்பனா, பள்ளிக்கூடம் ஒன்றை நடத்திவருகிறார். இவரைத் தவிர, போக்குவரத்துத் துறை அமைச்சர் சம்ப்பை சோரன் (Chamapai Soren) முதல்வராக்கப்படலாம் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன.

ஹேமந்த் சோரன் - ராம்நாத் கோவிந்த் - கல்பனா சோரன்
ஹேமந்த் சோரன் - ராம்நாத் கோவிந்த் - கல்பனா சோரன்
ட்விட்டர்

`ஹேமந்த் சோரனின் பதவி பறிபோகுமா... அப்படிப் பறிபோனால், ஜார்க்கண்ட்டின் அடுத்த முதல்வர் யார்?' என்ற கேள்விகளுக்கான பதிலைப் பொறுத்திருந்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்!