Published:Updated:

``ரொம்பவும் அக்கறைதான் உங்களுக்கு!" - காஷ்மீர் பெண்மணியின் சாடலுக்குப் பின்னால்...

அவரின் உதடுகள் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தன. கண்களில் நீர். இருட்டில் நம்மை அவர் கவனிக்கவில்லைபோல.

காஷ்மீர்
காஷ்மீர்

விகடன் செய்தி ஆசிரியர் பாலகிஷன், தலைமை போட்டோகிராபர் கார்த்திகேயனுடன் காஷ்மீரின் கள நிலவரத்தை அறிய நேரில் சென்றார். அதன் அனுபவக் குறிப்பில் இருந்து... விரிவாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/2qCvbIJ

நாங்கள் அமர்ந்திருப்பது விஜயகுமாரின் வீட்டுத் தோட்டத்தில். அரசு ஒதுக்கிய பங்களா அது. மதியம் அலுவலகத்திலிருந்து அவசரமாகக் கிளம்பிச் சென்ற அவர், மாலை நேராக வீட்டுக்கு வந்துவிட்டார். ஸ்ரீநகர் சன்வார் ஏரியாவில் உள்ள சர்ச் லேன் அது. தலைமைச் செயலாளர் வீடு, கவர்னரின் ஆலோசகர்கள் வீடு, மாநிலத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் உயரதிகாரிகளின் வீடுகள், அரசு சர்கியூட் ஹவுஸ் ஆகியவை அந்த ஏரியாவில்தான் இருக்கின்றன. சோதனைகள், கெடுபிடிகளுக்குச் சொல்லவும் வேண்டுமோ! ஏரியாவுக்குள் நுழையும் முன்பே பிரதான சாலையில் வரிசைகட்டுகின்றன சோதனைச்சாவடிகள். ஒவ்வொன்றிலும் மிகக் கவனமாக சோதனையிடுகிறார்கள்.

மொத்த உடலையும் ஸ்கேன் செய்த பிறகே ஒவ்வொரு சோதனைச்சாவடியையும் கடக்க முடிகிறது. அனைத்தையும் கடந்து போனாலும், கேள்விகளால் துளைத்தனர் ராணுவத்தினர். விஜயகுமார், நமக்கு நேரம் கொடுத்திருப்பதாகச் சொன்னோம். "அவர் நேரம் கொடுத்திருக்கலாம். ஆனால், சோதனை செய்ய வேண்டியது, கேள்விகள் கேட்க வேண்டியது எங்கள் கடமை" என்றார்கள். பிறகு, வொயர்லெஸ்ஸில் விஜயகுமார் வீட்டின் பாதுகாப்பு அலுவலரிடம் பேசி சந்தேகம் களைந்த பிறகே எங்களை அனுமதித்தனர். விஜயகுமாரிடம் விரிவாகப் பேசினோம்.

சிறு தெருமுனையை பிரதானசாலையுடன் இணைக்கும் பகுதியில் நின்றிருந்தார் ஒரு பெண்மணி. நடுத்தர வயது. பதைபதைப்புடன் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

"...ஒரு மாதத்துக்கு முன்பு இங்கே வந்து ஆய்வுசெய்த மனித உரிமை மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் குழுவினர், 'செந்தூர் ஹோட்டலிலும் வீட்டுக்காவலிலும் 4,000-க்கும் மேற்பட்ட முக்கியமான பிரமுகர்கள், அரசியல் வி.ஐ.பி-க்கள் அடைத்துவைக்கப்பட்டிருக் கிறார்கள். அவர்களுக்கு நிறைய கொடுமைகள் நடக்கின்றன' என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்களே?"

''எதையும் ஆதாரத்துடன் பேச வேண்டும். சந்தேகத்தின் பேரில் நிறைய பேரை கைதுசெய்திருக்கிறோம் என்று ஆரம்பத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன். சட்டத்தை மீற மாட்டோம் என்று பத்திரத்தில் எழுதிக் கொடுத்தவர்களை விடுவித்துவிட்டோம். கடந்த 70 நாள்களில் பெரும்பாலானோர் வெளியே வந்துவிட்டார்கள். மனரீதியான தாக்குதல் இது. சைபர் வாரின் ஓர் அங்கம் இது. சைக்காலஜிக்கல் வார் எனும் உளவியல் தாக்குதல். காஷ்மீர் மக்கள் மனதில் குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தி, கலவரங்களை ஏற்படுத்துவதே இந்தத் தாக்குதலின் நோக்கம்.

செந்தூர் ஹோட்டலில் அதிகபட்சம் பத்து அல்லது பதினைந்து பேர்தான் இருப்பார்கள். அரசியல் பிரமுகர்களை வீட்டுக்காவலிலும், சட்டவிரோதமாகச் செயல்பட்டவர்களை, ஆக்ரா மற்றும் உத்தரப்பிரதேச சிறைகளிலும் வைத்திருக்கிறோம். அதேசமயம் அந்தக் குழுவினர் சொல்வதுபோல் யாருக்கும் எந்தக் கொடுமையும் நடைபெறவில்லை.

வீடு, ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருப் பவர்களை அதிக அக்கறையுடன் கவனிக்கிறோம். அவர்களின் உடல்நலத்தைப் பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. வீட்டுச் சிறையில் இருப்பவர்களையும் வாரத்தில் இரண்டு நாள் அவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கிறோம். மற்றபடி, பொத்தாம் பொதுவாக நீங்கள் கேட்பவையெல்லாம் வதந்திகள்தான். சைக்காலஜிக்கல் வார் அது. அதை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியும். இதுவும் தற்காலிகம்தான். நிலைமை, விரைவில் சீரடையும். இந்தியாவின் மற்ற மாநில மக்களைப்போல் காஷ்மீர் மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்!" என்றார் விஜயகுமார். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும்போது, வெளியே சைரன் அலறும் ஓசை கேட்டது..!

வெளியே வந்தோம். சைரன் அலறல் அருகில் கேட்டது. ஆம்புலன்ஸ் சத்தம் அது. சன்வார் ஏரியாவில் கால் பதித்தோம். அங்கு இருந்த ராணுவ வீரர் ஏற்கெனவே நம்மைப் பார்த்திருந்ததால் நட்புடன் புன்னகைத்தார். ஆம்புலன்ஸ் சத்தத்தைக் குறிப்பிட்டு, `'என்ன?'' என்று கேட்டோம். "இதெல்லாம் இங்கே சகஜம் சார். யாருக்கோ அடிப்பட்டிருக்கு. தூக்கிட்டுப் போறாங்க" என்றார். நன்றாக இருட்டிவிட்டது. மீண்டும் டாக்ஸி தேட வேண்டும். பகலிலேயே கிடைக்கவில்லை, இரவிலா கிடைக்கப்போகிறது. அப்போது கார்த்தி, "சோர்ஸ் யாருக்காவது போன் செய்தால் டாக்ஸி கிடைக்குமல்லவா?" என்று காதைக் கடித்தார். "அது ஒன்றும் பிரச்னை இல்லை. நேராக ரூமுக்குச் சென்று போர்த்திக்கொண்டு படுத்துக்கொள்ளலாம். அதற்காகவா வந்தோம். இப்படியான இரவு விசிட்களில்தான் உண்மையான களநிலவரங்களை அறிய முடியும்" என்று பேசியபடி மெதுவாக நடக்க ஆரம்பித்தோம். நான்கு தெருக்களைக் கடந்திருப்போம். மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டது.

காஷ்மீர்
காஷ்மீர்

சிறு தெருமுனையை பிரதானசாலையுடன் இணைக்கும் பகுதியில் நின்றிருந்தார் ஒரு பெண்மணி. நடுத்தர வயது. பதைபதைப்புடன் சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் உதடுகள் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தன. கண்களில் நீர். இருட்டில் நம்மை அவர் கவனிக்கவில்லைபோல. நாம் அவரை அருகில் கடக்க முற்பட்டபோது திடுக்கிட்டார். ஆங்கிலத்தில் அவரிடம், "என்ன பிரச்னை, ஏன் இங்கு தனியாக நின்று அழுகிறீர்கள்?" என்று கேட்டேன். பதில் எதுவும் சொல்லாமல் நம்மை உற்றுப் பார்த்தவரிடம், "நாங்கள் பத்திரிகையாளர்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறோம்" என்றோம். நம்ப முடியாமல் பார்த்தார்.

பிறகு திடீரென, "ஓ... தமிழ்நாட்டிலிருந்து எங்களைப் பார்க்க வந்திருக்கிறீர்களா... எங்கள்மீது ரொம்பவும் அக்கறைதான் உங்களுக்கு" என்றபோது, அவர் நம்மை சாடும்விதமாகப் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. உடையாத நல்ல ஆங்கிலம் அது. தொடர்ந்து பேசியவர், "இங்கே ஒரு ஆம்புலன்ஸ் போனதைப் பார்த்தீர்களா, எந்தப் பக்கமாகப் போனது? என் ஸ்டூடன்ட் அவன். டியூஷன் முடிந்து வெளியே வந்தான். நான் வீட்டுக்குள் இருந்தேன். வெளியே அலறல் சத்தம் கேட்கவே ஓடி வந்து பார்த்தால், மிலிட்டியன்ஸ் அவனை ஆம்புலன்ஸில் தூக்கிச் சென்றுவிட்டார்கள்" என்றார். நாம் அதிர்ச்சியுடன், "எத்தனை வயது இருக்கும் அந்தப் பையனுக்கு?" என்று கேட்டோம். "11 வயது. பெரிய டெரரிஸ்ட் ஆகும் வயதல்லவா அவனுக்கு... அதுதான் தூக்கிச் சென்றுவிட்டார்கள். ஸ்ரீநகரில் இந்த வாரத்தில் இது நான்காவது சம்பவம்" என்றார். கடும்விரக்தி வெளிப்பட்டது அவரின் வார்த்தைகளில்.

"அம்மா உங்கள் வேதனை புரிகிறது. காஷ்மீர், இரும்புத்திரை கொண்டு மூடப்பட்டுள்ளது. உண்மையில் உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியவில்லை. அதனால்தான் உயிரை பணயம்வைத்து நாங்கள் வந்திருக்கிறோம். அரசுத்தரப்பிலும் முக்கிய நபர்களிடமும் பேசினோம். அவர்கள் எங்களிடம், 'காஷ்மீர் மக்களின் பாதுகாப்புக்காகவே இவ்வளவும் செய்கிறோம். கலவரத்தில் மக்கள் பலியாவதைத் தடுக்கவே தகவல் தொடர்புகளைத் துண்டித்ததோம்' என்றெல்லாம் சொன்னார்கள்" என்று பொறுமையாக விளக்கினோம்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்தக் கணம் அவர் நம்மைப் பார்த்த பார்வையில் நம்பிக்கை தெரிந்தது. உதடுகள் துடிக்க, "உண்மையாகவே எங்களைப் பார்க்கத்தான் வந்தீர்களா, இந்த காஷ்மீரிகள் தினமும் படும் துயரத்தை உலகுக்கு அறிவிக்கத்தான் வந்தீர்களா, இந்த ஆசிரியை 74 நாள்களுக்கும்மேலாக பள்ளிக்குச் செல்லவில்லை... ஏன், என்ன பிரச்னை என்று கேட்கத்தான் வந்தீர்களா, என்னிடம் பயிலும் 300 சிறுவர்களில் ஏழு சிறுவர்கள் காணாமல்போய்விட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என விசாரித்து உலகுக்குப் பறைசாற்றத்தான் வந்தீர்களா, இன்னும் நிறைய கேள்விகள் என்னிடம் இருக்கின்றன. எனக்குள்ளே கேட்டுக் கேட்டு விடை கிடைக்காமல் இரண்டு மாதங்களாகத் தவிக்கிறேன். விடை சொல்வீர்களா... இல்லையெனில், என் இதயம் வெடித்துவிடும்" என்றபடி தழுதழுத்தார். நீல நிறக் கண்கள் அவருக்கு. கண்ணீர் அருவியாகக் கொட்டியது.

திடுமென என் கைகளைப் பற்றிக்கொண்டவர், பிரதானசாலையின் முனையிலிருந்து தெருவுக்குள் அழைத்துச் சென்றார். என் இத்தனை ஆண்டுக்கால பத்திரிகை வாழ்வில் சந்தித்திராத அனுபவம் அது. ஏதேதோ உணர்வுகள் மனதைப் பிசையத் தொடங்கின. நான் யார், அந்தப் பெண்மணி யார், நாங்கள் ஏன் இங்கே சந்திக்க வேண்டும்? > ஜூனியர் விகடன் மினி தொடரில் விரிவாக வாசிக்க > இரும்புத்திரை காஷ்மீர்! - மினி தொடர் - 5 https://www.vikatan.com/news/general-news/mini-series-about-kashmir-nov-13

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > 'ஈஸி - நியூஸி' மாதாந்திர பேக் ரூ.99 மட்டுமே. > சப்ஸ்க்ரைப் செய்ய> https://bit.ly/2KccySR |