Published:Updated:

சோனியா, ராகுலைச் சுற்றிவரும் `நேஷனல் ஹெரால்டு' வழக்கின் பின்னணி என்ன?!

சோனியா காந்தி, ராகுல் காந்தி

1937-ம் ஆண்டு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏ.ஜே.எல்) தொடங்கினார் ஜவஹர்லால் நேரு. 1938-ல் இந்த நிறுவனத்தின் சார்பில், `நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. `நேஷனல் ஹெரால்டு' வழக்கின் முழுப் பின்னணி என்ன?

சோனியா, ராகுலைச் சுற்றிவரும் `நேஷனல் ஹெரால்டு' வழக்கின் பின்னணி என்ன?!

1937-ம் ஆண்டு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏ.ஜே.எல்) தொடங்கினார் ஜவஹர்லால் நேரு. 1938-ல் இந்த நிறுவனத்தின் சார்பில், `நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. `நேஷனல் ஹெரால்டு' வழக்கின் முழுப் பின்னணி என்ன?

Published:Updated:
சோனியா காந்தி, ராகுல் காந்தி

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் ஆஜராக வெண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது தேசிய அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. சட்டவிரோதமான பணப் பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் பதியப்பட்டிருக்கும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, ஜூன் 2-ம் தேதி ராகுல் காந்தியும், ஜூன் 8-ம் தேதி சோனியா காந்தியும் ஆஜராகும்படி அமலாக்கத்துறையின் சம்மனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. `நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி என்ன?' என்பதை இந்தக் கட்டுரையில் அலசுவோம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி!

1937-ம் ஆண்டு அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏ.ஜே.எல்) தொடங்கினார் ஜவஹர்லால் நேரு. இந்த நிறுவனத்தில் 5,000-த்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பங்குதாரர்கள் ஆக்கினார்.1938-ல் ஏ.ஜே.எல் நிறுவனத்தின் சார்பில், `நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் ஊதுகுழலாக மாறியது இந்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இந்தப் பத்திரிகைக்கு ஏ.ஜே.எல் நிறுவனம் சார்பில், 90.25 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.

நேரு
நேரு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2010-ல், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை வெறும் 50 லட்சம் ரூபாய்க்கு `யங் இந்தியா' நிறுவனம் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. `யங் இந்தியா' நிறுவனத்துக்குப் பங்குகள் விற்கப்பட்டபோது ஏ.ஜே.எல் நிறுவனப் பங்குதாரர்களின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திதான் இந்த `யங் இந்தியா' நிறுவனத்தின் இயக்குநர். இந்த நிறுவனத்தின் 76 சதவிகிதப் பங்குகள் சோனியா, ராகுலிடமும், மீதமுள்ள 24 சதவிகித பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோரிடமும் இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் 2012-ம் ஆண்டு, பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக டெல்லியிலுள்ள விசாரணை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், `யங் இந்தியா நிறுவனம், ஏ.ஜே.எல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அடையும் நோக்கில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை வாங்கியிருக்கிறது. அதுவும் 90 கோடி ரூபாய்க் கடன் பெற்றிருக்கும் நிறுவனத்தை வெறும் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறது யங் இந்தியா நிறுவனம். மேலும் ஏ.ஜே.எல் நிறுவனம், நேஷனல் ஹெரால்டுக்கு வழங்கிய 90 கோடி ரூபாயானது, காங்கிரஸின் கட்சி நிதியிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது' என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

சுப்பிரமணியன் சுவாமி - நேஷனல் ஹெரால்டு வழக்கு
சுப்பிரமணியன் சுவாமி - நேஷனல் ஹெரால்டு வழக்கு

2016-ம் ஆண்டு முதல் மீண்டும் வெளியாகத் தொடங்கியது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இதற்கிடையில், ஆகஸ்ட் 2014-ம் ஆண்டு இது தொடர்பாக விசாரிக்கத் தொடங்கியது மத்திய அமலாக்கத்துறை. கடந்த ஏழு ஆண்டுகளாகப் பெரிய முன்னேற்றம் இல்லாத இந்த வழக்கு, இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில்தான், தற்போது ராகுல், சோனியா ஆகிய இருவருக்கும் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி, தான் வெளிநாட்டிலிருப்பதால் ஜூன் 5-ம் தேதிக்கு மேல் ஆஜராகத் தயார் என அமலாக்கத்துறைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். நேற்று (ஜூன் 2) சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இருந்தும், அவர் ஜூன் 8-ம் தேதி அன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவார் என்றிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

ராகுல் காந்தி, சோனியா காந்தி
ராகுல் காந்தி, சோனியா காந்தி

இந்த வழக்கு விசாரணை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ``நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை 1942-ம் ஆண்டு முடக்க முயன்றது பிரிட்டிஷ் அரசு. அதையேதான் தற்போது மோடி அரசும் செய்துவருகிறது. இதற்காக மத்திய அமலாக்கத்துறையை அரசு தவறாகப் பயன்படுத்துகிறது'' என்றார். இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ``அமைச்சரவைக்கும் இந்த விசாரணைக்கும் எந்தத் தொடர்புமில்லை. அமலாக்கத்துறை அதன் வேலையைத்தான் செய்கிறது'' என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ``ஒரு குற்றவாளி தன்னை குற்றவாளி, நேர்மையற்றவர் என்று ஏற்றுக்கொள்வதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா... இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதை நீதிமன்றம் கவனித்துவருகிறது. உங்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் நீதிமன்றத்துக்குச் சென்று எதிர்கொள்ளுங்கள்'' என்று பேசியிருக்கிறார்.

சோனியா, ராகுல் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான், இந்த வழக்கு அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism