Published:Updated:

ஃபரூக் அப்துல்லா வீட்டுச்சிறை: பொதுப் பாதுகாப்புச் சட்டம் சொல்வது என்ன?

Jammu Kashmir
Jammu Kashmir

PSA. Public Safety Act. பொதுப் பாதுகாப்புச் சட்டம். இந்தச் சட்டம் சொல்வது என்ன... இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒருவரை எத்தனை ஆண்டுகள் வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் வீட்டுக்காவலில் வைத்திருக்க முடியும்?

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நீடித்துவரும் அசாதாரணமான சூழ்நிலையின் மற்றோர் நீட்சியாக, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவின் மீது ஜம்மு - காஷ்மீர் மாநில பொதுப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருக்கிறது. PSA எனப்படும் இந்த Public Safety Act , 1978-ம் ஆண்டு ஃபரூக் அப்துல்லாவின் தந்தை ஷேக் அப்துல்லாவின் ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

Kashmir
Kashmir
AP

நாடாளுமன்ற மாநிலங்களைவை உறுப்பினரான வைகோ, காஷ்மீர் விவகாரத்தையொட்டி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஃபரூக் அப்துல்லாவை வெளிக்கொண்டுவர உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வரும் சில மணிநேரங்களுக்கு முன்பு பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஜம்மு|காஷ்மீர்|லடாக்: புவியியல் முதல் பொருளாதாரம் வரை அறியவேண்டிய வேறுபாடுகள்!

அரசுத் தரப்பில், தற்போது அவரை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான காரணமும் சரிவரத் தெரிவிக்கப்படவில்லை. இந்திய அரசு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுத்த சட்டப்பிரிவு 370-ஐ செயலிழக்கச்செய்தும், பிரிவு 35 A வை நீக்கியும் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, காஷ்மீர் மத்திய அரசின் தீவிரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இணையம், அலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, பிற மாநிலத்தவர் வெளியேற்றப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காஷ்மீரின் முக்கிய மாநிலத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு என எல்லா விதங்களிலும் காஷ்மீர் முழுக்கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

Farooq Abdullah
Farooq Abdullah

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 40 நாள்களைக் கடந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில், காஷ்மீர் மக்களின் கட்டுப்பாடுகளைத் தகர்த்தக்கோரி பல்வேறு வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த வேளையில், காஷ்மீரில் வன்முறை வெடிக்காதிருக்கவும், உயிர் பொருள் சேதங்கள் ஏற்படாமல் இருக்கவும்தான் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது எனவும், தற்போது சிறிது சிறிதாக அந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் மத்திய அரசு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஃபரூக் அப்துல்லா திடீரென பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15-ம் தேதி) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இது காஷ்மீர் அரசியலில் மீண்டும் அசாதாரண சூழலை உண்டாக்கி இருக்கிறது. தற்போது ஃபரூக் அப்துல்லா 12 நாள்களுக்குக் கைது என சொல்லப்படுகிறது. ஆனால், இரண்டு ஆண்டுகள் வரை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் காவலில் இருக்க நேரிடும்.

இந்த அறிவிப்பின்படி அவரது வீடு துணைச் சிறையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அவரால் எந்த காரணத்துக்காகவும் வீட்டை விட்டு வெளியேற முடியாது. அதேசமயம்அவரை நண்பர்களும், உறவினர்களும் காண வருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்துள்ளது.

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால், கைது செய்யப்பட்ட நான்கு வாரங்களுக்குள், ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு, அதன் முன்னர் கைதானவர் ஆஜர்படுத்தப்பட வேண்டும். கைதுக்கான காரணம் சரியென ஆலோசனைக் குழு முடிவெடுக்கும் பட்சத்தில் இரண்டாண்டுகள் வரை இந்தக் கைது நீடிக்கப்படலாம். மற்ற சட்டங்களைப் போல அல்லாமல், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், ஒரு வழக்கறிஞரை வைத்து இந்தக் கைது தவறு என வாதாட உரிமை கிடையாது. இந்தக் கைது சட்டவிரோதமானது என நிரூபித்தால் மட்டுமே கைது செய்யப்பட்டவர் தன்னுடைய தரப்பு வாதங்களை ஆலோசனைக் குழுவிடம் முன்வைக்க முடியும்.

அதேநேரம், உயர் நீதிமன்றம் தலையிட்டு மட்டுமே இந்தக் கைது தவறு எனத் தீர்ப்பளித்து ரத்து செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக மனித உரிமை அமைப்புகள் முதல், இந்தியச் சமூக அமைப்புகள் வரை இந்தச் சட்டம் மனித உரிமைக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது என்று குரல் கொடுத்துவரும் நிலையில், 40 நாள்கள் கழித்து ஒரு காஷ்மீர் தலைவர் இந்தச் சட்டத்தின் கீழ், காரணங்கள் விளக்கப்படாமல் கைது செய்யப்பட்டிருப்பது பலரின் எதிர்ப்பினை பெற்றிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு