Published:Updated:

2 ஆண்டுகள் வீட்டுச் சிறை... காஷ்மீர் தலைவர்கள்மீது பாய்ந்த பொது பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

மெஹ்பூபா - பரூக் அப்துல்லா - உமர் அப்துல்லா
மெஹ்பூபா - பரூக் அப்துல்லா - உமர் அப்துல்லா

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாரன்ட் தேவையில்லை. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய அவசியமில்லை.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவர்களில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களின் வீட்டுச் சிறை முடிந்த பிப்ரவரி 6-ம் தேதி வேறோரு சட்டம் அவர்கள் மீது பாய்ந்தது. அது பொது பாதுகாப்புச் சட்டம்.

காஷ்மீரில் பாதுகாப்பு
காஷ்மீரில் பாதுகாப்பு

இந்தச் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுபவர்களை 2 வருடத்துக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல் சிறையில் வைக்கலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாரன்ட் தேவையில்லை. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய அவசியமில்லை. தீங்கு விளைவிக்கக்கூடியவர்கள் என்று அரசால் கருதப்படுபவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீதும் பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. போலீஸ் கமிஷனர் அல்லது மாவட்ட ஆட்சியர்களே இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எடுத்துவிட முடியும்.

`சட்டவிரோதமான சட்டம்' என்று நீதித்துறையில் அழைக்கப்படும் இது போன்ற சட்டம் அயர்லாந்தில் உள்நாட்டுப் போர் நடந்த காலகட்டத்திலும் தென்னாப்ரிக்காவில் இனவெறி அரசு இருந்த காலத்திலும் அமலில் இருந்துள்ளது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவிலும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்டவர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 2019-ம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் 663 பேர் கைது செய்யப்பட்டனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஆகஸ்ட் 5-க்குப் பிறகு மட்டும் 412 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் பாதுகாப்பு
காஷ்மீரில் பாதுகாப்பு

1978-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. 2012-ம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்டவர்களைக் கைது செய்யக் கூடாது என்று மாற்றம் செய்யப்பட்டது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்ட 4 வாரங்களுக்குள் ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படும். 8 வாரங்களுக்குள் கைதானவர்கள், சரியான முகாந்திரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து இந்தக் குழு ஆராயும். சரியான முகாந்திரம் இருப்பின் 12 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வெளியே வர முடியாது. முன்னதாக 107 CRPC சட்டத்தின் கீழ் உமர் அப்துல்லா, மெகபூபா ஆகியோர் 6 மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ்... சீனாவும், உலக சுகாதார நிறுவனமும் எடுக்கத் தவறிய நடவடிக்கைகள்! #CoronaVirus

இதுகுறித்து, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுகையில், ``காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் வெறுப்பை விதைக்கும் வகையில் பேசி வந்தனர். தற்போது அவர்கள் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, காஷ்மீர் தலைவர்கள் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதோடு, அந்த மாநிலத் தலைவர்களை பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது ஜனநாய விரோதமானது. ஜனநாயகத்தின் மீதும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எள்ளி நகையாடும் விதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் உள்ளன'' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு