Published:Updated:

`ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பெயரைக்கூட இதுவரை உச்சரித்ததில்லை' - சசிகலாவின் திட்டம்தான் என்ன?

ஒருபுறம் `நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று சொல்லும் சசிகலா, மறுபுறம் `கட்சியின் பொதுச்செயலாளர் நான்தான்’ எனும் வகையில் கல்வெட்டையும் திறக்கிறார். உண்மையில் சசிகலா என்னதான் நினைக்கிறார், அவரின் அடுத்த மூவ் என்ன?

``நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்தபோதுகூட கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்துவிட்டுத்தான் நான் சென்றேன். தேர்தலின்போது நான் ஒதுங்கியிருந்தது ஏன் என்று உங்களுக்கே தெரியும். என்னால் இந்த இயக்கத்துக்கு எள் முனையளவும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அமைதியாக இருந்தேன். இப்போது சொல்கிறேன்... கழகம்தான் நம் கோயில். புரட்சித் தலைவரின் தியாகத்தாலும், அம்மாவின் அர்ப்பணிப்பாலும் வளர்ந்திருக்கும் கழகத்தை காலம் முழுவதும் காப்பாற்றவேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. இந்த நேரத்தில் நமக்குத் தேவை நம் ஒற்றுமைதான். நீர் அடித்து நீர் விலகாது. நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள்தான் நம் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டது.''

அதிமுக பொன்விழா ஆண்டுத் தொடக்கத்தையொட்டி, சென்னை ராமாபுரத்தில் நடந்த கூட்டத்தில் சசிகலா தெரிவித்த இந்தக் கருத்துகள், அதிமுக வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளன.

சசிகலா - கல்வெட்டு
சசிகலா - கல்வெட்டு

நான்காண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 16-ம் தேதியன்று சென்னை மெரினாவிலுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் சசிகலா. தொடர்ந்து, அக்டோபர் 17-ம் தேதி எம்.ஜி.ஆர் வாழ்ந்த சென்னை வீட்டில், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த சசிகலா, அ.தி.மு.க கொடியையும் ஏற்றினார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது. அதில், கொடியேற்றியவர்: திருமதி வி.கே.சசிகலா, கழகப் பொதுச்செயலாளர்' என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஒருபுறம் `நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று சொல்லும் சசிகலா, மறுபுறம் `கட்சியின் பொதுச்செயலாளர் நான்தான்’ எனும் வகையில் கல்வெட்டையும் திறக்கிறார். உண்மையில் சசிகலா என்னதான் நினைக்கிறார், அவரின் அடுத்த மூவ் என்ன?

அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம்.

``சிறையிலிருந்து வந்து முதன்முறையாக அம்மாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதிதான் வெளியில் வந்தார் சின்னம்மா. அப்போது, சட்டமன்றத் தேர்தலில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு, இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் எனப் பேசினார். தொடர்ந்து, அதிமுக-வுடன், அமமுக இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அது தோல்வியில்தான் முடிந்தது. எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. 'சசிகலாவையோ, தினகரனையோ சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை' என ஜெயக்குமார் வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களிடம் பேசினார். அன்று இரவே, அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறேன் என வெளிப்படையாகவே அறிவித்தார் சின்னம்மா. தன்னுடைய ஆதரவாளர்கள், அதிமுக-வுக்கு எதிராக வேலை செய்து கழகத்தின் வெற்றிக்குக் குறுக்கே நின்று, அதனால் தனக்கு கெட்டபெயர் வந்துவிடுமோ என்கிற காரணத்தால்தான் அப்படி அறிக்கை வெளியிட்டார்.

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

ஆனால், தேர்தலில் ஆட்சியை இழந்தது அதிமுக. அதுமட்டுமல்ல, உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதற்கு முன்பும் தேர்தல் களத்தில் பல படுதோல்விகளைச் சந்தித்த இயக்கம்தான் அதிமுக. ஆனால், தலைமைக்குக் கட்டுப்பட்டு கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. ஆனால், இப்போது எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கட்சி இப்படி நாளுக்கு நாள் வீக்காகிக்கொண்டே போவதை சின்னம்மா விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களை ரெய்டுகளிலிருந்து தற்காத்துக்கொள்வதிலும், தங்கள் மீதான வழக்குகளிலிருந்து வெளிவருவதிலுமே முனைப்பாகச் செயல்படுகிறார்களே தவிர, கட்சியைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. அதைத்தான் சின்னம்மா, 'எனக்கு நெருக்கடி வந்தபோதும்கூட ஆட்சிக் கட்டிலில் அமரவைத்துவிட்டுதான் சென்றேன்' என மறைமுகமாகச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி ஜெயக்குமார் வரை சின்னம்மாவை மிகக் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். ஆனால், சிறையிலிருந்து வெளியான நாள்முதல் இன்றுவரை அவர் எங்குமே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் பெயரைச் சொல்லி எந்த விமர்சனமும் செய்ததில்லை.

சசிகலா: ''நான்கு வருட பாரத்தை இறக்கிவைத்தேன்!'' - அவர் சொல்ல வருவது என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டி.டி.வி.தினரகன்கூட தேர்தல் நேரங்களில், 'அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும், ஆட்சிக்கு வராது' எனக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், அதிமுக குறித்து இதுவரை எதிர்மறையாக எந்த வார்த்தையையும் சின்னம்மா உதிர்த்ததில்லை. எப்படியாவது எல்லோரும் ஒன்று சேர்த்து இந்தக் கட்சியைக் காப்பாற்றிவிட வேண்டும் என்றுதான் அவர் நினைக்கிறார். நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள்தான் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டது என பா.ஜ.க., தி.மு.க இரண்டு கட்சியையும்தான் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான், பா.ஜ.க தன் இஷ்டத்துக்கு அதிமுக-வை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது, அதேபோல, சின்னம்மாவையும் எந்தவித நடவடிக்கையிலும் துணிச்சலாக இறங்கிவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறது. தேர்தல் களத்திலும் இணைந்து நின்றிருந்தால் திமுக-வுக்கு இன்னும் நெருக்கடியைக் கொடுத்திருக்கலாம் என சின்னம்மா நினைக்கிறார்.

சசிகலா
சசிகலா

கட்சி பழையபடி கட்டுக்கோப்போடு, உத்வேகத்தோடு செயல்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் கட்சியில் தனக்கான அதிகாரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதிலும் சின்னம்மா தெளிவாக இருக்கிறார். கட்சியின் நலன் மட்டுமே பிரதானம் என்றால் அமமுக-வில் உள்ள தன் ஆதரவாளர்களையெல்லாம் அதிமுக-வில் சேர்ந்து வேலை செய்யச் சொல்லிவிடுவார். ஏன், அமமுக-வையே கலைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிவிடுவார். ஆனால்,அப்படிச் செய்யாததற்குக் காரணம், கட்சியில் தன்னுடைய அதிகாரம் குறித்த எதிர்பார்ப்புதான். ஒன்று, தற்போது இருக்கும் இரட்டைத் தலைமையோடு மூன்றாவது தானும் ஓர் ஆளாக இருந்து செயல்படுவது; இல்லாவிட்டால், தான் முதன்மையாகவும் தனக்கு அடுத்த இடத்தில் தினகரன் உள்ளிட்ட தனது குடும்பத்தினர் இல்லாமல், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருப்பது என்பதையே அவர் விரும்புகிறார். மேல்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவருமே அதற்குத் தயாராக இல்லை. ஓ.பி.எஸ் ஆதரவாக இருப்பதுபோலக் காட்டிக்கொண்டாலும், கட்சியில் அதைவைத்து அரசியல் மட்டுமே செய்துவருகிறார். அதனால், கட்சியில் அதிருப்திகள் அதிகமாகி தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள் தன்னைத் தேடிவரும் வரைக்கும் பொறுத்திருக்கலாம் என்பதே சின்னம்மாவின் திட்டம்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு