Published:Updated:

`இலவச’ அரசியலில் அழுத்தம் கொடுக்கும் உச்ச நீதிமன்றம்: தமிழ்நாட்டின் பார்வை என்ன?!

தமிழ்நாடு சட்டமன்றம்

‘இலவசங்கள்’ என்று சொல்லப்படும் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் வெவ்வேறு பார்வைகள் இருக்கின்றன.

`இலவச’ அரசியலில் அழுத்தம் கொடுக்கும் உச்ச நீதிமன்றம்: தமிழ்நாட்டின் பார்வை என்ன?!

‘இலவசங்கள்’ என்று சொல்லப்படும் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் வெவ்வேறு பார்வைகள் இருக்கின்றன.

Published:Updated:
தமிழ்நாடு சட்டமன்றம்

மக்களுக்குத் தேவையான பல சமூகநலத் திட்டங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாகச் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அதற்கான மானியத்தை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கிறது. உதாரணமாக, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்கள் வழங்கப்படுவதைக் குறிப்பிடலாம். அதேபோல, காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டம் இன்றைக்கு சத்துணவுத் திட்டமாக வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது.

ரேஷன் கடை
ரேஷன் கடை

இன்றைக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவும் வழங்கப்படுகிறது. இத்தகைய சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது என்றாலும், பிற தென் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களிலும் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வறுமைக்கோட்டுக்குக் கீழே பல கோடிப் பேர் வாழும் இந்தியாவில் இத்தகைய சமூகநலத் திட்டங்கள் அவசியம் என்று கருதப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது போன்ற திட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக, பிற மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் பல ‘விலையில்லா’ திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தன. கடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், விவசாயிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம், கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எனப் பல வாக்குறுதிகளை பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். தமிழகத்தில் செயல்படும் ‘அம்மா’ உணவகங்களைப்போல, ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் ‘மா’ உணவகங்கள் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியை மம்தா பானர்ஜி அளித்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், 18 வயதைக் கடந்த பெண்களுக்கு 1,000 ரூபாய் நிதியுதவி, முதியோர் ஓய்வூதியம் 2,500 ரூபாயாக உயர்வு போன்ற வாக்குறுதிகளை பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வழங்கியது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில், ‘அரசியல் கட்சிகள் போட்டி போட்டு இலவசத் திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் அதிகரித்துவருகிறது’ என்கிற கருத்துருவாக்கத்தை சிலர் ஏற்படுத்தினர். தற்போது, `இலவசத் திட்டங்களால் நாட்டில் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும்’ என்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அவர்கள், இலவசத் திட்டங்கள் தொடர்பான தங்கள் கருத்துகளை பிரதமரிடம் கூறினர். அப்போது, “இலவசத் திட்டங்களால், இலங்கையைப் போன்ற ஒரு பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்கும்” என்று அவர்கள் பிரதமரிடம் குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய 15-வது நிதி ஆணையத் தலைவரான என்.கே.சிங், ``இலவசத் திட்டங்கள், நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்குப் பாதகங்களை உண்டாக்கும். வாக்காளர்களுக்கு இலவசங்கள் கொடுப்பது, இந்தியாவில் நிதிப் பேரிடரை ஏற்படுத்தும்” என்றார்.

தற்போது, இலவசங்களால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். சமீபத்தில் பானிப்பட்டில் நடைபெற்ற ஓர் அரசு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் தருவதாக அறிவிக்கலாம். இந்த மாதிரி இலவச திட்டங்களை அறிவிப்பதால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றிவிடும். அரசியல் சுயநலத்துக்காகக் குறுக்குவழிகளைப் பின்பற்றுபவர்கள் சில நேரங்களில் கைதட்டல் மற்றும் அரசியல் ஆதாயங்களைப் பெறலாமே தவிர பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியாது” என்ற கருத்தை முன்வைத்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இதற்கிடையில், தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்கு தடைவிதிக்க வேண்டுமென்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, ``இலவசங்கள் வழங்குவதன் நன்மை தீமைகள் குறித்து ஆய்வுசெய்ய நிபுணர்குழு ஒன்றை அமைக்கலாம். அதில் மத்திய அரசு, மாநில அரசுகள், அனைத்து அரசியல் கட்சிகள், நிதி ஆணையம், நிதி ஆயோக், தேர்தல் ஆணையம் உள்ளிட்டோர் இடம்பெறலாம்” என்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தெரிவித்தது.

சமூகநீதி, சமூகநலன் ஆகிய பார்வைகளே இல்லாமல், ‘இலவசங்களே தவறு’ என்று பொத்தாம் பொதுவாக சிலர் விமர்சிக்கும் போக்கு நிலவுகிறது. இந்த நிலையில், இலவசங்கள் வேறு... சமூகநலத் திட்டங்கள் வேறு என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நிலையில், சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது பற்றிப் பேசியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

“இப்போது இலவசங்கள் பற்றி நாட்டில் பெரும் விவாதமே நடந்துகொண்டிருக்கிறது. கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்காக செலவு செய்வது இலவசம் கிடையாது. இது தொடர்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் இலவச திட்டங்கள் அல்ல. சமூகநீதித் திட்டங்கள். இலவசங்கள் கூடாது என்று புதிதாக அறிவுரை கூறுவதற்கு சிலர் வந்திருக்கிறார்கள். அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. இதற்கு மேல் பேசினால் அரசியல் ஆகிவிடும். அதனால் இதற்குமேல் பேச விரும்பவில்லை” என்று ஸ்டாலின் கூறினார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் பார்வையும், முதல்வர் ஸ்டாலினின் பார்வையும் முற்றிலும் வேறுபட்டவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.