Published:Updated:

`ஆதாரமின்றி பேசுகிறாரா அண்ணாமலை..?!' - குற்றச்சாட்டும் பின்னணியும்!

அண்ணாமலை

``ஒரு மனிதனை எப்படியாவது தரம் தாழ்த்த வேண்டும் என்று சொன்னால், அந்த மனிதன்மீது பாலியல் புகார் சுமத்துவது என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வழக்கம்” - நாராயணன் திருப்பதி

`ஆதாரமின்றி பேசுகிறாரா அண்ணாமலை..?!' - குற்றச்சாட்டும் பின்னணியும்!

``ஒரு மனிதனை எப்படியாவது தரம் தாழ்த்த வேண்டும் என்று சொன்னால், அந்த மனிதன்மீது பாலியல் புகார் சுமத்துவது என்பது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வழக்கம்” - நாராயணன் திருப்பதி

Published:Updated:
அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசிய முறையும், செய்தியாளர்களை எதிர்கொண்ட முறையும், பிறகு அறைக்கு அழைத்து நடந்துகொண்ட முறையும் சரியா...? என்கிற விவாதம் ஊடகங்கள், அரசியல் கட்சிகள், அரசியல் நோக்கர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ‘செய்தியாளர்கள் ஒரு முன்முடிவுடனே கேட்கிறார்கள். கட்சிகள், காட்சி ஊடகங்கள் தொடங்கி தங்கள் விருப்பங்களுக்கு நடத்துகின்றன’ என்பது அண்ணாமலையின் வாதமாக இருக்கிறது. மற்றொருபுறம் ‘தொடர்ந்து ஊடகத்தினரை மிரட்டுவது, அவமானப்படுத்துவது அண்ணாமலையின் வாடிக்கையாக இருக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்பது ஊடகத் தரப்பினரின் வாதம்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

இவ்வாறான வாத, பிரதிவாதங்களின் நடுவே பா.ஜ.க கட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று சமீபத்தில் அந்தக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார் காயத்ரி ரகுராம். அதோடு தமிழக பா.ஜ.க-வைச் சுற்றி ‘ஹனிடிராப்’ என்கிற சொல்லாடலும் சுழற்றி அடித்துக்கொண்டிருக்கிறது.

அதாவது, “அண்ணாமலை தனக்கு எதிராக யாருமே பேசக் கூடாது; யாரும் வளர்ந்துவிடக் கூடாது என நினைக்கிறார். அப்படி யாராவது வளர்கிறார்கள் எனத் தெரிந்தால் உடனடியாக அவர்களை எப்படியாவது காலிசெய்ய வேண்டும் எனத் திட்டமிடுகிறார். அதற்கு அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் பாலியல் புகார்கள். பா.ஜ.க நிர்வாகிகள்மீது வைக்கப்படும் அனைத்துப் பாலியல் புகார்களிலும் ஏதாவது ஒரு வகையில் அண்ணாமலையின் பெயர் அடிபடுகிறது. ஆனால், இதுவரை அவர் அதை எந்த இடத்திலும் மறுக்கவில்லை. அண்ணாமலை தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பார் என நினைத்த தலைமைக்கு பாலியல் அவதூறுகள் மூலம் சொந்தக் கட்சியினரையே காலி செய்கிறார் என்ற புகார் பல்வேறு தரப்பிலிருந்து சென்றிருக்கிறது” என்கிற பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் சிலர், கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகிய விஷயங்கள் குறித்தும் சில விஷயங்களைப் பகிர்ந்தனர்.

``தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலைதான் 2026-ம் ஆண்டு தேர்தல் வரை தொடரப் போகிறார். இவ்வளவு நடந்த பிறகும் அண்ணாமலையை எதிர்த்து கட்சியில் இருந்தபடியே காயத்ரியால் அரசியல் செய்ய முடியாது என்பது அவருக்கும் நல்லாவே தெரியும். அதோடு தொடர்ந்து காயத்ரி, அண்ணாமலை குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பதிவிட்டு வருதால் அதற்குப் பதிலடி தரும் வகையில், அடையார் ஐ.டி-விங்கும் காயத்ரிக்கு எதிராகவும், அவரின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படும் அளவிலும் பதிவிட்டுவருகிறார்கள். இதில் உச்சக்கட்ட மன வேதனை அடைந்து இந்த முடிவெடுத்திருக்கிறார்.

தன்னை அடுத்தநாள் கட்சியிலிருந்து நீக்கும் முடிவு, முக்கிய நிர்வாகி ஒருவர் மூலமாகத் தெரிந்த பின்னரே காயத்ரி இரவு இரண்டு மணிக்கு தான் விலகுவதாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். காயத்ரி ஒன்றே ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். தனக்குப் பிடித்தது எல்லாம் கட்சியில் நடக்க வேண்டும் என்றால் கட்சியில் இருக்க முடியாது. கட்சியின் சூழலுக்குத் தன்னை மாற்றிக்கொண்டு, அங்கு உண்மையாக உழைப்பவர்கள்தான் நிர்வாகி. அது இல்லையென்றால் எப்படி” என்கிறார்கள்.

இவ்வாறாக நாலப்பக்கமும் தமிழக பா.ஜ.க-வில் சர்ச்சைகளும், அக்கட்சியின் தலைவர் மீதான தொடர் குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கும் நிலையில், சில கேள்விகளோடு பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியை போனில் தொடர்புகொண்டோம்.

``’தமிழக பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்கிற காட்டமான குற்றச்சாட்டை காயத்ரி ரகுராம் வைத்திருக்கிறாரே?”

``கட்சியில் இருக்கும்வரை பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கிறது என்று சொன்னார்கள். கட்சியைவிட்டு வெளியே வந்ததும் இது போல் சொல்வது அவரின் சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறது. இதை வெறும் மலிவான அரசியல் குற்றச்சாட்டாகத்தான் பார்த்து கடந்துசெல்ல வேண்டும். இந்த மாதிரியான குற்றச்சாட்டுக்களைப் புறம்தள்ளுவதுதான் சரியானதாக இருக்கும்.”

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

“புறம் தள்ளுவதுதான் சரியானதாக இருக்கும் என்றால் எப்படி... அண்ணாமலை வந்த பிறகுதான் கட்சியில் ஆடியோ, வீடியோ, ஹனிடிராப் என வரிசைக்கட்டுகிறது என்கிற குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அவர் ஏதும் பதில் கூறாமல் இருக்கிறாரே?”

``ஒரு மனிதனை எப்படியாவது தரம் தாழ்த்த வேண்டும் என்று சொன்னால், அந்த மனிதன் மீது பாலியல் புகார் சுமத்துவது என்பது உலகம் முழுவதும் இருக்கக் கூடிய வழக்கம். அப்படி பா.ஜ.க கட்சியின்மீது தேவையற்ற அடிப்படை ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுகளை வைப்பது என்பது, பா.ஜ.க-வின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்கமுடியாதவர்களின் புலம்பலாகத்தான் பார்க்க முடியும்.”

அமித் ஷா
அமித் ஷா

``ஆனால், அப்படி புலம்புகிறவர்கள் கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகள்தானே?”

``அப்படி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதற்கான ஆதாரம் என்ன... அடிப்படை ஆதாரமற்று, அண்ணாமலையின் வளர்ச்சியைத் தாங்கமுடியாதவர்கள், இதுபோல் கிளப்புகிறார்கள் என்பதுதான் உண்மை.”

``அண்ணாமலை மீதும், ஆதாரமின்றி குற்றச்சாட்டு வைக்கிறார் என்கிற விமர்சனம் இருக்கத்தானே செய்கிறது? ஆதாரங்கள் சரியானதாக இருந்தால் நேரடியாகப் பத்திரிகையளர் சந்திப்பில் வெளியிட்டு அம்பலப்படுத்தலாமே... எதற்காக இந்த மோதல் போக்கு?”

“சரியான ஆதாரங்கள் இருக்கின்றன. அதை வெளியிடுவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் நானும் உடனிருந்தேன். ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி, `ஆதாரத்தைக் கொடுங்கள்’ என்று சொன்னது. நாங்களும் அதைக் கொடுத்து மக்களிடம் விளக்குவதற்குத் தயாராக இருந்தோம். ஆனால், அந்தத் தொலைக்காட்சி ஆதாரத்தை வெளியிட முடியாது என்று சொல்லிவிட்டார்களே. முடியுமா... முடியுமா... என்று அவர்கள் கேட்கும்போது, நாங்கள் முடியும் என்று சொல்லும்போது நீங்கள் ஏன் முடியாது என்கிறீர்கள்.

அதேநேரத்தில் செய்தியாளர்கள் நாங்கள் கேட்பதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கிற ரீதியில் பேசுவது தவறானது. ஒருசில விஷயங்களை. ‘நான் பேச விரும்பவில்லை’ என்று சொன்னால் , அந்த விவகாரத்தை வற்புறுத்துவது என்பது நாகரிகமான போக்கு அல்ல. சில பத்திரிகையாளர்கள் தங்கள் உரிமைகளை, கடமைகளை மீறி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.”

அண்ணாமலை
அண்ணாமலை

“அரசு மேல் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் இருந்தால் அதை பா.ஜ.க-வே நேரடியாக காவல்துறையிலோ அல்லது நீதிமன்றத்திலோ வைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது... ஒருவேளை இப்படிச் சொல்லி சொல்லி மிரட்டல் அரசியல் செய்து வருகிறீர்களா?”

“அரசின் செயல்பாடுகளை, நிர்வாகத்தைக் குற்றம் சொல்வது மிரட்டுவது என்று சொன்னால், இன்று பா.ஜ.க மீது எவ்வளவு மிரட்டல்கள் விடுத்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பா.ஜ.க ஆதாரமற்ற எதையும் சொல்லாது, இதுவரை அப்படி ஏதுமே சொன்னதில்லை. இந்த அரசு செய்த ஊழல்கள் குறித்து அறிக்கை கொடுத்திருக்கிறோம். சில விஷயங்களில் அரசாங்கம் அதை உணர்ந்து தங்கள் தவற்றை திருத்திக்கொண்டிருக்கிறது. சில விஷயங்களில் எப்போது, எந்த நேரத்துக்கு நீதிமன்றம் செல்ல வேண்டுமோ அந்த நேரத்தில் உறுதியான நடவடிக்கை எடுப்போம்” என்றார்.