Published:Updated:

அதிமுக: கலைக்கப்படும் பழைய பதவிகள்... இனி தலைவர், செயல் தலைவர்?! - பொதுக்குழு தாமதத்தின் பின்னணி

பன்னீர் - எடப்பாடி

அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் மே 15-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. பொதுக்குழுவுக்கு தலைவர்களை வரவேற்கும் கார்டுகளை சமூக வலைதளங்களில் நிர்வாகிகள் பகிர்ந்திருந்தனர்.

அதிமுக: கலைக்கப்படும் பழைய பதவிகள்... இனி தலைவர், செயல் தலைவர்?! - பொதுக்குழு தாமதத்தின் பின்னணி

அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம் மே 15-ம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகின. பொதுக்குழுவுக்கு தலைவர்களை வரவேற்கும் கார்டுகளை சமூக வலைதளங்களில் நிர்வாகிகள் பகிர்ந்திருந்தனர்.

Published:Updated:
பன்னீர் - எடப்பாடி

`அதிமுக பொதுக்குழுக் கூட்டம் மே 15-ம் தேதி நடைபெறும்’ என அந்தக் கட்சி வட்டாரத்தில் சொல்லப்பட்டுவந்த நிலையில், அது ஜூன் மாத இறுதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கட்சியில் ஏற்கெனவே இருக்கும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளைக் கலைத்துவிட்டு, புதிய பொறுப்புகளைக் கொண்டுவரவிருப்பதாலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதிமுக செயற்குழு
அதிமுக செயற்குழு

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், இரண்டு முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் கடந்த 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி அதிமுக-வின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் விதிகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டதோடு, தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வுசெய்யப்பட்டார். அதிமுக-வில் அவைத்தலைவர் தலைமையில்தான் பொதுக்குழுக் கூட்டம் நடக்கும். அவரது கையெழுத்திட்டே பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அழைப்பிதழ், அது தொடர்பான அறிக்கைகள் வெளியாகும். பொதுக்குழு விரைவில் நடைபெறவிருப்பதாலேயே அவைத்தலைவர் அறிவிக்கப்பட்டதாகக் கட்சி வட்டாரத்தில் அப்போது சொல்லப்பட்டது. ஆனால், உனடியாகப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், அதிமுக-வின் வட்டம் முதல் மாவட்டம் வரையிலான நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல் கடந்த ஏப்ரல் 25-ம் தேதியோடு முடிவடைந்தது. தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அளவிலான நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். அணிகளுக்கான நிர்வாகிகள், மாநில செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட நியமனப் பொறுப்புகளுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதைத் தொடர்ந்து கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மே 15-ம் தேதி நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகின. பொதுக்குழுவுக்குத் தலைவர்களை வரவேற்கும் கார்டுகளை சமூக வலைதளங்களில் நிர்வாகிகள் பகிர்ந்திருந்தனர். கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் மாத இறுதியில்தான் நடைபெறும் என அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்,

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
’எம்.ஜி.ஆர் மாளிகை’
அ.தி.மு.க தலைமை அலுவலகம் ’எம்.ஜி.ஆர் மாளிகை’

``கட்சித் தலைமைக் கழகத்திலிருந்து மே 15-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருப்பதாக எங்களுக்குத் தகவல் சொல்லப்பட்டது. ஆனால், கட்சியின் பை-லாவில் சில மாற்றங்கள் செய்யவிருப்பதாகச் சொல்லப்படுகிறது, அதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதால் தாமதமாகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை எடுத்துவிட்டு, தலைவர், செயல் தலைவர் ஆகிய பொறுப்புகளைக்கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதிமுக போன்ற மக்கள் ஆதரவுள்ள பெரிய கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பொறுப்புகள் சரியாக இல்லை என சில சீனியர்கள் சொன்னதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அந்தவகையில், ஓ.பி.எஸ் தலைவராகவும், எடப்பாடி பழனிசாமி செயல் தலைவராகவும் இருப்பார்கள். அதேபோல, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட 10 பேர் உறுப்பினர்களாக இருக்கும் வழிகாட்டுதல் குழுவைக் கலைத்துவிட்டு, 20 பேரை உறுப்பினர்களாகக்கொண்ட புதிய உயர்மட்டக்குழு அமைக்கப்படவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, பொன்னையன், வேலுமணி, தங்கமணி, செம்மலை, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், இசக்கி சுப்பையா, ஆர்.காமராஜ், செங்கோட்டையன், கே.சி.வீரமணி, மனோஜ் பாண்டியன், நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், கோகுல இந்திரா, தனபால் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அதில் அடிபடுகின்றன. ஒவ்வொரு முறையும் எம்.எல்.ஏ-க்களையும், மாவட்டச் செயலாளர்களையுமே அழைக்காமல், உயர்மட்டக் குழுவே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவிருப்பதாகச் சொல்லப்படுகிறது'' என்றவர்கள் மேலும் சில தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

அதிமுக
அதிமுக

``நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டேவரும் கட்சிக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டுமென்றால், கீழ்மட்ட அளவில் வேலைகளை முடுக்கிவிட வேண்டும். அதை விட்டுவிட்டு ஒவ்வொரு முறையும் டைட்டில் மாற்றும் வேலைகளை மட்டும் செய்துவருகின்றனர். ஏற்கெனவே தொடங்கப்பட்ட வழிகாட்டுதல் குழு எந்த வழிகாட்டுதலையும் கட்சிக்கு வழங்கவில்லை. இந்த உயர்மட்டக் குழு மட்டும் என்ன செய்யப்போகிறது. அதுமட்டுமல்ல, ஏற்கெனவே, அமைச்சர்களாக, தற்போது எம்.எல்.ஏ-க்களாக, மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்களே மீண்டும் மீண்டும் கட்சிப் பொறுப்புக்கு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கட்சிக்காக எந்த வேலையையும் செய்வதில்லை. ஆனால், ஏதாவது பதவி என்றால் மட்டும் போட்டி போட்டுக்கொண்டு வந்துவிடுகின்றனர். ஏறக்குறைய காங்கிரஸ் கட்சியைப்போலாகிவிட்டது அதிமுக. கீழ்மட்ட அளவில் உள்ள நிர்வாகிகளை, தொண்டர்களை உற்சாகப்படுத்தும் செயல்திட்டங்கள் இவர்களிடம் எதுவுமே இல்லை.

ராஜ்ய சபா சீட்டைக்கூட புதியவர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். ஏற்கெனவே பதவியில் இருந்தவர்களுக்கு, கட்சிப் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் கொடுப்பார்கள். அதற்கான கூட்டம் இன்னும் இரண்டு நாள்களில் நடக்கவிருக்கிறது. கட்சியில் தலைமைக் கழகக் கூட்டம்கூட ஏதாவது பதவிகளுக்காகத்தான் நடைபெறுகிறதே தவிர கட்சியின் நலனுக்காக நடைபெறுவதில்லை. இந்த நிலை மாறாமல், தோல்விப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் அதிமுக-வை மீட்க வழியில்லை'' என்கிறார்கள் வேதனையோடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism