Published:Updated:

ஸ்கெட்ச் அண்ணாமலைக்கா, அதிமுக-வுக்கா? - நயினார் நாகேந்திரன் விமர்சனத்தின் பின்னணி என்ன?!

அண்ணாமலை - நயினார் நாகேந்திரன்

``நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சை, அ.தி.மு.க-வுக்கு எதிரான அஸ்திரமாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், இதில் உண்மையிலேயே தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வேலைகளும் இருக்கின்றன'' என அதிரவைக்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில்.

ஸ்கெட்ச் அண்ணாமலைக்கா, அதிமுக-வுக்கா? - நயினார் நாகேந்திரன் விமர்சனத்தின் பின்னணி என்ன?!

``நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சை, அ.தி.மு.க-வுக்கு எதிரான அஸ்திரமாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், இதில் உண்மையிலேயே தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வேலைகளும் இருக்கின்றன'' என அதிரவைக்கிறார்கள் பா.ஜ.க வட்டாரத்தில்.

Published:Updated:
அண்ணாமலை - நயினார் நாகேந்திரன்

2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி இப்போதுவரை அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தாலும், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி, அவர்களைச் சீண்டிப் பார்ப்பது தமிழக பா.ஜ.க-வினரின் வழக்கமாக இருக்கிறது. கடந்தகாலங்களில் எல்.முருகன், சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி பலரும் அ.தி.மு.க-வை உசுப்பேற்றும்விதத்தில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்த நிலையில், இப்போது அந்த இடத்தைப் பிடித்திருக்கிறார், சட்டமன்ற பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன். ஆனால்,``நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சை, அ.தி.மு.க-வுக்கு எதிரான அஸ்திரமாகத்தான் பலரும் பார்க்கிறார்கள். ஆனால், இதில் உண்மையிலேயே தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வேலைகளும் இருக்கின்றன'' என அதிரவைக்கிறது கமலாலய வட்டாரம்.

பா.ஜ.க போராட்டம்
பா.ஜ.க போராட்டம்

அரியலூர் மாணவி தற்கொலை குறித்து சி.பி.ஐ விசாரணை கோரியும், அவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கோரியும் தமிழக பா.ஜ.க-வின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சட்டமன்ற பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், ``சட்டமன்றத்தில் ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அ.தி.மு.க-வைப் பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்படவில்லை. சட்டமன்றத்தில் பேசாமல் இருந்தாலும், ஓர் எதிர்க்கட்சியாக பா.ஜ.க திறம்பட செயல்படுகிறது" என்று கூறினார். அவரின் பேச்சு அ.தி.மு.க-வினரைக் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. அதையடுத்து, உடனடியாக அ.தி.மு.க தரப்பிலிருந்து எதிர்வினை கிளம்பியது.

அடுத்த நாள், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியது தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது. பல இக்கட்டான சூழ்நிலைகளில் பா.ஜ.க-வுக்கு அதிமுக துணை நின்றுள்ளது... அ.தி.மு.க - பா.ஜ.க உறவு ஓர் இயற்கையான உறவு. இரு கட்சிகளுக்கிடையிலான அரசியல் உறவு சுமுகமாக இருக்கிறது. அந்த உறவில் எந்தப் பதற்றமும் இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.''
அண்ணாமலை

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தவிர நயினார் நாகேந்திரனும், ``என்னுடைய கருத்து தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது'' என விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் தொடர்ந்தும் அ.தி.மு.க தரப்பிலிருந்து கடுமையான எதிர்வினைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ``கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். குட்டியைவிட்டு ஆழம் பார்க்கும் வேலையை பா.ஜ.க இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரம் குறித்து கொதிப்புடன் பேசியிருந்தார். ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை மனதில்வைத்து பா.ஜ.க அரசியல் காய்களை நகர்த்திவருகிறது. அதற்கான முன்னோட்டம்தான் நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு" என தமிழக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், ``பா.ஜ.க-வுக்குள்ளேயே நடக்கும் பனிப்போரின் வெளிப்பாடுதான் நயினாரின் இந்தப் பேச்சு'' என நம்மிடம் பேசிய பா.ஜ.க முன்னணி நிர்வாகி ஒருவர், அது குறித்து விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

நயினார் நாகேந்திரன், பொன்னார்
நயினார் நாகேந்திரன், பொன்னார்

``சமீபத்தில் சென்னையில் எங்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றியும் பேசப்பட்டது. அப்போது, மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும், நயினார் நாகேந்திரனும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லாமல் தனித்துத் தேர்தலைச் சந்திப்பது குறித்துப் பேசினர். அதற்கு அவர்கள் அரசியல்ரீதியாகச் சில காரணங்களையும் அடுக்கினர். ஆனால், அவர்கள் அங்கு பேசாத அரசியல் கணக்குகளும் இருக்கின்றன. திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மூன்றுமுனைப் போட்டி இருந்தால் மட்டுமே தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என இருவருமே விரும்புகின்றனர். அவர்கள் இருவருக்கும் இடையில் சில கசப்புகள் இருந்தாலும், இந்த விஷயத்தில் ஒற்றுமையாகச் செயல்பட்டனர். காரணம், தமிழகத்தின் மற்ற பகுதிகளைவிட, தங்களின் மாவட்டத்தில் அதிக இடங்களில் வென்று டெல்லி தலைமைக்கு தங்களின் செல்வாக்கை நிரூபிக்க நினைத்தனர். ஆனால், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகமும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுமட்டுமல்ல, சமீபத்தில் திருநெல்வேலியில் பா.ஜ.க மாவட்டத் தலைமை அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்ட பதாகையில் நயினார் நாகேந்திரனின் புகைப்படம் இடம்பெறவில்லை. அதனால், அண்ணாமலையுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் நயினார் நாகேந்திரன். எல்.முருகன் மத்திய அமைச்சரான பிறகு தலைவர் பதவி தனக்குத்தான் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தார் நயினார். ஆனால், அது கிடைக்காமல் போனபோதே கடுமையான ஏமாற்றமடைந்தார். தொடர்ந்து, அவரைப் புறக்கணிக்கும் விதத்தில் சில சம்பவங்கள் கட்சிக்குள் நடக்கவும், எப்படியாவது அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என நினைத்தார். அதனால்தான், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படியொரு குண்டைத் தூக்கிப்போட்டு கூட்டணியைப் பதம்பார்க்க நினைத்துவிட்டார். கடந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, திருநெல்வேலியில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன்,

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

`அ.தி.மு.க என்பது ஒரு காட்டாற்று வெள்ளம். வெள்ளம் அதிகமாக வரும்போது சற்று வழுக்கி ஓடும். அதைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை. அதற்காக அ.தி.மு.க-வுக்கு எந்தக் குறையும் வராது' என உணர்ச்சி பொங்கப் பேசினார். இப்போது, அவரே அ.தி.மு.க-வை விமர்சித்துப் பேசுவதை அந்தக் கட்சிக்கு எதிரான விமர்சனமாகப் பார்ப்பதைவிட, அண்ணாமலைக்கு எதிரான ஸ்கெட்சாகத்தான் நாம் பார்க்க வேண்டும். ஆனால், நயினாரின் இந்த எரிகணையை மிகச் சாதுர்யமாகக் கையாண்டிருக்கிறார் அண்ணாமலை. வழக்கமாக, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் ஏதாவது பிரச்னை வந்தால், அதைக் காதோடு காதாகப் பேசிச் சரிசெய்வதுதான் பா.ஜ.க தலைவர்களின் வழக்கம். ஆனால், முதன்முறையாக வெளிப்படையாக, வருத்தம் தெரிவித்து, எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதையும் வெளிப்படையாகச் சொன்னதன் மூலம் நயினாரை டெல்லி தலைமைக்கு எப்படி அடையாளப்படுத்த நினைத்தாரோ அதைச் செய்துவிட்டார்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்

இதுவரை, ஓ.பி.எஸ்-ஸுக்கு மட்டுமே நெருக்கமாக, ஆதரவாக இருந்துவந்தார் அண்ணாமலை. இந்தச் சம்பவத்தின் மூலம் எடப்பாடியையும் சமாதானப்படுத்தி அவருடனும் நெருங்கிவிட்டார். ஆக மொத்தத்தில், பா.ஜ.க - அ.தி.மு.க- வுக்கு இடையிலான ஒரு விவகாரம் அல்ல இது. அ.தி.மு.க-வைப் பகடையாகப் பயன்படுத்தி, பா.ஜ.க-வுக்குள்ளேயே நடந்த யுத்தம்'' என்றார் அவர். ஆனால், வேறு சிலரோ, `` தலைமையின் அனுமதியோ, ஆதரவோ இல்லாமல் நயினார் இப்படிப் பேசியிருப்பதற்கு வாய்ப்பே இல்லை. கண்டிப்பாக இது அ.தி.மு.க-வுக்கு எதிரான ஸ்கெட்ச்தான்'' என அடித்துச் சொல்கின்றனர்.

எது உண்மை என்று இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும். ஆகமொத்தம், தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் இன்னும் சூடாகும் என்பது மட்டும் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism