Published:Updated:

'தனியாகக் கத்தட்டும்'... தே.மு.தி.கவை அ.தி.மு.க கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின்னணி?#TNElection2021

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி
பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி

''எங்களால், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடியும். நாங்கள் அதற்குத் தயாராகவே இருக்கிறோம்'' எனத் தொடர்ந்து பேசிவருகிறார் பிரேமலதா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''இதுவரை நம்மை வைத்து ஆட்சி அமைத்தவர்கள் எல்லாம் நம்மை மதிக்க மறுக்கிறார்கள். கேப்டன் கை காட்டுபவர்தான் இதுவரை முதல்வராகியுள்ளார்கள். இனியும் கேப்டன் சொல்பவர்தான் முதல்வராக முடியும் என்பதுதான் உண்மை. இதை ஆண்ட கட்சிகள் மறுக்க முடியாது. விரைவில் கேப்டனைத் தேடி வருவார்கள். எனக்கு அரசியலில் பிடிக்காத விஷயம் தேர்தலில் கூட்டணி அமைப்பது. நமக்கு தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதியதில்லை''

தே.மு.தி.க பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த், அ.தி.மு.கவில் இருந்து இன்னும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை என்கிற கோபத்தில், பேசிய வார்த்தைகள் இவை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

ஏற்கெனவே, ''நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில்தான் இன்னும் தொடர்கிறோம். ஆனால், கூட்டணிக்குத் தலைமை வகிப்பவர்கள், கூட்டணிப் பேச்சுவார்த்தையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக தொடங்கவேண்டும்'' எனவும் எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பேசியிருந்தார் பிரேமலதா. ஆனால், அ.தி.மு.க தரப்பில் இருந்து தொடர்ந்து எந்தவித ரியாக்‌ஷனும் இல்லாமலேயே இருக்கிறது. அதனால்தான், ''எங்களால், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடியும். நாங்கள் அதற்குத் தயாராகவே இருக்கிறோம்'' எனப் பேசிவருகிறார் பிரேமலதா.

தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்டு சந்தித்த முதல் இரண்டு தேர்தல்களில், தனியாகப் போட்டியிட்டபோதும் அந்தக் கட்சிக்கு பத்து சதவிகித வாக்குகள் வரை கிடைத்தன. முதன்முறை, 2011 தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சிக்கு 29 சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தும் கிடைத்தது. அதன் பிறகு, 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அந்தக் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வாக்குவங்கியும் ஐந்து சதவிகிதமாகக் குறைந்தது. தொடர்ந்து, 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரானார் விஜயகாந்த். ஆனால், போட்டியிட்ட, 104 தொகுதிகளில் 103 தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு டெபாஸிட்கூட கிடைக்கவில்லை.

விஜயகாந்த்
விஜயகாந்த்

முதல் தேர்தலிலேயே வென்று சட்டமன்ற உறுப்பினரான விஜயகாந்த், மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அந்தக் கட்சியின் வாக்குவங்கியும் 2.3 சதவிகிதமானது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வாக்குவங்கியும் 2.2 சதவிகிதம்தான். இந்தநிலையில்தான், தனித்துப் போட்டியிடுவோம், கேப்டனை முதல்வராக்குவோம் எனப் பேசிவருகிறார் பிரேமலதா. கட்சியின் வாக்கு வங்கியைத் தாண்டி, ஆரம்பகாலத்தில் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பல நிர்வாகிகள் இப்போது அந்தக் கட்சியிலேயே இல்லை. தவிர, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க, அ.தி.மு.க (பியூஷ் கோயல்) என இரண்டு பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தியது பொதுவெளியில் வெட்ட வெளிச்சமானது. பிறகு, அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தது, தேர்தலுக்குப் பிறகும் அதே கூட்டணியில்தான் தொடர்ந்து வந்தது தே.மு.தி.க.

இந்தநிலையில், தற்போது அந்தக் கட்சியை அ.தி.மு.க புறக்கணிக்கக் காரணம் என்ன?...பா.ம.க நிறுவனர் ராமதாஸுடன் தொடர்ந்து அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திவரும்போது, தே.மு.தி.கவை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம்,

''சசிகலா இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவியே கிடைத்திருக்காது. சசிகலா இல்லாவிட்டால் எந்த அமைச்சரும் வசதியாக வாழ்ந்திருக்க முடியாது. சசிகலாவால் வாழ்வு பெற்றவர்கள் அந்த நன்றியை மறந்துவிட்டார்கள் என்றெல்லாம் பிரேமலதா பேசுகிறார். அவருக்கு இதெல்லாம் தேவையில்லாத ஒன்று. அதுமட்டுமல்ல, 'சசிகலா ஒரு பெண், அந்தவகையில் அவரைத் தொடர்ந்து ஆதரிப்பேன்' என்று பேசுகிறார். எங்கள் கூட்டணியில் இருந்துகொண்டு, எங்கள் கட்சிக்கு எதிராகச் செயல்படும் ஒரு நபருக்கு ஆதரவாக பிரேமலதா பேசுவதை எப்படி ஏற்க முடியும். அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் அங்கம் வகித்த கட்சிகளுடன் கூட்டணி தொடர்கிறது என முதல்வரே சொல்லிவிட்டார். தேர்தல் தேதி அறிவித்ததும் பேச்சுவார்த்தையை வைத்துக்கொள்ளலாம் என்றும் தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதற்குள் ''பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தயார் செய்துவிட்டேன். கூட்டணிக்குப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம்'' என்றெல்லாம் என்று சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

சசிகலா
சசிகலா

தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஸ்டாலினை எதிர்த்துப் பேசினால் அந்தக் கூட்டணியில் நீடிக்க முடியுமா சொல்லுங்கள்... அப்படி சசிகலாவுக்குத் துதிபாடும் அவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் அழைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். கூட்டணி தர்மத்துக்காகப் பார்க்கிறேன் என்கிறார். அந்தக் கட்சி நம் கூட்டணியிலேயே வேண்டாம் என்று எங்கள் தலைமைகள் முடிவு செய்துவிட்டார்கள். அவரின் மீது எங்கள் தலைமைக்கு துளியளவும் நம்பிக்கையில்லை. அதனால்தான், இப்படியே தனியாகக் கத்திக் கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட்டோம்'' என்கிறார்கள்.

தே.மு.தி.க-வைக் கழற்றிவிடுகிறதா அ.தி.மு.க... வெளியேறினால் பாதகம் யாருக்கு? #TNElection2021

அரசியல் விமர்சகர்கள் பேசுகையில்,'' தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கான கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. நமக்குப் போகும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்புக் கிடைக்கிறது. எதற்கு இனி தே.மு.தி.க. கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளே நமக்குப் போதும் என உதயநிதி முடிவு செய்துவிட்டார். அதனால், தே.மு.தி.கவுக்குத் தற்போதிருக்கும் ஒரே வாய்ப்பு அ.தி.மு.க கூட்டணியில் நீடிப்பது மட்டும்தான். பா.ம.கவுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்தபிறகுதான். அ.தி.மு.க தலைமை தே.மு.தி.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தும். கடைசியில் பணத்தைக் கொடுத்து, தே.மு,தி.கவைச் சரி செய்து கொள்ளலாம் என அ.தி.மு.க தலைமை நினைக்கிறது. தே.மு.தி.க எந்தக் கூட்டணிக்குப் போனாலும் அது கூடுதல் பலனைக் கொடுக்கும் என்பது உண்மைதான். ஆனால், பிரேமலதா பேசிவரும் அளவுக்கு அந்தக் கட்சிக்கு வலிமையில்லை என்பதே உண்மை. பிரேமலதா கடுமையாகப் பேசிவருவதும் தேவையில்லாத ஒன்று. கொடுக்கின்ற இடங்களைப் பெற்றுக்கொண்டு கட்சியை எப்படி முன்னேற்றுவதைப் பற்றி மட்டும் பிரேமலதாயோசித்தால் நல்லது. தனித்து நின்றால் இந்தத் தேர்தலோடு அந்தக் கட்சி காணாமல் போய்விடும்'' என்கிறார்கள்.

தே.மு.தி.க பார்த்தசாரதி
தே.மு.தி.க பார்த்தசாரதி

மேற்கண்ட விஷயங்கள் குறித்து, தே.மு.தி.கவின் தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதியிடம் பேசினோம்,

''நாங்கள் அ.தி.மு.க கூட்டணியில்தான் இன்னும் தொடர்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க, பா.ம.கவுக்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டோம் என்கிற காரணத்தைச் சொல்லி எங்களுக்குக் குறைவான தொகுதிகளை ஒதுக்கினார்கள். அதனால்தான், எங்களை இந்தமுறை முதலில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தச் சொல்கிறோம். இதில் வேறொன்றும் சொல்வதற்கில்லை'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு