Published:Updated:

சிதம்பரத்தில் சபதம்; டெல்லி பயணம்... ஆளுநரின் மனநிலை என்ன?

ஆளுநர் ரவி

``தமிழகத்தில் உள்ள ஆன்மிகத் தலங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆளுநர் ரவி தன்னுடைய கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கொதித்துப்போயிருக்கிறார்" என்கிறது ராஜ்பவன் வட்டாரம். இந்தச் சூழலில் அவரின் டெல்லி பயணம் அரசியல் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.

சிதம்பரத்தில் சபதம்; டெல்லி பயணம்... ஆளுநரின் மனநிலை என்ன?

``தமிழகத்தில் உள்ள ஆன்மிகத் தலங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆளுநர் ரவி தன்னுடைய கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கொதித்துப்போயிருக்கிறார்" என்கிறது ராஜ்பவன் வட்டாரம். இந்தச் சூழலில் அவரின் டெல்லி பயணம் அரசியல் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது.

Published:Updated:
ஆளுநர் ரவி

ஆன்மிகச் சுற்றுப்பயணம்:

டெல்டா மாவட்டங்களிலுள்ள ஆன்மிகத் திருத்தலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்தச் சுற்றுப்பயணத்தின்போது தருமை ஆதீனத்தில் அவர் கலந்துகொள்வதற்கு ஒரு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தின்போதுதான் அவரின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதை காவல்துறை அதிகாரபூர்வமாக மறுத்திருந்தாலும், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆளுநரின் மனநிலை குறித்து அவருக்கு நெருக்கமான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

பெரிய கோயிலில் பட்டு வேட்டி, சட்டையில் ஆளுநர் ரவி
பெரிய கோயிலில் பட்டு வேட்டி, சட்டையில் ஆளுநர் ரவி
ம.அரவிந்த்

``தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பின்னர், ஒவ்வொரு ஆன்மிக தலத்துக்கும் விசிட் செய்துவருகிறார். தனது பிறந்தநாளையொட்டி, அவர் சென்னையிலுள்ள அயோத்தியா மண்டபத்துக்குச் சென்றிருந்தபோது, மண்டபம் தொடர்பான வழக்கு தகவல்களை அவரிடம் நிர்வாகிகள் பகிர்ந்துகொண்டனர். `நான் கவனித்துக்கொள்கிறேன்' என அவர்களிடம் உறுதியளித்துவிட்டு வந்தார் ஆளுநர் ரவி. ஆனால், அடுத்த சில தினங்களிலேயே நீதிமன்ற உத்தரவை வைத்து அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத்துறை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. இதை ஆளுநர் ரவி எதிர்பார்க்கவில்லை. தன்னை மட்டுமின்றி, தான் செல்லுமிடமெல்லாம் திமுக அரசு குறிவைத்து பிரச்னையைக் கிளம்புவதாக அவர் அதிருப்தியடைத்தார். இந்தச் சமயத்தில்தான் தருமை ஆதீனத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வந்தது. இதற்காக டெல்டா மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் கிளம்பினார் ஆளுநர் ரவி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிதம்பரத்தில் சபதம்:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவர் தரிசனத்தை முடித்துவிட்டுக் கிளம்பும்போது, கோயில் தீட்சதரர்கள் சிலர் `அடுத்ததாக சிதம்பரம் நடராஜர் கோயிலைக் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு இந்து அறநிலையத்துறை தீவிரம்காட்டுகிறது. ஆண்டாண்டுக் காலமாக கடைப்பிடிக்கப்படும் கோயில் பாரம்பர்யத்தை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர். அதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஆளுநர் ரவி, தன்னால் ஆன முயற்சிகளைச் செய்வதாக உறுதியளித்துவிட்டுக் கிளம்பினார். அப்போதும் விடாத சில தீட்சிதர்கள் கோயிலின் பாரம்பர்ய வரலாற்றை ஆளுநர் ரவிக்கு எடுத்துரைத்து ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்த பிரச்னைகளைப் பட்டியலிட்டனர். அவர்களிடம், `கோயில் பாரம்பர்யம் கெடுவதற்கு ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன்' என்று சபதமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் ஆளுநர் ரவி.

ஆளுநர் ரவி - தருமபுர ஆதினம்
ஆளுநர் ரவி - தருமபுர ஆதினம்

இதைத் தொடர்ந்து, தருமை ஆதீனத்தில் நிறுவப்பட்டுள்ள பழங்கால கலைப்பொருள்கள் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த ஆளுநர் ரவி, குருமகா சன்னிதானத்தின் ஞானரத யாத்திரையைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அதேபோல, திருவாடுதுறை ஆதீனத்துக்கும் விசிட் செய்த ஆளுநர் ரவி, 24-வது குருமகா ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகளைச் சந்தித்து ஆசிபெற்றார். அப்போது, டெல்டா மாவட்டங்களில் உள்ள இந்து சமய மடங்களுக்குப் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் சொத்துகளாக இருப்பது குறித்தும், அதன் குத்தகை தொடர்பான விவகாரங்களை ஆளுநர் ரவியிடம் சிலர் முறையிட்டிருக்கிறார்கள். அனைத்தையும் அவர் உள்வாங்கிக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெல்லி பயணம்:

இந்த சுற்றுப்பயணத்தின்போதுதான் சில அரசியல் அமைப்புகள் போராட்டம் என்கிற பெயரில் அவரின் கான்வாய் மீது கறுப்புக்கொடியை வீசியெறிந்திருக்கின்றன. இதில், ஆளுநர் கடும் அப்செட். சென்னைக்குத் திரும்பியவர், ஏப்ரல் 20-ம் தேதி காலையிலேயே டெல்லிக்குக் கிளம்பிவிட்டார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திப்பதற்கும் நேரம் கேட்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு அனுப்பிய 11 தீர்மானங்களில் எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் ரவி அமைதி காக்கிறார். இது அரசியல்ரீதியாக திமுக-வுக்கும், ராஜ்பவனுக்கும் மோதலாக வெடித்திருக்கிறது. இது குறித்தெல்லாம், டெல்லியின் ஆலோசனையைப் பெறத் திட்டமிட்டிருக்கும் ஆளுநர் ரவி, தன் கான்வாய் மீதான தாக்குதல் குறித்தும் விவரிக்கவிருக்கிறார். ஆளுநர் ரவிக்குக் கூடுதலாக சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பும் அளிக்கப்படலாம்" என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.

ஆளுநர் ரவி - தருமபுர ஆதினம்
ஆளுநர் ரவி - தருமபுர ஆதினம்

நீட் விலக்கு மசோதா உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கத்தான் அவர் டெல்லி சென்றதாக ஒருசாரார் கூறும் நிலையில், `டெல்லியில் ஆளுநர் ரவியின் வீட்டுக் கட்டடப்பணி நடைபெற்றுவருகிறது. அதைப் பார்வையிடவும், சமீபத்தில் திருமணம் முடிந்த தனது மகளைப் பார்த்து நலம் விசாரிக்கவும்தான், தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றிருக்கிறார் ஆளுநர் ரவி. இத்துடன் நாகாலாந்து பிரச்னை தொடர்பாகவும் மத்திய உள்துறையில் அவர் சில விளக்கங்களை அளிக்கவேண்டியுள்ளது. பணிகளை முடித்துவிட்டு மறுநாளே (21.04.2022) மீண்டும் சென்னை திரும்புகிறார்' என்கிறார்கள் ராஜ்பவன் அதிகாரிகள். தமிழகத்தில் அரசியல் சூடு அதிகரித்துவரும் நிலையில் ஆளுநரின் இந்த டெல்லி பயணம் பல யூகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. இந்தப் பயணம் திமுக-வுக்குக் குடைச்சலைத் தருமா அல்லது சுமுகமாகக் கடந்துவிடுமா என்பதெல்லாம் ஆளுநர் ரவி தமிழகம் திரும்பிய பிறகு தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism