Election bannerElection banner
Published:Updated:

'தேர்தல் புறக்கணிப்பு' - பா.ம.க-வுக்குத் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்ததன் பின்னணி என்ன?

அ.தி.மு.க., பா.ம.க ஒப்பந்தம்
அ.தி.மு.க., பா.ம.க ஒப்பந்தம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பா.ம.க தற்போது இறங்கி வந்திருப்பதாகவும் அ.தி.மு.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க கூட்டணியில் மட்டுமல்ல, தமிழகத்திலேயே கூட்டணிப் பங்கீட்டில் முதலில் உடன்பாடு எட்டப்பட்டது அ.தி.மு.க - பா.ம.க இடையில்தான். அந்தக் கூட்டணியில் பா.ம.க-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், எத்தனை தொகுதிகள் என்பதில் மிக விரைவாக ஏற்பட்ட உடன்பாடு எந்தெந்தத் தொகுதிகள் என்பதில் ஏற்படவில்லை. முதலில் பா.ஜ.க-வும் பா.ம.க-வும் குறிப்பிட்ட ஏழு தொகுதிகளைத் தங்களுக்குத்தான் வேண்டும் என நெருக்கடி தந்ததாகச் செய்திகள் வெளியாகின. அடுத்ததாக, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையெல்லாம் பா.ம.க தரப்பில் கேட்பதால், தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்ததாகச் சொல்லப்பட்டது.

இந்தநிலையில் ஒருகட்டத்தில் `தேர்தலையே புறக்கணிக்கப் போகிறோம்' என பா.ம.க தரப்பில் சொல்லப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமியியின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பா.ம.க தற்போது இறங்கி வந்திருப்பதாகவும் அ.தி.மு.க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பா.ம.க தேர்தல் அறிக்கை
பா.ம.க தேர்தல் அறிக்கை

என்னநடந்தது?

பா.ம.க கேட்ட தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கைக்கூட அ.தி.மு.க ஒதுக்கத் தயாராக இல்லாத காரணத்தால், ``நாங்கள் இந்தமுறை தேர்தலிலேயே போட்டியிடவில்லை. வெளியிலிருந்து உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்'' என பா.ம.க தரப்பில் சொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அமைச்சர்கள் குழு சென்று பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸிடம் பேசியிருக்கிறார்.

`ஏழு பேர் விடுதலை, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு...’ பா.ம.க தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்!

``நீங்க (பா.ம.க) போனமுறை முப்பதாயிரம், நாற்பதாயிரத்துக்கு மேல ஓட்டு வாங்கின தொகுதியா பார்த்து கேட்குறீங்க. நீங்க நிற்குற 23 தொகுதியிலயும் ஜெயிச்சுட்டா போதும்னு நினைக்கிறீங்க. எங்களைப் பத்தி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டேங்கிறீங்க. நீங்க கேட்ட இட ஒதுக்கீட்டையும் கொடுத்தாச்சு. அத வச்சு நீங்கதான் முட்டி மோதி ஜெயிக்கணும். வன்னியர் இட ஒதுக்கீடு கொடுத்துட்டா போதும். அதைவெச்சு ஓட்டு வாங்கிடலாம்னு சொன்னீங்க. இப்போ ஈஸியா ஜெயிக்கிற தொகுதியாப் பார்த்து கேட்குறீங்க. வன்னியர்கள் பெரும்பான்மையா இருக்கற எந்தத் தொகுதியைக் கொடுத்தாலும் நீங்க ஜெயிக்கணும்தானே... அதுதானே திறமை'' எனப் பேசியிருக்கிறார். தொடர்ந்து, பா.ம.க தரப்பில் இறங்கிவந்து, தொகுதிப் பங்கீட்டு கையெழுத்து ஆகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்று மாலைக்குள் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தைலாபுரத்தில் பா.ம.க - அ.தி.மு.க தலைவர்கள்
தைலாபுரத்தில் பா.ம.க - அ.தி.மு.க தலைவர்கள்

பா.ம.க தரப்பில், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், திருப்போரூர், செய்யாறு, செங்கல்பட்டு, உத்திரமேரூர், பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு, சோளிங்கர், குன்னம், செஞ்சி, மயிலம், ஜெயங்கொண்டம், ஓமலூர், மேட்டூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பண்ருட்டி, பென்னாகரம், அணைக்கட்டு, விருத்தாச்சலம் ஆகிய தொகுதிகளைக் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு