Published:Updated:

`என் நிம்மதிக்கு வந்த சோதனை' - சசிகலாவின் பையனூர் பங்களாவுக்கும் கங்கை அமரனுக்கும் என்ன தொடர்பு?

சசிகலா
சசிகலா

பையனூர் பங்களா குறித்த செய்திகள் வெளியாகும்போதெல்லாம், கங்கை அமரனின் பெயரும் உச்சரிக்கப்படும். அப்படி, பையனூர் பங்களாவுக்கும் கங்கை அமரனுக்கும் உள்ள தொடர்புதான் என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா, அதைச் சுற்றியுள்ள நிலம் கடந்த 8-ம் தேதி, வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்குச் சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது பினாமி சொத்துகள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துகளைக் கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி, 2019-ல் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு, கொடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உட்பட 65 சொத்துகள் முடக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது பையனூர் பங்களாவும் முடக்கப்பட்டிருக்கிறது.

சசிகலா - பையனூர் பங்களா
சசிகலா - பையனூர் பங்களா

பையனூர் பங்களாவைப் பூட்டி சீல் வைத்த வருமான வரித்துறை, அதற்கான காரணத்தை விவரிக்கும் வகையில் பத்து பக்கங்கள் கொண்ட நோட்டீஸை பங்களா முகப்பில் ஒட்டியிருக்கிறது. அதன்படி அறிவிக்கப்பட்ட 90 நாள்களுக்குள் இந்தச் சொத்தின் மூலம் ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ கூடாது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, பங்களாவைப் பயன்படுத்தலாம். ஆனால், விற்கவோ, அடகுவைக்கவோ முடியாது. மேலும், பங்களா முடக்கப்பட்டது குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது. இந்தநிலையில், தன்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை மீண்டும் மீட்டுத்தர வேண்டும் என்று கேட்பதற்காக இசையமைப்பாளர் கங்கை அமரன், தமிழக முதல்வர் மு.கஸ்டாலினைச் சந்திக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பையனூர் பங்களா குறித்த செய்திகள் வெளியாகும்போதெல்லாம், கங்கை அமரனின் பெயரும் உச்சரிக்கப்படும். அப்படி, பையனூர் பங்களாவுக்கும் கங்கை அமரனுக்கும் உள்ள தொடர்புதான் என்ன?

``1991-96 தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், 1994-ல் இசையமைப்பாளர் கங்கை அமரனிடமிருந்து இந்த நிலம், வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவரிடமிருந்து முறையாக நிலத்தை வாங்கவில்லை, மிரட்டியே வாங்கினார்கள் என்று தகவல்கள் வெளியாகின. 'சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரன், கங்கை அமரனிடம் சென்று 'முதல்வர் ஜெயலலிதா உங்களைப் பார்க்க விரும்புகிறார்' என்று அழைத்துச் சென்று சந்திக்க வைத்திருக்கிறார். பின்னர், 'முதலமைச்சருக்கு உங்களுடைய பங்களா மிகவும் பிடித்துவிட்டது, எனவே, இந்த பங்களாவை நீங்கள் விற்றுவிடுங்கள்' என்று கூறியிருக்கிறார், அதற்கு பதிலளித்த கங்கை அமரன். `இந்த நிலம் என்னுடைய இசையமைப்புப் பணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது. மேலும் என் குடும்பத்தாருக்கும் இந்த வீட்டை விற்பதில் விருப்பம் இல்லை' என்று கூறியிருக்கிறார். ஆனால், இவற்றையெல்லாம் காதில் வாங்கிகொள்ளாத ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், கங்கை அமரனைப் பின்தொடர்ந்தவண்ணம் இருந்திருக்கிறார். திடீரென்னு ஒருநாள், கங்கை அமரனின் வீட்டுக்குப் பதிவாளர், பிற அரசு அதிகாரிகளுடன் சென்று, அமரனையும் அவருடைய மனைவியையும் மிரட்டி கையெழுத்து போடவைத்தார்'' என்று சொல்லப்பட்டது.

சுதாகரன்
சுதாகரன்

ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து தர்மயுத்தம் நடத்திய காலகட்டத்தில், இது குறித்துப் பத்திரிகைகளில் வெளிப்படையாகப் பேசினார் கங்கை அமரன். அப்போது ஒரு தனியார் ஊடகத்துக்கு கங்கை அமரன் அளித்த பேட்டியில்,

``என்னுடைய பையானூர் பங்களாவில் சி.எம் (ஜெயலலிதா) தங்குவதற்கு இடம் வேண்டும் என்றார்கள். தாராளமாக தங்கிக்கொள்ளட்டும் என்று சொன்னேன். ஆனால், `நிலத்தை எங்களுக்கே கொடுத்துவிடுங்கள்’ என விலைக்குக் கேட்டார்கள். `அந்த அளவுக்கு எனக்கு ஒன்றும் தற்போது அவசியமில்லை. அந்த நிலத்தை விற்க என் வீட்டில் உள்ளவர்களுக்கும் விருப்பம் இல்லை’ என்றேன். ஆனால், பன்னீர்செல்வத்தை எப்படி மிரட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார்களோ, அதேபோல, என் விருப்பம் இல்லாமல் எங்கள் நிலத்தையும் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார்கள்'' என்று கூறினார். தவிர, தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸிலும், 'என் நிம்மதிக்கு வந்த சோதனை' என்று சசிகலாவுடனான சந்திப்பு, அப்போது நடந்த உரையாடல் குறித்துப் பதிவுசெய்திருக்கிறார்.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே, 2017 பிப்ரவரியில் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியிலும், ``சசிகலா, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டியிருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பையனூர் பங்களாவை சசிகலா என்னிடம் எப்படி மிரட்டி வாங்கினார் என்பது எனக்குத் தெரியும். அதுபோல இன்னும் சில வி.வி.ஐ.பி-க்களிடமிருந்து சசிகலா தரப்பு சொத்துகளை மிரட்டி வாங்கியிருக்கிறது'' என கருத்து தெரிவித்தார் கங்கை அமரன். மேலும் அவர்,

``பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அது தொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க-வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய வீட்டுக்கு போனில் பேசியவர்கள், என் மனைவியை மிரட்டியுள்ளனர். `கங்கை அமரன் என்ன பெரிய ஆளா, ஜாக்கிரைதையாக இருக்கச் சொல்லுங்கள். அவர் எங்களை மீறிச் செயல்பட்டால் அவ்வளவுதான்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் என்னுடைய மனைவி மிகவும் பயந்துவிட்டார். ஸ்டூடியோவில் இருந்த எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக நான் சசிகலாவிடம் போனில் பேசினேன். அதற்கு அவர், `அப்படியா... நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார். அதன் பிறகு அது போன்ற மிரட்டல் போன் அழைப்புகள் இல்லை.

கங்கை அமரன்
கங்கை அமரன்

ஆனால் என்னுடைய வீட்டை போலீஸார் மஃப்டியில் கண்காணித்தனர். என் ஒவ்வோர் அசைவையும் அவர்கள் கண்காணித்தனர். இவ்வாறு மறைமுகமாகவே எனக்கு சசிகலா தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தன. பையனூர் பங்களா என்னிடமிருந்து பெறப்பட்டபோது எனக்கு வேறு இடத்தில் 2 ஏக்கர் இடம் தருவதாகத் தெரிவித்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை சசிகலா நிறைவேற்றவில்லை'' எனக் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது ஒரு தனியார் ஊடகத்தில், `பையனூர் பங்களா தொடர்பாக முதல்வரைச் சந்திக்கவிருக்கிறேன்' என அவர் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேவேளையில், ``கங்கை அமரன் விருப்பத்தின் பேரில்தான் இந்த நிலத்தை விற்பனை செய்தார். குறைவான விலைக்கு விற்பனை செய்துவிட்டு, மீண்டும் பணம் கேட்டார். அதைக் கொடுக்க மறுத்துவிட்டார்கள். மற்றபடி மிரட்டியெல்லாம் வாங்கப்படவில்லை'' என ஜெயலலிதா, சசிகலா ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு