Published:Updated:

சசிகலா: தேன்கூட்டில் எறிந்த கல்!

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
சசிகலா

சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இதுபற்றி விசாரித்தபோது அவர்கள் சில தகவல்களை ஒப்புக்கொண்டனர்.

புத்தாண்டு பிறந்ததும் புதிய நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள், சசிகலா குடும்பத்தினரும், அவரால் அரசியல் அடையாளம் பெற்ற ஆதரவாளர்களும்.

2017 பிப்ரவரியில் பெங்களூரு சிறையில் நான்காண்டு தண்டனைக்கைதியாக அடைக்கப்பட்டார் சசிகலா. அவருக்கான தண்டனைக்காலம் 2021 பிப்ரவரியில்தான் முடிவடையும். ஆனால், ஏற்கெனவே அவர் சிறையில் இருந்த காலத்தைக் கணக்கிட்டு, நன்னடத்தை விதிகள் அடிப்படையில் இந்த ஆண்டு மத்தியில் சசிகலா வெளியே வருவார் என்று நம்பப்பட்டது. இந்நிலையில்தான் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் சசிகலாவிற்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2017-ம் ஆண்டு நவம்பரில் சசிகலா சிறையிலிருந்தபோது அவருடைய வீடு மற்றும் அவரின் உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதுகுறித்த எந்தவிதத் தகவலும் அப்போதும் அதன் பின்னும்கூட வெளிவரவில்லை. இந்நிலையில் சசிகலா சார்பில் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘வருமானவரித்துறை ஆய்வுக்குப் பிறகு என் உறவினர்கள் வீடுகளில் கிடைத்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு வருமானவரித்துறை எந்தவித மேல்நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களான எங்கள் தரப்பிடம் குறுக்கு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று அதில் கோரப்பட்டிருந்தது. தேன்கூட்டில் கல் எறிந்தது போலானது அந்த மனு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மனுவுக்கு வருமானவரித்துறை தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட பதிலில், “வருமானவரி சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சசிகலா ரூ.1674.5 கோடி மதிப்பிலான சொத்துகளை வாங்கியுள்ளார். அந்த ஆவணங்களை முறைப்படி சசிகலாவின் கணக்கில் சேர்த்துள்ளோம். மேலும் சில நிறுவனங்களுக்கு, பணமதிப்பிழப்பின்போது பணம் அளித்துள்ளார். அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளோம்” என்று கூறப்பட்டிருந்தது. விஷயம் வெளியே வந்ததும் அதிர்ந்துபோனது தமிழக அரசியல் வட்டாரம்.

சசிகலா: தேன்கூட்டில் எறிந்த கல்!
சசிகலா: தேன்கூட்டில் எறிந்த கல்!

சசிகலா நீதிமன்றத்திற்குச் சென்று வருமானவரித்துறை சோதனையைப் பற்றி மனு தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், இந்த ஆவண விவகாரம் வெளியே வராமலே முடங்கிப்போயிருக்கும் என்கிறார்கள் தணிக்கையாளர்கள். இனி, பினாமி சட்டத்தின்படி இந்த வழக்கை வருமானவரித்துறை கொண்டு செல்ல ஆயத்தமாகிவருகிறது. இதுதான் இப்போது சசிகலாவிற்கு மிகப்பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.

குறிப்பாக சசிகலாவின் நெருங்கிய உறவினர்களான கிருஷ்ணபிரியா, விவேக் ஆகியோரின் வீடுகளில் கைப்பற்றப் பட்ட சில ஆவணங்களைக் கொண்டே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக வருமான வரித்துறை சொல்லியிருக்கிறது. இதனால் விடுதலையாவதற்கு முன்பே, சசிகலாமீது புதிய வழக்கு பாயும் அபாயம் அதிகரித்திருக்கிறது.

இவை எதையுமே கண்டுகொள்ளாமல், அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சசிகலாவின் விடுதலையை வைத்து அரசியல் கணக்கை ஆளும்கட்சிகள் போட்டுக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடந்த முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வெற்றியை அ.தி.மு.க பெற்றிருக்கிறது. ஆனால் மாநிலத்தை ஆளும் ஒரு கட்சி, உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாமிடத்திற்குப் போயிருப்பது அ.தி.மு.க-வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேநிலையில் சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க எதிர்கொண்டால் தோல்வி நிச்சயமென்ற அச்சம், அக்கட்சி வட்டாரத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.

இதுபற்றி, தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாவிட்டாலும் அம்மா இல்லாமலே இந்த வெற்றி நமக்குப் பெரிதுதான். ஆனால் சட்டமன்றத் தேர்தலையும் இந்த முறையில் எதிர்கொள்ளமுடியாது. சசிகலாவைக் கொண்டு வந்தால் அனைத்துமட்டத்திலும் நமக்கு வளர்ச்சி இருக்கும். அவர்கள் சீக்கிரம் வெளியே வந்துவிடுவார்கள்” என்று சொல்லியிருக்கிறார். சசிகலா விடுதலையானால் அவரை அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவரும் எண்ணம் எடப்பாடியிடம் மேலோங்கி இருப்பதை மூத்த நிர்வாகிகளே ஒப்புக்கொள்கின்றனர்.

அதேநேரம் அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து அ.ம.மு.க கட்சியைத் துவக்கிய தினகரனும், சசிகலா விடுதலைக்குப் பிறகுதான் நமக்கு ஒரு எதிர்காலம் இருக்கும் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். சசிகலா அ.தி.மு.க பக்கம் சாய்ந்தால் என்னாவது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் கேட்டதற்கு ‘‘அப்படியொரு நிலை வந்தால் அ.தி.மு.க-வுடன் நாம் இணைந்து செயல்படலாம். ஆனால், நமக்கான முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இல்லாவிடில் சித்தியே அங்கு போனாலும் நாம் கவலைப்படாமல் இந்தக் கட்சியை நடத்துவோம். உள்ளாட்சித் தேர்தலில் நாம் சின்னமே இல்லாமல் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறோம்” என்று நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க பெற்றுள்ள வெற்றி, மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையையும் யோசிக்க வைத்திருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் தமிழகத்தில் பா.ஜ.க-வை பலப்படுத்துவது சாத்தியமான விஷயமில்லை என்பதை உணர்ந்துள்ள பா.ஜ.க மேலிடம், தற்போதுள்ள அ.தி.மு.க-வை பலப்படுத்தாதபட்சத்தில் அந்தத் தேர்தலில் தி.மு.க வென்றுவிடுமென்று எண்ணுகிறது. அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டுமெனில், சசிகலா, தினகரன் இருவரையும் மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென்றும் நினைக்கிறது. இதற்காகவே, பெங்களூரு சிறையில் சசிகலாவை பா.ஜ.க சார்பில் ஒரு முக்கியப் பிரமுகர் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இதுபற்றி விசாரித்தபோது அவர்கள் சில தகவல்களை ஒப்புக்கொண்டனர்.

‘‘சசிகலாவை பா.ஜ.க தரப்பில் சிறையில் சந்தித்துப் பேசியவர்கள், ‘சசிகலாவை அ.தி.மு.க-வின் அதிகாரமட்டத்தில் அமரவைத்து தினகரனையும் அ.தி.மு.க-விற்குள் கொண்டுவந்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்கமுடியும் என்று பா.ஜ.க நினைக்கிறது.

சசிகலா: தேன்கூட்டில் எறிந்த கல்!

ஏற்கெனவே எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் சசிகலாவைச் சிறையில் சந்தித்துப் பேசும்போதே ‘நீங்கள் வந்தால் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். உங்களுக்கு எதிராகக் கட்சிக்குள் இருப்பவர்களை எடப்பாடி பார்த்துக்கொள்வார். தினகரனை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னதற்கு சசிகலா மறுப்பு ஏதும் சொல்லவில்லை. இந்த நிலையில்தான் சசிகலாவை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களை அஸ்திரமாக மாற்றியிருக்கிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலைச் சமாளித்து விரைவில் விடுதலை ஆகவும், அரசியலில் நல்ல எதிர்காலம் பெறவும் அ.தி.மு.க அணிக்குள் செல்வதே ஒரே வழியென்றுதான் சசிகலா உறவுகளும் வலியுறுத்திவருகின்றன. தனது உடல்நிலையின் பொருட்டும் சிறையிலிருந்து விரைவில் வெளியே வரவேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார். அதனால் பா.ஜ.க மற்றும் எடப்பாடி தரப்புகளின் நிபந்தனைகளுக்கு சசிகலா ஒப்புக் கொண்டுவிட்டார். சீக்கிரமே நல்லது நடக்குமென்று நம்புகிறோம்’’ என்றனர்.

எல்லாவற்றையும் நியாயப்படுத்தத்தான் இருக்கவே இருக்கிறது ‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை’ என்ற சால்ஜாப்பு!