Published:Updated:

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்ட சலசலப்பு: திமுக அரசின் முடிவு என்ன?!

திமுக அரசு - பொங்கல்

இந்த முறை பொங்கல் திருநாளுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு கிடையாது எனக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு பதிலாக திமுக அரசு வேறொரு திட்டத்தை வைத்திருக்கிறது என்கிறார்கள்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்ட சலசலப்பு: திமுக அரசின் முடிவு என்ன?!

இந்த முறை பொங்கல் திருநாளுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு கிடையாது எனக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு பதிலாக திமுக அரசு வேறொரு திட்டத்தை வைத்திருக்கிறது என்கிறார்கள்.

Published:Updated:
திமுக அரசு - பொங்கல்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பொங்கல் திருநாளுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. அதேபோல, ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கியதால், 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்படுவதாக தி.மு.க சார்பில் கூறப்பட்டது. ஆனாலும், வழங்கப்பட்ட பொருள்களின் தரம் குறித்து பல இடங்களில் புகார்கள் எழுந்து சர்ச்சையானது.

கலப்பட பொங்கல் பரிசு
கலப்பட பொங்கல் பரிசு

பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட்ட அனைத்துப் பொருள்களின் மீதும் புகார்கள் எழ, ‘தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’ என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இன்றுவரை அந்த நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலுக்கு மாற்றப்படவில்லை. மாறாக, அதே நிறுவனங்களிடமிருந்து, ரேஷன் கடைகளுக்கான பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு மீண்டும் கொள்முதல் செய்துவருவது என கடந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் வெடித்த சர்ச்சை, அடுத்த பொங்கல் திருவிழா வந்தும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இதனால், பொங்கல் திருநாளுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு இந்த ஆண்டு கிடையாது எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், பரிசுத்தொகுப்பு எதுவும் வழங்கப்படுவதாக இருந்தால், அதற்கான பொருள்களை வாங்க, கடந்த மாதமே டெண்டர்விடப்பட்டு பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்த டெண்டரும் விடப்படாததால், இந்த ஆண்டு கூடுதல் பொருள்கள் எதுவும் வழங்கப்படாது என்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் | திமுக
முதல்வர் ஸ்டாலின் | திமுக

இந்த நிலையில், பொங்கல் திருநாள் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (19-ம் தேதி) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது குறித்து மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்தொகுப்பில் 21 பொருள்கள் வழங்கப்பட்டன. அதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததால், 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு பரிசுத்தொகுப்பு எதுவும் இல்லை என்பதே தற்போதைய நிலைமை.

அதன்படி, தற்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொங்கல் திருநாளுக்கு அரிசி, சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு ஆகியவற்றுடன் வேட்டி, சேலையும் வழங்க முடிவானது. அதேபோல, 1,000 ரூபாய் ரொக்கத்தொகை வழங்க முடிவாகியிருக்கிறது. இந்த ரொக்கத்தை வங்கிக் கணக்கு மூலமாகவே செலுத்த ஏதுவாக, வங்கிக் கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள், உடனே தங்களது வங்கிக் கணக்கு எண்ணை அளிக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பொங்கல் பரிசு?
பொங்கல் பரிசு?

ஆனால், வங்கிக் கணக்கில் செலுத்தினால், அதை எடுத்து செலவு செய்ய மக்கள் கஷ்டப்படுவார்கள். எனவே கடைகள் மூலமாக நேரடியாகக் கைகளில் கொடுத்தால்தான், மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. அதன்படி, இந்த இரு கருத்துகள் குறித்து முதல்வர் முடிவெடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்" என்றார்.