Published:Updated:

`சசிகலா ஒரு உத்தரவாதத்தை மட்டும் கொடுக்கட்டும்' - கைகோப்பது குறித்து ஓ.பி.எஸ்ஸின் முடிவு என்ன?

``அரசியலில் சசிகலாவின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிவிட்டது. நேரடியாக இல்லாவிட்டாலும் ஓ.பி.எஸ்ஸின் மூலம் மறைமுகமாகவேணும் தனது ஆட்டத்தை விரைவில் தொடங்குவார்'' என்கிறார்கள். ஆனால், ஓ.பி.எஸ்..,

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிமுக தொடங்கப்பட்ட 50-வது ஆண்டு வரும் அக்டோபர் 17-ம் தேதி பிறக்கிறது. இந்த நிலையில், அந்தக் கட்சியினரைவிட, சசிகலா அந்தநாளை மிகப்பிரமாண்டமாகக் கொண்டாட முடிவெடுத்திருப்பதுதான் தமிழக அரசியல் வட்டாரத்தின் ஹாட்டாபிக்காக மாறியிருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொள்ளப்போவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அ.தி.மு.க நிர்வாகிகளுடன் அலைபேசியில் உரையாடுவது போன்ற ஆடியோக்களை வெளியிட்டு வந்தார். அப்படி வெளியான ஆடியோக்களில் பெரும்பாலும், ``நான் விட மாட்டேன், கட்டாயம் வந்துடுவேன். கட்சியை மீட்பேன். கொரோனா காலம் முடியட்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வருவேன்'' போன்ற கருத்துகளே பிரதானமாக இடம்பெற்றிருந்தன. அ.தி.மு.க தலைமையிலிருந்து சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றச் சொன்னபோது பல இடங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மாறாக சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு சில இடங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகவும் அடுத்ததாக தஞ்சை அல்லது திருச்சியில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் சொல்லிவந்தனர். ஆனால், கொரோனா தளர்வுகள் அமலுக்கு வந்தபிறகும் அரசியல் ரீதியான செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் அமைதியாகவே இருந்தார் சசிகலா.

சசிகலா
சசிகலா

அதேவேளை, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவைத்தலைவர் மதுசூதனனை அ.தி.மு.க கொடிகட்டிய காரில் வந்து பார்த்தது, அவரின் மறைவுக்கு அவரின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தது, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமியின் மறைவுக்கு மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் தெரிவித்தது என லைம்லைட்டிலே இருந்தார் சசிகலா. இந்த நிலையில், வரும் அக்டோபர் 17-ம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி அவர் ஜெயலலிதாவின் சமாதிக்கு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் ஆதரவாளர்கள் இதுகுறித்து, தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படையாகவே பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அக்டோபர், 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சசிகலா கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

``அக்டோபர் 16-ம் தேதி மதியம் 12 மணியளவில் சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரவிருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தவிருக்கிறார். அதன் பிறகு, கட்சி தொடங்கிய நாளான அக்டோபர் 17-ம் தேதி, தி.நகரிலுள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்ற சசிகலா திட்டமிட்டிருக்கிறார். அன்றைய தினம் ராமாவரம் தோட்டத்திலுள்ள காது கேளாதோர் பள்ளிக் குழந்தைகளுடன் அவர் அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதோடு, ``அரசியலில் சசிகலாவின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிவிட்டது. நேரடியாக இல்லாவிட்டாலும் ஓ.பி.எஸ்ஸின் மூலம் மறைமுகமாகவேணும் தனது ஆட்டத்தை விரைவில் தொடங்குவார்'' என்கிறார்கள்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்

ஆனால், ஓ.பி.எஸ் இன்னும் முழுமையாக சசிகலாவுக்கு ஓகே சொல்லவில்லை என்கிறது அவருக்கு நெருக்கமான தரப்பு. இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், `` எடப்பாடிக்கு எதிராக கட்சியில் தன் ஆதிக்கத்தைச் செலுத்த சசிகலாவின் தயவு தேவை என நினைக்கிறார் ஓ.பி.எஸ். அதேவேளை, முழுமையாக சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி சென்றுவிடக்கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருக்கிறார். சசிகலாவை கட்சிக்குள் அனுமதிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. அதேவேளை, அவரின் குடும்பத்தினர் ஆளாளுக்கு வந்து கன்ட்ரோல் செய்ய ஆரம்பிப்பார்கள். அவர்கள் ஆதரவாளர்களை கட்சி நிர்வாகிகளாக நியமிப்பார்கள். பழையபடி கட்சி அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் சென்று நமக்கான மரியாதை இல்லாமல் போய்விடும் என யோசிக்கிறார்.

எடப்பாடி டீமை உடைக்கும்  'ஆறுபடை' - சசிகலா-வின் அரசியல் ஐ.பி.எல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே கட்சியில், முதல்வர் வேட்பாளர் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவிவரை எடப்பாடி& கோவையே சமாளிக்க முடியாமல் பல இடங்களில் அவமானப்பட்டுப்போனார் ஓ.பி.எஸ். சசிகலாவின் குடும்பமோ ஆயிரம் எடப்பாடி அண்ட் கோவுக்குச் சமம். அதனால், ``அந்தம்மா என் குடும்பத்தினர் யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள் என்கிற ஒரு உத்தரவாதத்தை கொடுத்தால், நிச்சயமாக நாம் துணிந்து இறங்கலாம், அதுவரைக்கும் நடக்கின்ற விஷயங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்போம்" என்பதே அவருடைய திட்டம். அதுமட்டுமல்ல, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டே தனியாக ஒரு அணியைக் கட்டமைக்கவும் அவர் விரும்பவில்லை.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

ஆனால், எடப்பாடி ஆக்டிவாக இல்லாத இந்த நேரத்தில், கட்சி ரீதியாக வேறு சில திட்டங்களை அவர் கைவசம் வைத்திருக்கிறார். சட்டமன்றத் தேர்தலின்போது அவர் தொகுதிக்குள்ளேயே முடங்கிக் கிடக்கவேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் சுற்றுப்பயணம் அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. தனக்கு எதிரானவர்கள் என அவர் நினைத்த பலரும்கூட அவரிடம் நெருக்கமாக மனம்விட்டு பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள். அதனால் வருகின்ற ஜனவரி முதல், ஒவ்வொரு வாரமும் இரண்டு மாவட்டங்களில் (வருவாய்) சுற்றுப்பயணம் செல்ல முடிவெடுத்திருக்கிறார். காலையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனும் மாலையில் செயல்வீரர் கூட்டத்தையும் நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கூட்டம் கூட்டுவதை யாராலும் தடுக்கமுடியாது. உண்மையைச் சொல்லப்போனால், கட்சியில் தனிப்பெரும் தலைவராக முடியும் என்கிற நம்பிக்கையே அவருக்கு இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு