'ஆதிக்க கலாசாரத்தை என்னால் முழுமையாக தகர்த்தெறிய முடியவில்லை' என்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியின் வலி மிகுந்த கடித வரிகள்தான் தமிழக நீதித்துறை வட்டாரத்தைத் தாண்டியும் மிகப்பெரும் விவாதமாக உருவெடுத்துவருகின்றன.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த சஞ்ஜிப் பானர்ஜி, அண்மையில் திடீரென மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நீதிபதிகள் தேர்வுக்குழுவான 'கொலிஜியம்' எடுத்த முடிவின்படியே இந்த இடமாற்றம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் / வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வழங்கிய சில அதிரடி தீர்ப்புகள், மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமைந்தன. எனவே, மத்திய பா.ஜ.க அரசின் தூண்டுதலின்பேரிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. சஞ்ஜிப் பானர்ஜிக்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த தஹில் ரமானியும் கடந்த வருடம் திடீரென மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போதும் இதே போன்ற சர்ச்சை கிளம்பியது.
இந்த நிலையில், 'சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்றம் இயல்பான ஒன்றுதான். இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை' என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையே, நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியின் இடமாற்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னுடைன் இணைந்து பணியாற்றிய நீதிபதிகளுக்கு பிரியாவிடை கொடுக்கும்விதத்தில், உணர்ச்சிமிகு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் தமிழக மக்களின் அன்புக்கு நன்றி தெரிவித்திருந்ததோடு, கடிதத்தில் நீதிமன்ற ஊழியர்களுக்கு எழுதிய வரிகளில் 'ஆதிக்க கலாசாரத்தை என்னால் முழுமையாக தகர்த்தெறிய முடியவில்லை' என்றும் குறிப்பிட்டிருந்தார். 'ஆதிக்க கலாசாரம்' என்ற இந்த வார்த்தைகள், யாரைக் குறிக்கின்றன என்ற கேள்விதான் தற்போது ஊடக விவாதமாக உருவெடுத்துவருகிறது.
இது குறித்துப் பேசுகிற 'அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க'த்தின் மாநிலக்குழு உறுப்பினரான ஜெ.பிரதாபன், ''ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிவந்த தஹில் ரமானியையும் இதேபோல் மேகாலயாவுக்குத்தான் பணி இடமாற்றம் செய்தார்கள். அதாவது, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த தஹில் ரமானி, அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றப் பணிக்கு மாற்றம் செய்யப்படவேண்டிய சூழலில், அதற்கு நேர்மாறாக மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதில் விரக்தியடைந்த தஹில் ரமானி, தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிவிட்டார். இப்போது சஞ்ஜிப் பானர்ஜியும்கூட இதே மாதிரியான சூழலில்தான், திட்டமிட்டே பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா-வும், அவரின் பணிக்காலம் முழுவதுமே உச்ச நீதிமன்றப் பணிக்குச் செல்லவிடாமல் முடக்கப்பட்டார். இதன் பின்னணியிலும்கூட ஏற்கெனவே ஏ.பி.ஷா வழங்கிய 'சிவசேனாவுக்கு எதிரான தீர்ப்புகள்' அடங்கியுள்ளன.
இந்திய நீதித்துறை பிரிட்டிஷார் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. அந்தவகையில், சென்னை, மும்பை, கொல்கத்தா, அலகாபாத் என இந்த நான்கு பகுதிகளில்தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இதில், கொல்கத்தா நீதிமன்றத்திலிருந்து வந்தவர்தான் சஞ்ஜிப் பானர்ஜி. இந்தியாவின் மிக மூத்த தலைமை நீதிபதிகளில் குறிப்பிடத்தகுந்தவர். 80 நீதிபதிகளைக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிவந்த சஞ்ஜிப் பானர்ஜியை, வெறும் இரண்டு நீதிபதிகளை மட்டுமே கொண்டிருக்கக்கூடிய மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணி இடமாற்றம் செய்தவதென்பது, தண்டனைக்குரிய பணி இடமாற்றமாகத்தான் இருக்கிறது.
'நீதிபதி பணியிட மாற்றம் விவகாரங்களில், மத்திய பா.ஜ.க அரசுக்குத் தொடர்பில்லை; இது கொலிஜியம் எடுக்கிற முடிவு' என்று அவர்கள் மறுப்பு சொல்லலாம். ஆனால், கடந்த காலத்தில் சஞ்ஜிப் பானர்ஜி தீர்ப்பளித்துள்ள வழக்குகளை எடுத்துப் பார்த்தாலே உண்மை என்னவென்று எளிதில் தெரிந்துவிடும். ஏனெனில், சஞ்ஜிப் பானர்ஜி விசாரித்த வழக்குகள் பலவற்றிலும் நடுநிலைமையோடு அவர் அளித்துள்ள தீர்ப்பு என்பது மத்திய பா.ஜ.க அரசுக்கு விரோதமானதாக அமைந்துள்ளது. இதையெல்லாம் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பவில்லை. எனவே, பணி இடமாற்றம் செய்துவிட்டனர்.
கொலிஜியம் பரிந்துரை செய்கிற கோரிக்கைகளுக்கு ஒப்புதல் கொடுக்கவேண்டிய இடத்தில், மத்திய சட்டத்துறை இருக்கிறது. கொலிஜியம் பரிந்துரை செய்கிற எல்லா கோரிக்கைகளுக்கும் சட்டத்துறை ஒப்புதல் கொடுத்துவிடுவதில்லை. பல்வேறு கோரிக்கைகளை திருப்பியனுப்பிவிடுகிறார்கள். ஆனால், பா.ஜ.க-வுக்கு ஆதரவான நீதிபதிகள் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் வரும்போது மட்டும் உடனடி ஒப்புதல் கொடுத்துவிடுகின்றனர்.

அதோடு, கொலிஜியம் அமைப்பிலேயேகூட, மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவான மனநிலை கொண்டவர்களும், மறைமுக அழுத்தங்களின் காரணமாக ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவகையில் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்தான். எனவே, 'கொலிஜியம் முடிவில் மத்திய பா.ஜ.க-வுக்கு எந்த சம்பந்தமும் இல்லை' என்று மறுப்பது பொய்யானது. மாறாக உண்மை அதுவாகயிருந்தால், இது போன்ற எதிர்ப்புகள் வரும்போது, கொலிஜியத்தின் முடிவுகளை ஏற்காமல் மத்திய சட்டத்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பிவிடலாம்தானே!
எனவே பொதுவாக நீதித்துறையில் இந்த கொலிஜியம் அமைப்பு என்பதே வெளிப்படைத்தன்மை அற்றதாகத்தான் இருக்கிறது. அதனால்தான் இது போன்று பணி இடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட மாற்றங்களில் குழப்பங்கள் நீடிக்கின்றன'' என்கிறார் விளக்கமாக.
இதையடுத்து, 'கொலிஜியம் எடுத்துவரும் நடவடிக்கைகளின் பின்னணியில் மத்திய அரசின் தூண்டுதல் இருக்கிறதா?' என்ற கேள்வியை தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான குமரகுருவிடம் கேட்டபோது, ''கொலிஜியம் என்பது தனிப்பட்ட அமைப்பு. அதன் நிர்வாகச் செயல்பாடுகளில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்று சொன்னால், இன்றைக்கும் மத்திய அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்துவரும் நீதிபதிகள் பதவிகளில் இருந்துகொண்டிருக்கிறார்களே அது எப்படிச் சாத்தியம்?
அடுத்து, கொலிஜியத்தின் முடிவுகளில் இன்றைய மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டால், கடந்தகால அரசுகளுக்கும் அப்படியொரு பின்னணி இருந்தது என்று தானாகவே ஒப்புக்கொள்ள வேண்டியதாகவும் ஆகிவிடுகிறது. இப்போது குற்றம்சாட்டுபவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்களா? சஞ்ஜிப் பானர்ஜிக்கு ஆதரவாக இப்போது பேசுகிறவர்கள், கடந்தகாலத்தில் தஹில் ரமானி பணி இடமாற்றம் செய்யப்படும்போது ஏன் இதேபோல் பேசவில்லை?

'தஹில் ரமானி, மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது அதைப் பிடிக்காமல், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்' என்று இப்போது சொல்பவர்கள், தஹில் ரமானி மீது அதன் பிறகு சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டைச் சொல்லாமல் மறைத்துவிடுவது ஏன்? ஒருவேளை இப்படியொரு குற்றச்சாட்டு அவர்மீது வரவிருப்பதை முன்னரே தெரிந்துகொண்டுகூட, கொலிஜியம் அமைப்பு தஹில் ரமானியைப் பணி இடமாற்றம் செய்திருக்கலாம் அல்லவா? அதேபோல், தற்போது சஞ்ஜிப் பானர்ஜி இட மாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியிலும் என்ன விஷயம் இருக்கிறது என்பது கொலிஜியத்துக்கு மட்டுமே தெரியும்.
'கொலிஜியம் அமைப்பு என்பது முழுக்க முழுக்கத் தனிப்பட்ட சுயாதீனமான ஓர் அமைப்பு. இதன் முடிவுகளில் மத்திய சட்ட அமைச்சகமும்கூட தலையிட முடியாது; அறிவுறுத்தல் வழங்க முடியாது' என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற விஷயங்களில், குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் கொடுத்துவிட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கோ அல்லது ஆளுநருக்கோ உத்தரவிடும்படியான எந்தச் சட்டமும் கிடையாது.
'இவரை நீதிபதியாகத் தேர்வு செய்தால், நல்லவிதமாகத் தீர்ப்பு கொடுப்பாரா' என்ற நீதி சார்ந்த பார்வையில்தான் சம்பந்தப்பட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்கிறது கொலிஜியம் அமைப்பு. அப்படிப் பரிந்துரை செய்யப்பட்ட நபர் நேர்மையானவரா, அவர்மீது குற்ற வழக்கு ஏதேனும் உள்ளதா என்பதையெல்லாம் சட்ட அமைச்சகம்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. கொலிஜியம் பரிந்துரைக்கும் நபர் மீது ஏதேனும் வழக்குகள் இருந்து, அவரது நேர்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டால்கூட சட்ட அமைச்சகம் அது குறித்து கருத்துதான் சொல்ல முடியுமே தவிர... `இவரை நியமனம் செய்யக் கூடாது’ என்று உத்தவிட முடியாது. மாறாக கொலிஜியம் அமைப்பு, தன் பரிந்துரையைச் செயல்படுத்துவதில் உறுதிகாட்ட முடியும்.
உதாரணமாக, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஒருவரை, இன்றைய தி.மு.க அரசு வேறு ஒரு துறைக்கு மாற்றம் செய்ததாக வைத்துக்கொண்டால், 'இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது' என்று நாம் வேண்டுமானால் கிசுகிசு பேச முடியும். ஆனால், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, எங்கே வேலை கொடுத்தாலும் செய்ய வேண்டும் என்றுதான் சட்டம் சொல்கிறது. எனவே, சட்டப்படி இந்த நடவடிக்கை சரியானதுதான்.

எனக்குத் தெரிந்தவரையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவரும்போது, '10% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு எதையும் நாடு முழுவதும் யாரும் எடுத்து விசாரிக்கக் கூடாது' என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருந்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கின்போது, 10% இட ஒதுக்கீட்டுக்கு தடை உத்தரவைப் பிறப்பித்தார் சஞ்ஜிப் பானர்ஜி. இதுகூட உச்ச நீதிமன்றத்திலுள்ள கொலிஜியம் நீதிபதிகளுக்கு ஆட்சேபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக இப்படியொரு நடவடிக்கையைக் கையாண்டிருக்கலாம். உண்மை என்னவென்று கொலிஜியத்துக்கு மட்டுமே தெரியும்.
அதேபோல், சஞ்ஜிப் பானர்ஜி எழுதிய கடித வரியையும் சிலர் இங்கே சர்ச்சையாக்கிவருகிறார்கள். அதில், 'சாரி... பல நேரங்களில் உங்களின் வேலை நேரத்தையும் தாண்டி நான் உங்களிடம் வேலை வாங்கியிருக்கிறேன். நான் சொல்கிற நேரத்தில் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்ற இந்த ஆதிக்க உணர்வை என்னால்கூட உடைக்க முடியவில்லை. நானேகூட அதைச் செயல்படுத்திவிட்டேன்' என்று தன் கீழ் பணிபுரிந்த ஊழியர்களுக்குத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்தியாவிலுள்ள எந்தவொரு நீதிமன்றமும் ஒன்றுக்கொன்று குறைந்தது இல்லை. பணி இடமாற்றம் செய்யப்படுவதால், சம்பந்தப்பட்டவர்களின் பொருளாதார நிலையிலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை. அடுத்து நீதிமன்றப் பணிகளுக்கு வரும்போதே, நீதி அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு உட்படுகிறேன் என ஒப்புதல் கொடுத்துத்தான் பணிக்கு வருகிறார்கள். எனவே, இது போன்ற நடவடிக்கைகளின்போது அதன் பின்னணியில் அரசியல் சாயம் பூசுவது தேவையற்ற ஒன்று'' என்கிறார் அழுத்தமாக.