Published:Updated:

சசிகலாவுக்கும் குருமூர்த்திக்கும் பகை ஏன்? விதைத்தது யார்?

முதல்வர் ஆக ஆசைப்பட்ட சசிகலாவுக்கு எதிராக பன்னீரை கொம்பு சீவி விட்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. அவரைப் பற்றி 1980-களிலேயே எம்.ஜி.ஆரிடம் புகார் சொன்னவர் சசிகலா. நடராசன் முன்னையிட்ட தீதான் பன்னீரின் தர்மயுத்தமாக மாறியது!

சசிகலா, குருமூர்த்தி
சசிகலா, குருமூர்த்தி ( விகடன் )
"ஜெயலலிதாவை 30 ஆண்டுகளாக என் மனைவி சசிகலா தோளில் சுமந்தார். ‘குடும்ப அரசியல் செய்கின்றனர்’ என்று கூறுகின்றனர். அன்றைக்கு ஜெயலலிதாவைக் குருமூர்த்தியா காப்பாற்றினார்? எங்கள் குடும்பம்தானே காப்பாற்றியது! நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம். பி.ஜே.பி-யில் எந்தப் பதவியும் வகிக்காத ‘துக்ளக்’ குருமூர்த்தி அரசியல் செய்யும்போது, ஜெயலலிதாவைப் பாதுகாத்த நாங்கள் அரசியல் செய்யக்கூடாதா? திராவிடர்களுக்கு எதிராகப் பிராமணர்களுடன் சேர்ந்து குருமூர்த்திதான் சதி செய்கிறார்."
2017 பொங்கல் விழாவில்  நடராசன்...
2017 பொங்கல் விழாவில் நடராசன்...
விகடன்

- ஜெயலலிதா மறைந்து ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் 2017 பொங்கல் விழாவில் இப்படிப் பொங்கினார் நடராசன்.

`நீங்க போய் சமாதியில் உட்காருங்க.. வழிபிறக்கும்'- ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

ஆடிட்டர் குருமூர்த்திக்கு எதிராக சசிகலா குடும்பத்தின் சீற்றம் இப்போது ஆரம்பித்தது அல்ல. 1980-களிலேயே தொடங்கிவிட்டது. அப்போது நடந்த ஒரு ஃபிளாஷ்பேக்கை திரும்பிப் பார்ப்போம்.

வலம்புரி ஜான்
வலம்புரி ஜான்

ஜெயலலிதா அ.தி.மு.க-வில் அடியெடுத்து வைத்த பிறகு அவரை ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார் எம்.ஜி.ஆர். அவரோடு ராஜ்யசபாவுக்குப் போன இன்னொருவர் வலம்புரி ஜான். இருவரும் அ.தி.மு.க எம்.பி-களாக நாடாளுமன்றத்தில் காலடி வைத்தார்கள். எம்.ஜி.ஆர் நடத்திக்கொண்டிருந்த `தாய்' பத்திரிகையின் ஆசிரியராக வலம்புரி ஜான் இருந்தார். ஜெயலலிதா நாடாளுமன்றத்தில் செயல்படுவதற்கான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வலம்புரி ஜான்தான் வழங்கினார். அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதா தனி ஆவர்த்தனம் நடத்த ஆரம்பித்தார்.

கட்சிக்குள் ஜெயலலிதாவைக் கொண்டுவந்த எம்.ஜி.ஆரே, அவரைக் கண்காணிக்க நினைத்தார். `ஜெயலலிதா அருகிலேயே ஓர் ஒற்றர் இருந்தால் நல்லது’ என நினைத்தபோது, சசிகலாவின் பெயர் அடிப்பட்டது. அவர் அரசு அதிகாரி நடராசனின் மனைவி எனத் தெரிந்ததும், அவரையே உளவாளியாக நியமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு பெண்ணைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை உளவுபார்த்தார்.

ஜெயலலிதாவுடன் சசிகலா...
ஜெயலலிதாவுடன் சசிகலா...

இந்த விஷயங்களை வலம்புரி ஜான் எழுதிய ‘வணக்கம்’ புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஜெயலலிதாவிடம் சசிகலா குடும்பம் நெருங்க ஆரம்பித்த பிறகு அவருக்கு வேண்டப்பட்டவர்களை வெளியேற்ற நினைத்தார்கள் சசிகலா குடும்பத்தினர். ஜெயலலிதாவின் பி.ஏ பிரேமா தொடங்கி ஒவ்வொருவராக கழற்றிவிடப்பட்டார்கள். அதில் வலம்புரி ஜானுக்கும் குறி வைக்கப்பட்டது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அப்படியான காலகட்டத்தில் ஒருநாள்... எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம். எம்.ஜி.ஆர் வரச் சொன்னதால் அவரைப் பார்ப்பதற்காக வீட்டின் வரவேற்பறையில் காத்திருந்தார் 'வார்த்தைச் சித்தர்' வலம்புரி ஜான். இப்படிப் பலமுறை எம்.ஜி.ஆர் அழைப்பதுண்டு. அப்போது, எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டு மாடிப்படிகளிலிருந்து சசிகலா இறங்கி வந்து கொண்டிருந்தார். தி.நகர் எம்.ஜி.ஆர் அலுவலகத்தில் சசிகலாவை இப்படிப் பலமுறை பார்த்திருக்கிறார். முதன்முறையாக ராமாவரம் தோட்டத்தில் அவரைப் பார்த்ததும் வலம்புரி ஜானுக்கு அதிர்ச்சி.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

யோசனையோடு மாடிக்குப் போனார் வலம்புரி ஜான். அவரைப் பார்த்ததும் தலையணைக்குக் கீழே இருந்த ஒரு பேப்பரை எடுத்து அவரிடம் நீட்டினார் எம்.ஜி.ஆர். `பத்திரிகைச் சுதந்திரம் பறிபோகிறது’ எனத் தலைப்பிட்டு வெளியிடப்பட்ட கண்டனக் கூட்டத்துக்கான விளம்பர நோட்டீஸ் அது. சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் கூட்டத்தில் `பத்திரிகையாளர்கள் சோ ராமசாமி, அருண் ஷோரி, வலம்புரி ஜான் ஆகியோர் உரையாற்றுவார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சில குறிப்புகளும் எழுதப்பட்டிருந்தன. அந்த எழுத்துகளைப் பார்த்ததுமே, ‘அது ஜெயலலிதாவின் கையெழுத்து’ என்பது வலம்புரி ஜானுக்குப் புரிந்துவிட்டது.

அதைப் படித்துவிட்டு நிமிர்ந்தபோது, ‘‘எதற்காக இந்தக் கூட்டம்?’’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘இந்தியன் எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்படுகிற கூட்டம்’’ என்றார் வலம்புரி ஜான். ‘‘இந்தக் கூட்டத்துக்கு உங்களை யார் அழைத்தது. நீங்கள் ஏன் போனீர்கள்?’’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘சோ சார்... அழைத்தார். ஆனால், நான் போகவில்லை’’ என்றார் வலம்புரி ஜான்.

மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி
மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி

‘‘நிச்சயமாக நீங்கள் கலந்துகொள்ளவில்லையா?’’ என்று திருப்பிக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘‘நீங்கள் இந்த மாநிலத்தின் முதல்வர். எந்த ஏஜென்ஸி வழியாகவும் இந்த உண்மையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்’’ என வலம்புரி ஜான் சொன்னதும், அதுவரை உஷ்ணத்தோடு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர் சாந்தம் ஆனார். ‘‘ஏன் கலந்துகொள்ளவில்லை?’’ என எம்.ஜி.ஆர் கேட்டதும், ‘‘சோ சார்... பேசுகிறார். அதில் கலந்து கொண்டால் அவர் பேச்சை மறுத்துப் பேச வேண்டி வரும் என்பதால் போகவில்லை’’ என்று பதில் சொன்னார் ஜான். ‘‘ஸாரி’’ எனச் சொல்லி வலம்புரி ஜானை அனுப்பி வைத்த எம்.ஜி.ஆர், மறக்காமல் அந்த நோட்டீஸைத் திரும்ப வாங்கிக் கொண்டார்.

ராஜீவ் காந்தி ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழலை `இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் மூலம் குருமூர்த்தி அம்பலப்படுத்தினார். இதற்காகத் தேசத் துரோகக் குற்றச்சாட்டில், 1987 மார்ச் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்துத்தான் கண்டனக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க எம்.பி-யும் எம்.ஜி.ஆரின் ‘தாய்’ பத்திரிகை ஆசிரியருமான வலம்புரி ஜான் அழைக்கப்பட்டிருந்தார். அ.தி.மு.க-வும் காங்கிரஸும் அப்போது கூட்டணிக்கட்சிகள். மாநிலத்தில் எம்.ஜி.ஆரும் மத்தியில் ராஜீவ் காந்தியும் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள்.

ராஜீவ் காந்தியுடன் எம்.ஜி.ஆர்
ராஜீவ் காந்தியுடன் எம்.ஜி.ஆர்
விகடன்

இந்தச் சூழலில் நடந்த அந்தக் கூட்டத்தை ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். ‘போபர்ஸ் ஊழல் குறித்து எழுதிய குருமூர்த்தி மீது ராஜீவ் காந்திக்குக் கோபம் உண்டு. அப்படிப்பட்டவரின் கைதைக் கண்டித்து நடத்தப்படும் கூட்டத்துக்கு வலம்புரி ஜான் சென்றால், ராஜீவ் காந்தி உங்களைப் பற்றி என்ன நினைப்பார்? இந்தக் கூட்டத்துக்கு அ.தி.மு.க எம்.பி எப்படிப் போகலாம்?’ என எம்.ஜி.ஆரிடம் பற்ற வைத்தார் ஜெயலலிதா. அந்தக் கூட்டத்துக்கான நோட்டீஸில் தன் கைப்பட குறிப்புகள் எழுதி, உயிர்த்தோழி சசிகலா மூலம் அனுப்பியிருந்தார் ஜெயலலிதா. அந்த பேப்பரைக் கொடுக்கத்தான் சசிகலா அன்றைக்கு ராமாவரம் தோட்டத்துக்கு வந்து போனார்.

ஜெயலலிதாவுக்கு மந்திராலோசனை சொல்கிறவர் வலம்புரி ஜான் என நினைத்துக்கொண்டு இந்த இருவருக்கும் இடையே பெரிய தடுப்புச் சுவரை எழுப்பினார் நடராசன். அதற்காக வலம்புரி ஜானையும், குருமூர்த்தியையும் ஒரே கல்லில் வீழ்த்துவதற்கு, கண்டனக் கூட்டத்தை வைத்து இப்படியொரு சதுரங்கம் ஆடினார் நடராசன்.

நடராசன், சசிகலா, குருமூர்த்தி
நடராசன், சசிகலா, குருமூர்த்தி
விகடன்
`சைலன்ட் எடப்பாடி; கொந்தளித்த ஓ.பி.எஸ் டீம்!' - பொதுக்குழுவில் அனல்பறந்த சசிகலா விவகாரம்

2017-ம் ஆண்டுக்கு வருவோம். அப்போது குருமூர்த்தியும் நடராசனும் என்ன சொல்கிறார்கள்?

‘‘சசிகலா எதற்கும் தகுதியில்லாதவர்!’’ - குருமூர்த்தி

‘‘குருமூர்த்தி அரசியல் செய்யும்போது நாங்கள் அரசியல் செய்யக்கூடாதா?’’ - நடராசன்

2019-ம் ஆண்டு வருவோம்... துக்ளக் பொன்விழா சிறப்புக் கூட்டத்தில் நேற்று பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, "'சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்றபோது ஓ.பன்னீர் செல்வம் என்னிடம் வந்தார். நான் கூறியதை அப்படியே கூற முடியாது. நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார். அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கும் நான்தான் காரணம். எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆட்சி பாவமான ஆட்சி'' என்றெல்லாம் சொன்னார். இந்த விஷயம் பிரச்னையான பிறகு, ''ஓ.பி.எஸ்ஸிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அ.தி.மு.க-வினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில்தான் கேட்டேன்'' என ட்விட்டரில் பதிவு போட்டார் குருமூர்த்தி.

நடராசன், குருமூர்த்தி
நடராசன், குருமூர்த்தி
விகடன்
6 ஆண்டு தேர்தல் தடை அம்போ... சசிகலா முதல்வர் ஆவார் எப்படி? 
பி.ஜே.பி போட்ட பாதை அப்படி!

இது முதன்முறையல்ல. ஏற்கெனவே குருமூர்த்தி அ.தி.மு.க-வினரை ‘ஆண்மையற்றவர்கள்’ என்ற பொருள்படும் வார்த்தையில் சொல்லிவிட்டு ‘திராணியற்றவர்கள் என்ற பொருளில்தான் சொன்னேன்’ என்றார். இப்போது மீண்டும் அவர் சொன்ன வார்த்தைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் எதிர்வினை ஆற்றியிருக்கிறார். "குருமூர்த்தியின் பேச்சு ஆணவத்தின் உச்சம், திமிர்வாதம். இவ்வளவு திமிர் கூடாது. நாவடக்கம் தேவை, பல சமயங்களில் அ.தி.மு.க-வின் மீது கைவைத்து அதனால் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். ஒருவர் தான் ஆண் மகன் இல்லை என்றால்தான் சந்தேகம் ஏற்பட்டு மற்றவர்களை, நீ ஆம்பளையா...? நீ ஆம்பளையா...? என்று கேட்பார். முதலில் இவர் ஆண் மகனா என்பதற்கு பதில் சொல்லட்டும்" என்றார் ஜெயக்குமார்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |