Published:Updated:

விஜயகாந்தின் வாக்குகள் : தி.மு.க, அ.தி.மு.கவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்! - என்ன நடந்தது?

ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த்
ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த்

தி.மு.க மற்றும் அ.தி.மு.கவில் நிகழ்ந்த இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமாக ஒரேயொரு விஷயம்தான் இருந்திருக்கிறது. அது என்ன?

”நம் கட்சியின் சார்பாக மாநாடுகள் நடக்கும்போது, தலைவர் கலைஞர் அவர்கள் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதுவது வழக்கம். ஆனால், இந்த மாநாட்டுக்கு எழுதிய கடிதங்களைப் போல வேறு எந்த மாநாடுக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் இவ்வளவு கடிதங்களை எழுதிக் குவித்தது இல்லை. திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியில் இருக்கக்கூடிய நண்பர்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தில் இருக்கக்கூடிய அத்தனை இளைஞர்களுமான மாநாடுதான் இந்த மாநாடு என்பதே அதற்குக் காரணம்”

2007 டிசம்பரில் திருநெல்வேலியில் நடந்த தி.மு.க இளைஞரணி மாநாட்டில், தி.மு.கவின் தற்போதைய தலைவர் மு.கஸ்டாலின் பேசிய வார்த்தைகள் இவை.

இது ஒருபுறம் என்றால்,

''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு புது இரத்தம் பாய்ச்ச வேண்டும், புத்திளமை காண வேண்டும் என்கிற நோக்கத்தில் தமது சிந்தனையில் உதித்ததுதான் கழக இளைஞர் & இளம்பெண்கள் பாசறை''

2008-ம் ஆண்டு அ.தி.மு.கவில் தொடங்கப்பட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உருவாக்கம் குறித்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய வார்த்தைகள் இவை.

மேற்கண்ட இரண்டு உரைகளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதற்கு முன்பாக இது தொடர்பான சில சம்பவங்களைப் பார்ப்போம்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
வி.ஶ்ரீனிவாசுலு

இளைஞரணி முதல் மாநில மாநாடு ;

1980-ம் ஆண்டு தி.மு.கவில் இளைஞரணி தொடங்கப்படுகிறது. வெள்ளி விழா காணும்வரையிலும் கூட அந்த அணியின் சார்பாக, மாநில மாநாடு தனியாக நடத்தப்படவில்லை. மாவட்ட, மண்டல அளவிலும் மாநில மாநாட்டின் ஒரு பகுதி நிகழ்வாகவும் மட்டுமே இளைஞர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்தநிலையில், இளைஞரணிக்கென்றே தனியாக முதல் மாநில மாநாடு, அதுவும் அந்த அணி உருவாக்கப்பட்டு 27 ஆண்டுகள் கழித்து மிகப் பிரமாண்டமாக திருநெல்வேலியில் இரண்டு நாள்கள் நடத்தப்பட்டன. மாநாடு தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலாகவே, மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து தினந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நேரடியாகவோ அல்லது உதவியாளர்கள் மூலமாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி கண்காணித்து வந்தார் மு.க.ஸ்டாலின். அதேபோல, மாநாடுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாகவே திருநெல்வேலிக்கு வந்திறங்கினார் ஸ்டாலின். அமைச்சர் பெருமக்கள் சூழ நேரடியாக மாநாட்டுப் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டே இருந்தார்.

''புதிது புதிதாக தலைவர்கள் வருகிறார்கள், கட்சிகளைத் தொடங்குகிறார்கள். ஏராளமான இளைஞர்களைச் சேர்க்கிறார்கள். இவர்களுக்கு முதல்வர் பதவி மட்டுமே லட்சியமாக இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வரும் இளைஞர்களும் தனது பெயருடன் குறிப்பிடுவதற்கு ஏதாவது பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இன்றைய காலத்தில் நான் இந்தக் கட்சியின் இன்ன பொறுப்பில் இருந்து இத்தகைய பணிகளை செய்கிறேன் என்றால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. இவர்களை புதிய கட்சிகளை தொடங்குபவர்கள் தவறான வழிக்கு இட்டுச் சென்றுவிடக் கூடாது என்ற கவலை எனக்கு அதிகரித்துள்ளது''
மு.க.ஸ்டாலின் (செயல்வீரர்கள் கூட்டங்களில் அப்போது)

மாநாடு அறிவிப்புக்குப் பிறகு, மாவட்டந்தோறும் நிர்வாகிகளைச் சந்தித்து செயல்வீரர் கூட்டங்களை நடத்தினார். அதுவே ஒரு பொதுக்கூட்டம் போல இருந்தது. இதுகுறித்து, ஸ்டாலினே தன் மாநாட்டு உரையிலும் குறிப்பிட்டிருப்பார். அந்த மாநாட்டுக்காக அரசு மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டது. தமிழகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர் அல்லது தி.மு.கவினரால் அழைத்து வரப்பட்டனர். இளைஞரணி அணிவகுப்பு, 28 தலைப்புகளில் பேருரைகள் என மிக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது அந்த மாநாடு.

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா

இளைஞர் & இளம்பெண்கள் பாசறை தொடக்கம்!

1972-ம் ஆண்டு அக்டோபரில் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.கவில், கட்சி தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் வரை இளைஞர்களுக்கென்று தனியான அமைப்பு இல்லை. தங்களின் அரசியல் எதிரியான தி.மு.கவில், 89-ல் தொடங்கப்பட்ட பா.ம.கவில் கூட இளைஞர்களுக்கென்று தனியான அணி இருந்தபோதும் அ.தி.மு.க தலைமை அதுகுறித்து பெரியளவில் கவலைப்படவில்லை. ஆனால், 2008-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி வேகவேகமாக இளைஞர் & இளம்பெண்கள் பாசறை என்கிற அமைப்பு உருவாக்கப்படுகிறது. அ.தி.மு.க நிர்வாகிகள், உறுப்பினர்களின் வீடுகளில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் கண்டிப்பாக கட்சியின் பாசறையில் இணையவேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் அறிவுறுத்தப்படுகிறது. நிர்வாகிகள் பட்டியல் பின்னால் அறிவிக்கப்படும், பாசறை நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ சீட்டு வழங்கப்படும் என்றும் அறிவித்தார் ஜெயலலிதா. அவரின் உத்தரவுப்படி 38 லட்சம் பேர் பாசறையில் இணைந்ததாக அப்போது அ.தி.மு.கவால் சொல்லப்பட்டது.

''இந்தப் பாசறையில் இளம் வீரர்களும், வீராங்கனைகளும் நமது உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகளாக விளங்கி வருகின்றனர் – நாளைய கழகத்துக்கு நாற்றங்காலாகவும் இந்தப் பாசறை திகழ்ந்து வருகிறது – நாடு, மொழி, இனம், இந்த மூன்றையும் உயர்த்தும் எண்ணத்தை இளம் நெஞ்சங்களில் பதிக்கும் முற்போக்குக் களமான இந்தப் பாசறையில், தமது தலைமையினால் ஈர்க்கப்பட்டு லட்சோப லட்சம் இளம் வீரர்களும், வீராங்கனைகளும் புதிய உத்வேகத்துடனும், மாறாத உறுதியுடனும், லட்சிய நோக்கத்துடனும், விசுவாசத்துடனும் கழகப் பணிகளை ஆற்றி வருகின்றனர்''
ஜெயலலிதா (2016-ம் ஆண்டு)

தற்போது ஐம்பது லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, 'இளம்பெண்களுக்கு என்று பாசறை அமைத்தது, இந்தியாவில், ஏன் உலகிலேயே எங்கள் அம்மா மட்டும்தான்' என அப்போது அ.தி.மு.கவினர் மார்தட்டிக் கொண்டனர். 2013-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் மார்ச் ஏழாம் தேதி, ''பாசறை எழுச்சி தினமாகக் கொண்டாடவும் ஜெயலலிதாவால் அறிவுறுத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டும் வருகிறது.

தி.மு.க மற்றும் அ.தி.மு.கவில் மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளுக்கும் அந்தக் கட்சியின் தலைமைகள், வெளியில் ஒரு காரணத்தைச் சொன்னாலும், வேகவேகமாக இந்தப் பணிகள் நடைபெற முக்கியக் காரணமாக அமைந்தது ஒரேயொரு விஷயம்தான். அது வேறொன்றும் இல்லை, நடிகர் விஜயகாந்தின் அரசியல் வருகைதான்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

தே.மு.தி.கவின் வருகை:

2000-ம் ஆண்டில் தன் மன்றக் கொடி அறிமுகம், அதிலிருந்தே விஜயகாந்தின் படங்களில் அரசியல் வசனங்கள் அனலாய்த் தகிக்க ஆரம்பித்தன. தவிர, 2004-ம் ஆண்டு தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்த விஜயகாந்த், 2005 செப்டம்பர் 14 மதுரையில் தன் கட்சியைத் தொடங்கினார். அவரின் அந்த தொடக்க விழா நிகழ்வுக்குக் கூடிய மக்கள் கூட்டம், அதுவரை தமிழக அரசியல் தனி ராஜ்யம் செய்துகொண்டிருந்த இருபெரும் திராவிடக் கட்சிகளை ஆட்டம் காணச் செய்தது. அதைவிட, 2006 சட்டமன்றத் தேர்தலில், 232 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டு, அவர் பெற்ற, 8.45 சதவிகித வாக்கு வங்கிதான் மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளுக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.

தே.மு.தி.க கட்சி: தொடக்கம், வளர்ச்சி, வீழ்ச்சி - ஒரு அலசல் ரிப்போர்ட்!

அதற்கு முன்பாக, 91-ல் பா.ம.க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆறு சதவிகித வாக்கு வாக்கியிருந்தது. ஆனால், அவரின் கட்சிக்கு வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு இருந்ததால் இரண்டு கட்சிகளும் பெரியளவில் பதறவில்லை. அதேபோல, 96-ல் ம.தி.மு.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு, 5.7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அவையிரண்டையும் விட, தே.மு.தி.மு தனியாக வாங்கிய 8 சதவிகித வாக்குகள் பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக அமைந்தன. காரணம், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபிறகு இளைஞர்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கு, கூட்டம் கூட்டமாக அவரின் கட்சியில் இணைந்த இளைஞர்கள் நிச்சயமாக இரண்டு கட்சித் தலைமைகளின் தூக்கத்தைக் கெடுத்திருப்பார்கள் என்றால் அது மிகையில்லை. இதுகுறித்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் கணபதி,

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)
கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

கணபதி (மூத்த பத்திரிகையாளர்)

'' நிச்சயமாக இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் விஜயகாந்தின் வருகை மற்றும் அவர் வாங்கிய வாக்கு சதவிகிதமும்தான் காரணம். அவர் வாங்கிய 8 சதவிகித வாக்குகளில், பொது வாக்குகளைத் தவிர, தி.மு.க மற்றும் அ.தி.மு.க வாக்குகளையும் கணிசமாகப் பிரித்திருந்தார். அதேபோல. புதிய வாக்காளர்களும் விஜயகாந்தை நோக்கி வந்தார்கள். எப்போதும் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் ஆக்டிவ்வாக இருந்ததால், அவரால் இளைஞர்களைக் கவர்ந்திழுக்க முடிந்தது. அதனால், 'இளைஞர் அனைவரும் விஜயகாந்த் பின்னால் போய்விடுவார்களோ' என தி.மு.கவும், அ.தி.மு.க பயந்தன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு தொடங்கி வட மாவட்டங்களில் அ.தி.மு.கவின் வாக்கு வங்கியாக இருந்த பட்டியல் சமுதாய இளைஞர்கள் சாரைசாரையாக விஜயகாந்த் கட்சியில் சேர்ந்தது ஜெயலலிதாவை அச்சமடையச் செய்தது. அதேபோல, தி.மு.கவின் வெற்றிவாய்ப்பை பல இடங்களில் டைவர்ட் செய்தது தே.மு.தி.கதான் என தி.மு.க தலைமை கருதியது. அதனடிப்படையில்தான் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இளைஞரணியை முன்னிறுத்தி செயல்பட ஆரம்பித்தனர்''

தே.மு.தி.க முதல் தேர்தலில் பெற்ற வாக்குகள் இரண்டு பிரதான கட்சிகளில் நிகழ்த்திய மாற்றம் குறித்துப் பார்த்தோம். இதில், தே.மு.தி.க அப்போது ஏற்படுத்திய தாக்கத்தை மட்டுமல்லாது 'இளைஞர்கள் விஜயகாந்த் பக்கம் செல்கிறார்கள்' என்பதை அறிந்ததும் உடனடியாக அவர்களைத் தக்கவைக்க தி.மு.க, அ.தி.மு.க மேற்கண்ட நடவடிக்கைகளையும் நாம் கவனித்தே ஆகவேண்டும். கடந்த அறுபது ஆண்டுகளாக, யாரையும் விடாது இரண்டு கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி செலுத்திக் கொண்டிருப்பதற்கான காரணமாகவும் இது இருக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு