Published:Updated:

நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஆறு பேரின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?!

ஆறு பேர் விடுதலை

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாகச் சிறையிலிருந்த ஆறு பேரும் விடுதலை ஆகியிருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?

நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஆறு பேரின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?!

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாகச் சிறையிலிருந்த ஆறு பேரும் விடுதலை ஆகியிருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன?

Published:Updated:
ஆறு பேர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்த முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஆறு பேரும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் நளினி, ரவிச்சந்திரன் தவிர மற்ற நால்வரும் வெளிநாட்டினர் என்பதால், திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக சிறையிலிருந்த ஆறு பேரும் விடுதலையாகியிருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவெனப் பார்ப்பதற்கு முன்பாக இந்த வழக்கு கடந்துவந்த பாதையைப் பார்ப்போம்...

எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை

வழக்கு கடந்துவந்த பாதை?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்தனர். கடந்த 2018, செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஏழு பேரையும் விடுதலை செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆளுநர் அந்த மனுமீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்கவே, அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், பேரறிவாளன். தொடர்ந்து ஆளுநராக வந்த ஆர்.என்.ரவியும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கே இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், நீதிமன்றம் அதை மறுத்த நிலையில், தமிழக அமைச்சரவைத் தீா்மானத்தின்மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, கடந்த மே 18-ம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்தது. அதைத் தொடர்ந்து சிறையிலிருந்த மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி ஆகிய இருவரும் தங்களையும் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா்.

இந்த விவகாரத்தை விசாரித்த உயர் நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை என்றும் கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், நளினி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவர்களைத் தொடர்ந்து, ராபர்ட் பயஸ், ஜெயக்குமாா், சாந்தன் ஆகியோரும் நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனுவுடன் தங்களை இடையீட்டு மனுதாரா்களாகச் சோ்க்கக் கோரியும், பேரறிவாளன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனா். இந்த நிலையில், வழக்கை விசாரித்துவந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆறு பேருக்கும், பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்பு பொருந்தும் என்பதால் அனைவரையும் விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தனர். ஆறு பேரில் ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் இருவரும் புழல் சிறையிலிருந்தும், முருகன், சாந்தன் இருவரும் வேலூர் சிறையிலிருந்தும் விடுதலைசெய்யப்பட்டனர். நளினி, ரவிச்சந்திரன் ஏற்கெனவே பரோலில்தான் இருந்தனர். அவர்களில் நளினி வேலூர் சிறையிலிருந்தும், ரவிச்சந்திரன் மதுரைச் சிறையிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்களின் அடுத்தகட்ட திட்டங்கள் என்னவென்பது குறித்து விசாரித்தோம்...

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள சூரப்பன்நாயக்கன்பட்டிதான் ரவிச்சந்திரனின் சொந்த ஊர். விடுதலை ஆன உடனேயே தன்னுடைய ஊரையும், தோட்டத்தையும் சென்று சுற்றிப்பார்த்திருக்கிறார் ரவிச்சந்திரன். தொடர்ந்து தன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் பேசும்போது, ``பல்லாண்டுகளாகச் சிறையிலேயே இருந்ததால், இந்தப் புறச்சூழலை அடாப்ட் செய்துகொள்வதற்கே குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். அதற்கிடையில் தோட்டத்தில் விவசாயப் பணிகளையும், விவசாயம் தொடர்பான புத்தகங்களைப் படிக்கவும் முடிவுசெய்திருக்கிறேன்'' என்றார். நளினியைப் பொறுத்தவரை அவரின் கணவர் முருகன் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பதால், அவரை மீட்பதற்கான பணிகளில் கவனம் செலுத்தப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, தன் மகள் ஹரித்ராவுடன் லண்டனுக்குச் செல்வதற்கும் திட்டமிட்டிருக்கிறார்.

இவர்கள் இருவரைத் தவிர, மற்ற நால்வரும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருப்பதால் அவர்களின் நிலை அடுத்து என்னவாக இருக்கும்?

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரபுவிடம் பேசினோம்.

``முதலில் அவர்களுக்கு எங்கு குடியுரிமை இருக்கிறது என குடியுரிமை சரிபார்ப்பு செய்ய வேண்டும். 32 வருடங்களுக்கு முன்பாக அவர்கள் அகதிகளாக வந்ததால், சொந்த ஊருக்கு அவர்களின் புகைப்படங்களை அனுப்பி, தகவல்கள் சரிபார்ப்பு நடைபெறும். அவர்களின் உறவினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்கிற தகவல்களெல்லாம் சேகரிக்கப்படும். வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றால் முதலில் இவர்களுக்கு பாஸ்போர்ட் வேண்டும். அதற்கு ` மற்ற எந்த வழக்கும் இவர்களின்மீது இல்லை. இவர்கள் நாட்டைவிட்டுப் போவதால் எந்தச் சிக்கலும் இல்லை' என மத்திய அரசாங்கம் ஒப்புதல் கொடுக்க வேண்டும். இந்திய அரசு அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்குத்தான் விரும்பும். அதற்கான முயற்சிகளைத்தான் எடுக்கும்'' என்கிறார்.

வழக்கறிஞர் பிரபு
வழக்கறிஞர் பிரபு

ஆனால், முருகன் லண்டனில் தன் மகள் ஹரித்ரா இருப்பதால் அங்கேயும், ஜெயக்குமார் தன் சகோதரருடன் ஜெர்மனிக்கும், ராபர்ட் பயஸ் தன் மகன் இருக்கும் நெதர்லாந்துக்கும், சாந்தன் தன் தாயார் இருக்கும் இலங்கைக்குச் செல்லவும் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.