Published:Updated:

அதிமுக-விலோ குழப்பம்... குஜராத்தில் பொங்கல் கொண்டாட்டம் - ஓ.பி.எஸ் பிளான்தான் என்ன?!

குஜராத்தில் ஓ.பி.எஸ்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குத் தாமதமாகும் பட்சத்தில் இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தால், சின்னம் முடக்கிவைக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

அதிமுக-விலோ குழப்பம்... குஜராத்தில் பொங்கல் கொண்டாட்டம் - ஓ.பி.எஸ் பிளான்தான் என்ன?!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குத் தாமதமாகும் பட்சத்தில் இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தால், சின்னம் முடக்கிவைக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

Published:Updated:
குஜராத்தில் ஓ.பி.எஸ்

பன்னீர், எடப்பாடி இடையேயான மோதலால் அ.தி.மு.க  இரண்டு துண்டாகிக் கிடக்கிறது. பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருவதால் அதன் இறுதித் தீர்ப்பை எதிர்நோக்கி இரு தரப்பும் தவம் கிடக்கிறது. இந்தச் சூழலில், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

ஜி.கே.வாசன் - ஓ.பி.எஸ்
ஜி.கே.வாசன் - ஓ.பி.எஸ்

இதேபோல, இந்தத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் கடந்த முறை த.மா.கா போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் த.மா.கா போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக கேட்கவே, இடைத்தேர்தலில் போட்டியிட விட்டுக்கொடுத்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் - அ.தி.மு.க இடையே நேரடிப் போட்டி உருவாகியிருக்கிறது. ஆனால், பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அ.தி.மு.க சார்பில் யாரை வேட்பாளராகக் களம் இறக்குவது என்பதில் சிக்கல் நீடித்துவருகிறது. ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரமிருக்கிறது என்று பன்னீர் தரப்பு கூறிவரும் நிலையில், இடைக்காலப் பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரமிருக்கிறது என்று எடப்பாடி கூறிவருகிறார்.

குஜராத் நிகழ்ச்சியில்
குஜராத் நிகழ்ச்சியில்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குத் தாமதமாகும் பட்சத்தில் இரண்டு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தால், சின்னம் முடக்கிவைக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இரண்டு அணிகளும் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்திருப்பதால், இந்தக் குழப்பம் அதிமுக தொண்டர்களைக் கவலைகொள்ளச் செய்திருக்கிறது. இதேபோல, இருதரப்பினரும் தங்களுக்கு ஆதரவுகோரி  ஜி.கே வாசன், ஜான் பாண்டியன்,  அண்ணாமலை  உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்திருக்கின்றனர். இதனால், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், அதிமுக-வில் நடக்கும் குழப்பமான சூழலை  தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைக்கும் பா.ஜ.க-வினர் இடைத்தேர்தலில் களம் இறங்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அ.தி.மு.க-வில் இடைத்தேர்தல் களேபரங்கள்  கொடிகட்டிப் பறக்கும் நிலையில், ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 22-ம் தேதி குஜராத் புறப்பட்டுச்  சென்றார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில், கர்ணாவதி தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஈரோடு இடைத்தேர்தலுக்குத் தயார் ஆகும் வகையில் எடப்பாடி அணி விருப்ப மனு விநியோகம் செய்யும் பணியைத் தொடங்கிவிட்டது. ஆனால், பன்னீரோ தேர்தலைச் சந்திக்க எந்த ஏற்பாடும் செய்யாமல் இருப்பது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், பன்னீரின் நெக்ஸ்ட் பிளான் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ்
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ்

இது குறித்து ஓ.பி.எஸ்-ஸுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரிக்கையில், "இடைத்தேர்தலில் அ.தி.மு.க சின்னத்தை இருவர் கோரும்பட்சத்தில் அது கண்டிப்பாக முடங்கும். ஆகையால், சுயேச்சையாகத்தான் போட்டியிட வேண்டுமென்பது பன்னீர் செல்வத்துக்கு நன்றாகத் தெரியும். குஜராத் செல்லும் முன்பாக பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து பேசிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்டால் ஆதரவு அளிக்கும் மனநிலையில்தான் இருக்கிறார். கட்சியையும், சின்னத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் இருப்பதால், இடைத்தேர்தலில் அவர் முழுக் கவனம் செலுத்தவில்லை. நீதிமன்ற வழக்குதான் அவரின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. ஒருவேளை பா.ஜ.க இடைத்தேர்தலில் வேட்பாளர்களை அறிவிக்கவில்லையென்றால் கண்டிப்பாக ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து வேட்பாளர்கள் களம் காண்பார்கள். இடைத்தேர்தலில் பா.ஜ.க-வின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத்  தெரிவிப்போம்" என்றார்கள்.