Published:Updated:

2016 வாணியம்பாடியில் 10,000 வாக்குகள்... 2021 தமிழகத்தில் ஒவைசி கட்சியின் திட்டம் என்ன?

அசாதுதீன் ஒவைசி என்பவர் யார் என்பதைப் பற்றியும் அவரது கட்சியின் அரசியல் பயணம் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.

ஒவைசி... ஒவைசி... ஒவைசி... நடந்த முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலின்போது தமிழகம் உட்பட நாடெங்கும் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயர். இதற்கு முன்பாக, கடந்த வருடம் நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றபோதும் இவரின் செய்கை மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது.

நாடாளுமன்ற அதிகாரி, இவர் பெயரை உச்சரிக்கவும், பா.ஜ.க எம்.பி-க்கள், `ஜெய் ஶ்ரீராம்...’ எனக் கோஷமிடவும், இரண்டு கைகளையும் கீழிருந்து மேலாக உயர்த்தி, `இன்னும்... இன்னும்...’ என்று சைகை செய்தார் ஒவைசி. அப்போது, பா.ஜ.க-வினரால் மிகக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளான ஒவைசிதான் தற்போது பா.ஜ.க-வின் `பி' டீம் எனப் பெயரெடுத்திருக்கிறார். இந்தப் பெயரை இவர் முன்பே எடுத்திருந்தாலும், அந்தக் குரல்கள் இப்போது இந்தியாவெங்கும் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்தில், மம்தா பானர்ஜியும். ``சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிக்க, ஹைதராபாத்திலிருந்து ஒரு கட்சிக்குக் காசு கொடுத்து வரவழைக்கிறது பா.ஜ.க. அவர்கள் வாக்குகளைப் பிரிக்கின்றனர். பீகார் தேர்தலில் இது உறுதியாகிவிட்டது’’ என குற்றம்சாட்ட, ``என்னை விலைக்கு வாங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை’’ என பதிலடி கொடுத்திருக்கிறார் ஒவைசி.

ஒவைசி தமிழக நிர்வாகிகளுடன்...
ஒவைசி தமிழக நிர்வாகிகளுடன்...

ஒருங்கிணைந்த ஆந்திரா இருந்தபோது ஆந்திராவிலும், தற்போதைய சீமாந்திரா மற்றும் தெலங்கானாவிலும் மட்டுமே அரசியல் செய்துவந்த ஒவைசி, கடந்த சில ஆண்டுகளாக, உத்தரப்பிரதேசம்,. மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், தமிழ்நாடு, மேற்குவங்கம் என இந்தியா முழுவதும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்.

தமிழகத்தில், 2016-ம் ஆண்டு அந்தக் கட்சியின் மாநிலத்தலைவர் வக்கீல் அகமது, வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு, 10,105 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்துக்கு வந்தார். வரும் 2021 தேர்தலில், தமிழகத்தில் அந்தக் கட்சி போட்டியிடத் திட்டமிட்டிருக்கிறது. தனித்து நின்றா, கூட்டணியா, எத்தனை தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது அந்தக்கட்சி என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன்பாக, அசாதுதீன் ஒவைசி என்பவர் யார், அவரது கட்சியின் அரசியல் பயணம் ஆகியவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

யார் இந்த அசாதுதீன் ஒவைசி?!

ஹைதராபாத்தில் செல்வாக்குமிக்க அரசியல் குடும்பத்தின் வாரிசுதான் அசாதுதீன் ஒவைசி. இவர் லண்டனில் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். இவரின் தந்தை சலாவுதீன் ஒவைசி, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றவர். தற்போது அசாதுதீன் ஒவைசி தலைவராகச் செயல்பட்டுவரும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தோற்றுநர் அவரின் தாத்தாவும், வழக்கறிஞருமான அப்துல் வாகித் ஒவைசி.

இந்தக் கட்சி, 1957-ம் ஆண்டு, செப்டம்பர் 18-ம் தேதி, தொடங்கப்பட்டது. உருது மொழியிலுள்ள் இந்தக் கட்சியின் பெயருக்கு, `அகில இந்திய இஸ்லாமிய மக்கள் ஒற்றுமைக்கான சபை' எனப் பொருள். முதன்முதலாக இந்தக் கட்சி,1960-ம் ஆண்டு, ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் ஒரு வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தொடர்ந்து, 1962-ம் ஆண்டு, அசாதுதீன் ஒவைசியின் தந்தை சலாவுதீன் ஒவைசி பாதேர்கத்தி (Patthergati) சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து 1967 தேர்தலில் சார்மினார் தொகுதியிலும், 1972 தேர்தலில், யாகுத்புரா தொகுதியிலும், மீண்டும் 1978 தேர்தலில் சார்மினார் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சலாவுதீன் ஒவைசி
சலாவுதீன் ஒவைசி

தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய அந்தக் கட்சி, முதன்முதலாக, 1984-ம் ஆண்டு ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 89, 91, 96, 98, 99 என மொத்தமாக ஆறு முறை ஐதராபாத் தொகுதியின் எம்.பி-யாக சலாவுதீன் தேர்தெடுக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து, அசாதுதீன் ஒவைசி அந்தத் தொகுதியில் 2004, 2009, 2014, 2019 என நான்குமுறை எம்.பி-யாக வெற்றி பெற்றிருக்கிறார். தவிர, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, இவரின் தந்தை மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியின் தலைவராகவும் ஒவைசியே செயல்பட்டுவருகிறார். இவரது தம்பி அக்பருதீன் ஒவைசி, எம்.எல்.ஏ-வாகவும், தெலங்கானா சட்டசபையில் அந்தக் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். இவர், சந்திராயன்குட்டா (Chandrayangutta) சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஐந்தாவது முறையாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸ் ஆதரவு மற்றும் விலகல்!

2004-ம் ஆண்டிலிருந்து மத்தியிலும், ஆந்திர மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துவந்த மஜ்லீஸ் கட்சி, 2012-ல் அதை விலக்கிக்கொண்டது. ஆந்திராவின் அப்போதைய முதல்வராக இருந்த கிரண்குமார் ரெட்டி அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ்., சங் பாரிவார் அமைப்புகளுக்கு ஆதரவளித்து ஹைதராபாத்திலும் அதைச் சுற்றியும் பா.ஜ.க வலிமையடைய உதவிபுரிவதே காரணம் என விளக்கம் தந்தார் ஒவைசி. தொடர்ந்து, 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, பா.ஜ.க., இந்துத்துவா எதிர்ப்பு அரசியலை இந்தியா முழுவதும் முன்னெடுத்தார் ஒவைசி. அதேபோல, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் எனவும் விமர்சித்துவருகிறார் ஒவைசி.

ஒவைசி
ஒவைசி

மாநிலம் தாண்டிய தேர்தல் பயணம்!

தெலங்கானா மற்றும் சீமாந்திராவில் மட்டுமே போட்டியிட்டுவந்த மஜ்லீஸ் கட்சி, முதன்முதலில் 2012-ல் கர்நாடகாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பங்கெடுத்து கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2014-ல் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலிலும் 21 இடங்களில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்ததாக, 2015-ம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. தொடர்ந்து, 2018-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மகாராஷ்டிராவில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கருடன் இணைந்து, ஒளரங்காபாத் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்தக் கட்சி, கூடவே, இரண்டு சட்டமன்ற இடங்களையும் கைப்பற்றியது.

அதேபோல, 2019-ல் பீகார் மாநிலத்திலுள்ள,கிஷன்கஞ்ச் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது மஜ்லீஸ் கட்சி. கடைசியாக, பீகார் சட்டமன்றத் தேர்தலில், 20 இடங்களில் போட்டியிட்டு ஏழு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. தங்களின் சொந்த மாநிலமான தெலங்கானாவில் இந்தக் கட்சிக்கு, ஏழு எம்.எல்.ஏ-க்களும், இரண்டு எம்.எல்.சி-க்களும், ஒரு எம்.பி-யும் இருக்கிறார்கள். தவிர, சமீபத்தில் நடந்த ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் 45 இடங்களில் போட்டியிட்டு 44 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஹைதராபாத்: ஓவைசி vs யோகி - மாநகராட்சித் தேர்தலுக்கு பா.ஜ.க இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

பா.ஜ.க `பி' டீம்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே காங்கிரஸின் வாக்குகளைப் பிரிக்க பா.ஜ.க-வால் அனுப்பப்பட்டவர்தான் ஒவைசி என காங்கிரஸ் கட்சியினர் கடுமையாகக் குற்றம்சாட்டினர். ஆனால், காங்கிரஸுடன் கூட்டணி சேராத மம்தா, சமாஜ்வாதி உள்ளிட்ட பல கட்சிகளைச் சுட்டிக்காட்டி அவர்களும் பா.ஜ.க-வின் `பி டீம்’தானா எனக் கேள்வி எழுப்பினார் ஒவைசி. ஆனால், நடந்து முடிந்த பீகார் தேர்தலில், ஒவைசி பா.ஜ.க-வின் `பி டீம்’ என்கிற வாதம் வலுவாக முன்வைக்கப்பட்டது. ஆனால், ``நாங்கள் பேச்சுவார்த்தைக்கு முயன்றோம். எங்களைத் தீண்டத்தகாதவர்போல் பார்த்தார்கள். அதனால்தான் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டோம்'' என விளக்கம் தந்தார் ஒவைசி.

பீகார் தேர்தல் களம்
பீகார் தேர்தல் களம்

``தவிர, சீமாஞ்சலில் நாங்கள் இருபது தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிட்டோம். அந்த இருபது தொகுதிகளில் நாங்கள் வென்ற ஐந்து தொகுதிகள் போக, மீதமுள்ள 15 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளில் காங்கிரஸ்-ஆர்.ஜே.டி கூட்டணியும், ஆறு இடங்களில் பா.ஜ.க., ஐக்கிய தனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வெற்றி பெற்றன. தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெற்ற ஆறு இடங்களிலும், ஐந்து இடங்களில் நாங்கள் வாங்கிய வாக்குகளைவிட வெற்றி வித்தியாசம் அதிகமாக இருக்கிறது. ஒரேயொரு தொகுதியில் மட்டுமே குறைவாக இருக்கிறது. அந்த ஒரு தொகுதியில் மட்டும் வேண்டுமானால் அவர்கள் எங்களால் தோற்றார்கள் என வைத்துக்கொள்ளலாம். ஆனால், காங்கிரஸ் மொத்தம் எத்தனை இடங்களில் போட்டியிட்டது. மற்ற இடங்களில் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவ யார் காரணம்... உண்மையைச் சொல்லப்போனால் சரியாகக் களப்பணி செய்யாமல், ஆர்.ஜே.டி-யின் தேஜஸ்வி யாதவை முதல்வராகவிடாமல் தடுத்த காங்கிரஸ்தான் பா.ஜ.க-வின் பி டீம்’’ என்று சொன்னார். இந்தநிலையில்தான், தற்போது தமிழகத்தில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது மஜ்லீஸ் கட்சி.

``காங்கிரஸ்காரர்கள் தங்கள் விரக்தியை மறைக்க முயல்கிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதால் அவர்கள் ஒவைசியைக் குறை கூறுகிறார்கள். நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் பீகார் பயணத்தைத் தொடங்கினோம். சீமாஞ்சலின் வளர்ச்சிக்காக நாங்கள் பணியாற்றியிருக்கிறோம்"
அசாதுதீன் ஒவைசி எம்.பி

தமிழகத்தில் போட்டி!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் ஒவைசியின் மஜ்லீஸ் கட்சி போட்டியிட முடிவு செய்திருக்கிறது. 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே, அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் வக்கீல் அகமது வேலூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார். தவிர, வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலும், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்துக்காக அந்தக் கட்சியினர் களப்பணியாற்றியிருக்கிறார்கள். அந்த நட்புறவின் அடிப்படையில், கூட்டணிக்காக துரைமுருகனிடம் பேசியிருக்கின்றனர். ஆனால், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்துவரும் இஸ்லாமிய இயக்கத்தவர்களே அதற்குத் தடையாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தவிர, ஏற்கெனவே இந்துக்களுக்கு எதிரான கட்சி, தி.மு.க போன்ற பா.ஜ.க-வின் வாதங்களுக்கு இது கூடுதல் வலு சேர்த்துவிடுமோ என்கிற அச்சமும் தி.மு.க தரப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

துரைமுருகன்
துரைமுருகன்

தி.மு.க-வுடன் கூட்டணி?

``தமிழகத்தில் நாங்கள் எதிர்ப்பது பா.ஜ.க மற்றும் அதனுடன் கூட்டணிவைத்திருக்கும் அ.தி.மு.க-வை மட்டும்தான். அதனால், காங்கிரஸ் அங்கம்வகித்தாலும், தி.மு.க-வுடன் கூட்டணிவைக்க, எங்களுக்கு எந்தத் தடையும் இல்லை. ஒருவேளை அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் மட்டுமே மற்ற கட்சிகளுடன் கூட்டணிவைப்பது குறித்து முடிவு செய்யப்படும். தவிர, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் தி.மு.க., அ.தி.மு.க கூட்டணியில் ஒரு சீட்டும், இரண்டும் சீட்டும் வாங்குவது... அதனால் இஸ்லாமிய மக்களுக்கு நிகழ்ந்த நன்மைதான் என்ன... தமிழகத்திலுள்ள இஸ்லாமியக் கட்சிகளையெல்லாம் இணைத்து, ஒரு 25 தொகுதிகளில் போட்டியிட்டால் எங்கள் வலிமையைக் காண்பிக்கலாம். அதன் மூலம் எங்களுக்கான உரிமைகளைப் பெறலாம்'' என்கிற மஜ்லீஸ் கட்சியினர், ``வேலூர், வாணியம்பாடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் தங்கள் கட்சிக்கு நல்ல கட்டமைப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். ``தமிழகப் பொறுப்பாளர்கள் ஹைதராபாத்துக்குச் சென்று, நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்திவருகின்றனர். விரைவில் முடிவுகளை அறிவிப்போம்'' எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு