Published:Updated:

தேர்தல் அரசியலிலிருந்து ஹெச்.ராஜா விலகியதன் ‘அரசியல்’ பின்னணி என்ன?!

ஹெச்.ராஜா ( விகடன் )

“பழைய தலைவர்களை ஆக்டீவ் அரசியலிலிருந்து தள்ளி வைக்கவே பா.ஜ.க விரும்புகிறது. ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் போன்ற கௌரவமான பதவிகளைக் கட்சி கொடுக்கலாம்” - அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

Published:Updated:

தேர்தல் அரசியலிலிருந்து ஹெச்.ராஜா விலகியதன் ‘அரசியல்’ பின்னணி என்ன?!

“பழைய தலைவர்களை ஆக்டீவ் அரசியலிலிருந்து தள்ளி வைக்கவே பா.ஜ.க விரும்புகிறது. ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் போன்ற கௌரவமான பதவிகளைக் கட்சி கொடுக்கலாம்” - அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

ஹெச்.ராஜா ( விகடன் )

தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஹெச்.ராஜா. அதிரடிக் கருத்துகளைப் பேசி தமிழக அரசியலை அவ்வப்போது தகிக்க வைப்பவர். மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திடம் தோற்றுப்போனார். இதற்கு முன்பும் ராஜா இங்கு போட்டியிட்டவர் என்பதால், 2024 தேர்தலிலும் அவர் சிவகங்கையில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைப் பொய்யாக்கி, தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் ஹெச்.ராஜா.

இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, “மற்றவர்களுக்கு வழிவிட்டு, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தேர்தல் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் சீனியர் தலைவர்கள் எல்லோரும் சில வேலைகள் காரணமாக வெளியே சென்றிருக்கிறார்கள். அதனால், அண்ணாமலை மட்டுமே எல்லா தொகுதிகளுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரான ஹெச்.ராஜா தமிழ்நாடு முழுவதும் கட்சிப் பணி, தேர்தல் பணிக்காக செல்லவே இந்த அறிவிப்பு” என்கிறார்கள்.

சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன்

ஆனால், பா.ஜ.க-வின் சீனியர்கள் சிலரோ, “ஏன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய ராஜா மட்டும்தான் இருக்கிறாரா... சிவகங்கையில் பா.ஜ.க-வை வளர்த்ததில் ராஜாவின் பங்கு இருந்தாலும், 1989-லிருந்து தேர்தல் அரசியலில் தொடர் தோல்விகளையே சந்தித்துவந்திருக்கிறார். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை 75 வயதுவரை தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், ராஜாவுக்கோ 65 வயதுதான்.

அதற்கு முன்னரே தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக சொன்னதுக்கு முக்கியக் காரணம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை, தென் சென்னை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார். ஆனால், ஹெச்.ராஜா போட்டியிட்டால் தோற்பார் என்கிற புள்ளிவிவரம் டெல்லி தலைமைக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, அண்ணாமலை வந்த பிறகு சீனியர்கள் பலர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுவருகிறார்கள். அதேநிலை தனக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கௌரவமாக ‘தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக’ தெரிவித்திருக்கிறார் ஹெச்.ராஜா” என்கிறார்கள்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, “தமிழக பா.ஜ.க-வில் புது ரத்தம் பாய்ச்ச டெல்லி பா.ஜ.க விரும்புகிறது. அதற்காக அண்ணாமலை தலைமையில் ஒரு டீம் உருவாக்க நினைக்கிறார்கள். அதேவேளையில் கட்சிக்காக தியாகம் செய்த பழைய தலைவர்களையும் கைவிட்டுவிடக் கூடாது என்கிற புள்ளியில் போகிறார்கள். இதுதான் பா.ஜ.க நிலைப்பாடு. ஏனென்றால் பழைய தலைவர்களால் அந்தக் கட்சி மூன்று சதவிகிதம்கூட தாண்டவில்லை. அண்ணாமலை தலைமையில் பலமுனைப் போட்டிகள் உருவாக்கி, உத்தரப் பிரதேசம், பீகார், கர்நாடகாவில் கட்சியை வளர்ப்பதுபோல் எதிர்பார்க்கிறார்கள். அதனால் பழைய தலைவர்களை ஆக்டிவ் அரசியலிலிருந்து தள்ளி வைக்கவே விரும்புகிறார்கள். ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் போன்ற கௌரவமான பதவிகளைக் கட்சி கொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன” என்றார்.