Published:Updated:

`அறிக்கை அரசியல், கொள்கையில் மாற்றம்’ - என்னதான் நடக்கிறது மதிமுக-வில்?

மதிமுக

வெறும் அறிக்கை அரசியல், கொள்கையில் மாற்றம் என வைகோவைச் சுற்றி ஏராளனமான சர்ச்சைகள் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது திமுக-வுடன் இணைக்க வேண்டும் என்ற சத்தமும் அதிகமாக கேட்கத் தொடங்கியிருக்கிறது. என்னதான் நடக்கிறது மதிமுகவில்?

Published:Updated:

`அறிக்கை அரசியல், கொள்கையில் மாற்றம்’ - என்னதான் நடக்கிறது மதிமுக-வில்?

வெறும் அறிக்கை அரசியல், கொள்கையில் மாற்றம் என வைகோவைச் சுற்றி ஏராளனமான சர்ச்சைகள் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது திமுக-வுடன் இணைக்க வேண்டும் என்ற சத்தமும் அதிகமாக கேட்கத் தொடங்கியிருக்கிறது. என்னதான் நடக்கிறது மதிமுகவில்?

மதிமுக

சென்னை, கோகலே மன்றத்தில் 1964-ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு கருத்தரங்கில், பேரறிஞர் அண்ணா முன்னிலையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது, வைகோவுக்கு. இதன் மூலம் அவரது அரசியல் பயணமும் ஆரம்பித்தது. பின்னர் திமுக மாணவரணி இணைச் செயலாளர், அமைப்புச் செயலாளர் என பல்வேறு பதவிகளை எட்டிப்பிடித்தார். மேலும், பொதுக்கூட்டங்களில் வைகோ இடைவிடாமல் நிகழ்த்தும் உரைக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்தது.

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

மறுபுறம் இது அவருக்கு நெருக்கடியையும் உருவாக்கிக் கொடுத்தது. இதற்கிடையில் அவர் 1989-ம் ஆண்டு திடீரென ஈழத்துக்குப் பயணம் செய்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, திமுக-விலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அப்போது, "மு.க.ஸ்டாலினைவிட வைகோவுக்கத்தான் தொண்டர்களிடத்தில் அதிகம் செல்வாக்கு இருக்கிறது. எனவேதான் கருணாநிதி இப்படிச் செய்துவிட்டார்" என வைகோவின் ஆதரவாளர்கள் குமுறினர். ஆர்ப்பாட்டம், போராட்டங்களும் வெடித்தன.

ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து 1994-ம் ஆண்டு, மே 6-ம் நாள் மதிமுக உதயமானது. அப்போது அவர் தன்னை திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக அடையாளப்படுத்தினார். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே, அந்தக் கட்சிகளிலிருந்து விலகி தங்களைப் பலர் வைகோவுடன் இணைத்துக்கொண்டனர். பின்னர் நடந்த தேர்தல்களில் வெற்றி, தோல்வி என மாறி மாறிச் சந்தித்தார்.

மதிமுக
மதிமுக

இறுதியாக 2021 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மதிமுக-வுக்கு வெற்றி கிடைத்தது. இதற்கிடையில் கடந்த 2021-ல் மதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோவுக்குப் பதவி வழங்கப்பட்டது. வாரிசு அரசியலுக்கு எதிராகக் கட்சி ஆரம்பிப்பதாக கூறிய வைகோ, பின்னாளில் அவரே அதைச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கட்சிக்குள் அவருக்கு எதிராகச் சிலர் போர்க்கொடி தூக்கினர். ஒருவழியாக அதைச் சமாளித்துவந்தார், வைகோ. இந்த நிலையில் அந்தக் கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி எழுதிய கடிதத்தில், ``30 ஆண்டுகளாக வைகோவின் பேச்சை நம்பி மதிமுக உறுப்பினர்கள் வாழ்க்கையை இழந்திருக்கின்றனர். மேலும் மேலும் அவர்கள் ஏமாற்றம் அடையாமலிருக்க மதிமுக-வை தாய்க் கழகமான திமுக-வுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்குச் சிறந்தது" எனத் தெரிவித்திருந்தார்.

சு,துரைசாமி
சு,துரைசாமி

இதேபோல் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், “மதிமுக-வில் சேர்ந்தவர்களைவிட விலகியவர்களே அதிகம். மதிமுக-வை திமுக-வுடன் இணைக்க வேண்டும் என்று திருப்பூர் துரைசாமி தெரிவித்திருப்பது நல்ல ஆலோசனை. ஒரு சொட்டு தண்ணீராக இருக்கும் மதிமுக-வை, கடலாக இருக்கும் திமுக-வுடன் இணைக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த 5-ம் தேதி மதிமுக-வின் 30-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "மதிமுக-வின் 30-ம் ஆண்டு தொடக்க விழாவை, தொண்டர்கள் தங்கள் குடும்ப விழாவாகத் தமிழகம் முழுவதும் கொண்டாடிவருகிறார்கள். இனி வருகிற சோதனைகள் அனைத்தையும் முறியடித்து, மதிமுக வெற்றிக்கொடியை நாட்டுவோம். மதிமுக-வின் சொத்து குறித்த விவரங்கள் அனைத்தும் ஆடிட்டர் மூலமாக முறையாகத் தணிக்கை செய்யப்பட்டு கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத்

தமிழ்நாட்டில் இதுவரை எந்தக் கட்சி, தன் சொத்துப் பட்டியல் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது... மதிமுக மட்டும் ஏன் வெளியிட வேண்டும்?" என்றார். இதேபோல் கட்சி அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேனரில், "வைகோதான் கட்சி, கட்சிதான் வைகோ. துரை வைகோதான் எதிர்காலம், எதிர்காலம்தான் துரை வைகோ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இது அந்தக் கட்சியினரைச் சேர்ந்த பலருக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது" என்னதான் பிரச்னை?

இது குறித்து நம்மிடம் பேசிய திருப்பூர் துரைசாமி, "வாரிசு அரசியலை எதிர்த்துதான் தனிக்கட்சி தொடங்கினார் வைகோ. இன்று அந்தத் தவற்றைச் செய்கிறார். நான் செய்ய வேண்டாம் என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். ஆனால் கேட்கவில்லை. இதேபோல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி வரவு, செலவு கணக்கைத் தாக்கல் செய்யவில்லை. இது ஒருநாள் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்தேன்.

துரை, வைகோ
துரை, வைகோ

ஆனால், அவர் முக்கிய நிர்வாகிகளுக்கு வரவு, செலவு கணக்கு தெரிந்துவிடும் என்பதற்காகச் செய்யவில்லை. பல இடங்களில் கட்சி மிகவும் மோசமாக இருக்கிறது. பலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1,000 பேர் இருந்த இடத்தில 400 பேர்தான் இருக்கிறார்கள். பழைய சட்டத்தின்படி கிளை அமைக்க வேண்டுமென்றால், 25 பேர் இருக்க வேண்டும். ஆனால், கடந்த பொதுக்கூட்டத்தில் 10 பேர் இருந்தாலே கிளை அமைக்கலாம் என்று தெரிவிக்கிறார். இதுவே பலவீனத்தைக் காட்டுகிறது" என்றார் வேதனையுடன்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "வைகோவுக்கு திமுக-வில் நல்ல செல்வாக்கு இருந்தது. அவரது வளர்ச்சி கருணாநிதிக்கு நிச்சயம் உறுத்தலைக் கொடுத்திருக்கலாம். வைகோ கையில் கட்சி சென்றுவிட்டால் தன் மகனை முன்னிலைப்படுத்த முடியாது என அவர் நினைத்திருக்கலாம். அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் விவகாரம் வேறு எழுந்தது. அப்போது வைகோவுக்கும் கலைஞருக்கும் கசப்பு உணர்வு வருகிறது.

ப்ரியன்
ப்ரியன்

இதையடுத்து திமுக-விலிருந்து ஓரங்கட்டப்படுகிறார். பின்னர் மதிமுக-வைத் தொடங்கினார். அப்போது, "திமுக குடும்பக் கட்சியாக இருக்கிறது. வாரிசு அரசியல் கூடாது" என்று தெரிவித்தார். தற்போது மகனைக் கொண்டுவந்திருக்கிறார். 2019-க்கு முன்பு ஸ்டாலினைக் கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். திருப்பூர் துரைசாமி சொல்வது உண்மை. மதிமுக என்ற கட்சியே தற்போது தேவையில்லை.

வாரிசு அரசியலுக்கு எதிராகத்தான் அந்தக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் வைகோ அதிலிருந்து மாறிவிட்டார். மகனை முன்னிலைப்படுத்துகிறீர்கள் என்றபோது அந்தக் கட்சி எதற்காக இருக்க வேண்டும்... கட்சி ஆரம்பித்த நோக்கம் சிதைந்துவிட்டது. திமுக-வுடன் இணைந்துவிடுவதுதான் சரியாக இருக்கும். கட்சிக்கு நிறைய சொத்துகள் இருப்பதும் ஒரு காரணம்" என்றார்.

திமுக சின்னம்!
திமுக சின்னம்!

இது குறித்து மதிமுக-வின் தேர்தல் பிரிவுச் செயலாளர் அந்திரிதாஸிடம் விளக்கம் கேட்டோம். "கட்சியை பலப்படுத்துவதற்காக அமைப்பு தேர்தல் நடத்திவருகிறோம். தற்போது திமுக-வுடன் இணைக்க வேண்டும் என்று சொல்பவர்கள்தான், ஒருகாலத்தில் வேண்டாம் என்று சொன்னார்கள். உள்நோக்கத்துடன் பேசிவருகிறார்கள்.

அந்திரிதாஸ்
அந்திரிதாஸ்

கூட்டணி வைத்ததால் இணைக்க வேண்டும் என்றால், இந்தியாவில் எந்தக் கட்சியும் இருக்காது. எங்களுடைய கொள்கை வேறு. பாஜக-வை எதிர்க்க வேண்டும் என்பதால்தான் திமுக-வுடன் இணைந்து இயங்குகிறோம். வாரிசு அரசியல் வேண்டாம் என்று வரவில்லை. விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டுக்காகத்தான் நீக்கப்பட்டார். கட்சிக்காரர்கள் அழைத்ததால்தான் துரை வைகோ வந்தார். ஆனால், இதில் தலைவருக்குக் கடைசிவரை விருப்பம் இல்லை" என்றார்.