Published:Updated:

சார்பட்டா பரம்பரை: திமுக - வைத் தூக்கிப்பிடித்து அதிமுக -வை விமர்சிக்கிறதா பா. இரஞ்சித்தின் இப்படம்?

சார்பட்டா ( விகடன் )

உண்மையிலேயே `சார்பட்டா பரம்பரை’ தி.மு.க-வைத் தூக்கிப்பிடிக்கிறதா, அ.தி.மு.க-வை விமர்சனம் செய்கிறதா என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

சார்பட்டா பரம்பரை: திமுக - வைத் தூக்கிப்பிடித்து அதிமுக -வை விமர்சிக்கிறதா பா. இரஞ்சித்தின் இப்படம்?

உண்மையிலேயே `சார்பட்டா பரம்பரை’ தி.மு.க-வைத் தூக்கிப்பிடிக்கிறதா, அ.தி.மு.க-வை விமர்சனம் செய்கிறதா என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

Published:Updated:
சார்பட்டா ( விகடன் )

''என்னது கலைச்சுடுவாங்களா, தலைவர் விட்ருவாரா இல்ல நம்மதான் விட்ருவோமா... அப்டில்லாம் ஒண்ணும் நடக்காது. தலைவர் இருக்காரு பார்த்துப்பார்...''

''மத்திய அரசு எமெர்ஜென்சி என்கிற பெயரில் இந்தியாவைச் சிதைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் நம் தலைவர் அவர்களின் ஆட்சியால் நாம் காப்பாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டத்துக்கு எதிராக ஒற்றை ஆளாக கர்ஜித்துக்கொண்டிருக்கிறார் நமது கழகத் தலைவர் அவர்கள். நடிகர்களின் மாயையில் சிக்காமல், தமிழகம் அவர் பின்னால் திரண்டால் அங்கு செங்கோட்டை வெடித்துச் சிதறும்.''

பா.இரஞ்சித் இயக்கத்தில், நடிகர்கள் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் `சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில், எமெர்ஜென்சி காலத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி குறித்து பசுபதி கதாபாத்திரம் பேசும் வசனங்கள்தான் இவை.

சார்பட்டா பரம்பரை
சார்பட்டா பரம்பரை
விகடன்

குத்துச்சண்டையை மையப்படுத்திய படமாக இருந்தாலும், படத்தில் ஆங்காங்கே அரசியல் வசனங்களும் காட்சியமைப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. மலையாள சினிமாக்களைப்போல வெளிப்படையாக அரசியல் அடையாளங்களைச் சுமந்து கதை சொல்லும் திரைப்படங்கள் தமிழில் மிகக் குறைவு. நடிகர் பகத் பாசிலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான `மாலிக்’ திரைப்படத்தில்கூட காங்கிரஸ் கட்சி அடையாளங்கள் நேரடியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், தமிழில் அப்படியான படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தவரிசையில் மிகவும் வெளிப்படையாக, தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் அடையாளங்கள், அவர்கள் குறித்த அடையாளங்களுடன் வெளியாகியிருக்கிறது `சார்பட்டா பரம்பரை.’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கூடவே, `தி.மு.க-வுக்கு ஆதரவான படம்’, `அ.தி.மு.க-வைக் குறைத்துக் காட்டும் படம்’ என்கிற விவாதங்களையும் அரசியல் வட்டாரத்தில் உருவாக்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இயக்குநர் பா.இரஞ்சித்தின் முந்தைய திரைப்படங்களில் திராவிட இயக்கங்களை விமர்சித்து காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றிருந்தாக சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்து அடங்கியதுண்டு. திரைப்படங்களில் மட்டுமல்லாமல், அரசியல், கலை இலக்கிய மேடைகளில், தன் சமூக வலைதள பக்கங்களில் இரஞ்சித் வெளிப்படுத்திய பல கருத்துகளும்கூட திராவிட இயக்கங்களை விமர்சனம் செய்யும் வகையில் இருக்கின்றன என கடந்த காலங்களில், தி.மு.க ஆதரவாளர்களுக்கும் இரஞ்சித் ஆதரவாளர்களுக்கும் இடையே மிகப்பெரிய கருத்து யுத்தங்கள் அரங்கேறியிருக்கின்றன.

தி.மு.க - அ.தி.மு.க
தி.மு.க - அ.தி.மு.க

இந்தநிலையில், திராவிட இயக்கத்தின் மீதான இயக்குநர் இரஞ்சித்தின் பார்வை மாறியிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், தி.மு.க-வை, மறைந்த தலைவர் கருணாநிதியைப் புகழ்பாடும் வகையிலான வசனங்கள் என திராவிட இயக்க ஆதரவாளர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். வழக்கம்போலவே கலை, இலக்கியம் சார்ந்த விவாதங்களில் பெரிதாக ஆர்வம்காட்டாத அ.தி.மு.க-வினர் தற்போதும் விலகியே இருக்கின்றனர். ஆனால், உண்மையிலேயே `சார்பட்டா பரம்பரை’ தி.மு.க-வைத் தூக்கிப்பிடித்து அ.தி.மு.க-வை விமர்சனம் செய்கிறதா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1972-க்குப் பின்னால், அன்றைய மெட்ராஸில் பாக்ஸிங் விளையாட்டை கௌவரமாக நினைக்கும் `சார்பட்டா’, `இடியாப்பம்’ என்கிற இரண்டு பரம்பரைகளுக்கு இடையிலான மோதலே இந்தத் திரைப்படத்தின் மையக்கரு. இவற்றில், சார்பட்டா பரம்பரையின் கோச்சாக, ரங்கன் வாத்தியார் என்கிற கதாபாத்தில் நடித்திருக்கும் பசுபதி, படம் முழுவதும் தி.மு.க கரைவேட்டியுடனேயே வலம்வருகிறார். தி.மு.க-வின் இதழான முரசொலியை படித்து மடிக்கிறார். தவிர, எமெர்ஜென்சி காலகட்ட தி.மு.க தொண்டர்களுக்கே உரித்தான மிடுக்குடன் பல வசனங்களையும் பேசுகிறார். `சார்பட்டா பரம்பரை’யின் பாக்ஸர்கள் உதயசூரியன் பொறித்த மேலாடையுடனேயே சண்டை நடக்கும் ரிங்குக்குள் வருகின்றனர். தவிர, அப்போது புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கும் எம்.ஜி.ஆரின் பின்னால் மக்கள் அணிதிரளக் கூடாது என்பதை ரங்கன் வாத்தியார் அறிவுறுத்தும் வகையிலான வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மாஞ்சா கண்ணன்
மாஞ்சா கண்ணன்

இது ஒருபுறமிருக்க, மாஞ்சா கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில், மறைந்த நடிகர் மாறன் எம்.ஜி.ஆரைப்போலவே ஒப்பனை செய்துகொண்டு அ.தி.மு.க பிரமுகராக படம் முழுக்கவே வலம்வருகிறார். சாராயம் காய்ச்சும் தொழில் செய்துவரும் அவர், ஒருகட்டத்தில் ரங்கன் வாத்தியார் மகன் வெற்றிச்செல்வனையும் சார்பட்டா பரம்பரையின் நட்சத்திர பாக்ஸரான கபிலனையும் அந்தத் தொழில் ஈடுபடுத்துகிறார். ரங்கன் வாத்தியாரான பசுபதி, மிசாவில் சிறைக்குச் சென்றுவிட, அதற்கு இடைப்பட்ட காலத்தில் அவரின் மகன் வெற்றிச்செல்வன் அ.தி.மு.க-வில் இணைந்துவிடுகிறார். அவரும் கபிலனும் குண்டர்களாக மாறி வழிமாறிச் சென்றுவிடுகின்றனர்.

'எங்க போய் சேர்ந்திருக்கானுங்க பாருங்க' என அ.தி.மு.க-வில் சேர்ந்தது குறித்த வசனமும், அதற்கு பசுபதி வருத்தப்படுவதுபோலவும் காட்சியமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல. எமெர்ஜென்சியை மிகக் கடுமையாக எதிர்த்து தி.மு.க ஆட்சியை இழந்ததையும், அந்தக் கட்சித் தொண்டர்கள் சிறைக்குச் சென்றதையும், இந்திரா காந்திக்கு ஆதரவாக அ.தி.மு.க தொண்டர்களின் பாதாயாத்திரை சுவரொட்டிகளையும் நம் பார்வைக்குக் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் இரஞ்சித்.

``மேற்கண்ட காட்சியமைப்புகள் மூலம் இது தி.மு.க ஆதரவுப் படமாகவும் அ.தி.மு.க-வை விமர்சிக்கும் படமாகவும் ஒரு தோற்றத்தைத் தரலாம். ஆனால், தி.மு.க-வைத் தூக்கிப்பிடிக்கும் நோக்கிலோ, அ.தி.மு.க-வை விமர்சிக்கும் நோக்கிலோ இந்தக் காட்சிகளை இயக்குநர் இரஞ்சித் வடிவமைத்ததாகத் தெரியவில்லை. காரணம், ரங்கன் வாத்தியார் சிறையிலிருந்து வெளிவரும்போது, அவரை வரவேற்க குறைவான கட்சித் தொண்டர்களே வந்திருப்பார்கள். அப்போது, வேலூர் முதலியாரை வரவேற்க அவர்கள் சென்றுவிட்டதாக ஒரு வசனம் வரும். அது தி.மு.க-வுக்குள்ளேயே அப்போதிருந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறது. இதன் மூலம், அன்றைய காலகட்டத்தில் இரண்டு கட்சித் தலைமை மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகளை அப்படியே பதிவு செய்யும் வேலையை மட்டுமே இயக்குநர் இரஞ்சித் செய்திருக்கிறார். அது பெரும்பாலும் தி.மு.க-வுக்கு ஆதரவான வகையில் இயல்பாக அமைந்துவிட்டது.

இயக்குநர் பா.இரஞ்சித்
இயக்குநர் பா.இரஞ்சித்

காரணம், இந்திய அளவில் எமெர்ஜென்சியை ஆதரித்த ஒரு சில கட்சிகளில் அ.தி.மு.க இருந்ததும், இந்திரா காந்தியின் உத்தரவுகளுக்காகத் தன் கட்சியின் பெயரில் `அகில இந்திய’வை எம்.ஜி.ஆர் சேர்த்துக்கொண்டதும் உண்மையான வரலாறு. தவிர, எந்தவிதக் கொள்கையையும் அடித்தளமாகக் கொள்ளாமல் கருணாநிதி என்கிற தனிநபர் எதிர்ப்பிலும் எம்.ஜி.ஆரின் திரை பிம்பத்தாலும் உருவான கட்சிதான் அ.தி.மு.க. அதற்குப் பிறகு, தங்களின் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தலைவராக இருந்த ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மூலமாக அந்தக் கட்சியின் மீதான பிம்பம் மாறியிருக்கலாம். ஆனால், இந்தக் கதை நிகழ்கின்ற காலகட்டத்தில், அந்தக் கட்சித் தலைமையின் செயல்பாடுகள் நிச்சயமாக விமர்சனத்துக்குள்ளானவைதான். அதேபோல, இதுவரையிலான ஒட்டுமொத்த தி.மு.க ஆட்சியின் மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், கதை நிகழ்கின்ற காலகட்டத்திய தி.மு.க தலைமையின் செயல்பாடுகள் நிச்சயமாக பாராட்டதக்கவைதான்

அதேவேளையில், கடைசி சண்டைக் காட்சியில் ஆர்யா நீல அங்கி அணிந்து வருவது, அன்று முதல் இன்று வரை ஒரே பரம்பரைக்குள், ஒரே கட்சிக்குள் என சமூகத்தின் ஆதி முதல் அந்தம் வரை வேரூன்றியிருக்கிற சாதியத்தின் கோர முகத்திலிருந்து பட்டியல் சமூகம் விடுபட, அதிகாரத்தை நோக்கி நகர, தங்களுக்கான அரசியலைத் தாங்கள்தான் பேச வேண்டும் என்கிற இரஞ்சித் பேசும் அரசியல் சார்ந்து உருவாக்கப்பட்ட காட்சியாக இருக்கலாம். பாக்ஸிங்கை மையமாகவைத்து எடுக்கப்பட்டிருக்கிற இந்தத் திரைப்படத்தில் பா.ரஞ்சித் பேச முனைகிற அரசியல் இது மட்டும்தான்'' என்பதே அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் கருத்தாக இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism