Published:Updated:

''தலித் ஒற்றுமைக்கும் மாநில சுயாட்சிக்கும் இடையே என்ன பிரச்னை?'' - கேட்கிறார் தங்கம் தென்னரசு

தங்கம் தென்னரசு

''மாநில சுயாட்சியின் வழியே, மாநிலங்களுக்கு இன்னும் கூடுதல் அதிகாரம் கிடைக்கும்போது, இங்கேயிருக்கிற பட்டியலின மக்களுக்காக மாநில அரசே இன்னும் கூடுதலாக பணிகள் செய்யமுடியும் என்பதுதான் எதார்த்தம்'' என்கிறார் தங்கம் தென்னரசு.

''தலித் ஒற்றுமைக்கும் மாநில சுயாட்சிக்கும் இடையே என்ன பிரச்னை?'' - கேட்கிறார் தங்கம் தென்னரசு

''மாநில சுயாட்சியின் வழியே, மாநிலங்களுக்கு இன்னும் கூடுதல் அதிகாரம் கிடைக்கும்போது, இங்கேயிருக்கிற பட்டியலின மக்களுக்காக மாநில அரசே இன்னும் கூடுதலாக பணிகள் செய்யமுடியும் என்பதுதான் எதார்த்தம்'' என்கிறார் தங்கம் தென்னரசு.

Published:Updated:
தங்கம் தென்னரசு

அ.தி.மு.க-வில் புயலைக் கிளப்பிவரும் சசிகலா, தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி, விருதுநகர் என தென் மாவட்டங்களில் அரசுத் திட்டங்களைத் தொடங்கிவைத்து வருகிறார்.

பரபரக்கும் இந்த அரசியல் சூழலில், தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பேசினேன்....

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

''நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, 'விலை கொடுத்து வாங்கப்பட்டது' என்ற அ.தி.மு.க குற்றச்சாட்டை எப்படி மறுக்கப்போகிறீர்கள்?''

''இது விலை கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி அல்ல... தி.மு.க-வின் 'விலை மதிக்க முடியாத உழைப்பு'க்குக் கிடைத்த வெற்றி!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''ஆனால், கோவை மண்டல வெற்றியை 'நிபந்தனைக்குட்பட்டது' என்றுதானே நீதிமன்றமே சொல்கிறது?''

''இந்த விஷயத்தை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது... ஏனெனில், எந்தவொரு விஷயம் என்றாலும் நீதிமன்றத்தில் அதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்துவரும்போது, சம்பந்தப்பட்ட இரு தரப்பிடமும் 'இது நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது' என்ற நிபந்தனை விதிப்பார்கள்தான். நீதிமன்ற நடைமுறையில் இது இயல்பான ஒன்று. எனவே, தேர்தல் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் இதை விவகாரமாக பார்க்கவேண்டிய தேவையில்லை!''

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

''தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அ.தி.மு.க கவுன்சிலர்களை கூப்பிட்டு, கூப்பிட்டு தி.மு.க-வில் இணைப்பது ஏன் என அ.தி.மு.க கேட்கிறதே?''

''இணைப்பு என்றால், அவர்களாகவே விருப்பப்பட்டு ஒரு கட்சியில் இணைவதுதான். அந்தவகையில், அ.தி.மு.க-வினர்தான் தானாக விரும்பி தி.மு.க-வில் வந்து இணைகிறார்கள். அவர்களை யாரும் கூப்பிட்டு வரவில்லை!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''அண்மைக்காலமாக, தி.மு.க இளைஞர் அணிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கட்சிக்குள் சலசலப்பை உண்டு பண்ணியிருக்கிறதுதானே?''

''அப்படியெல்லாம் சலசலப்புகள் இருப்பதாக எல்லோரும் சொல்லிக்கொள்கிறார்களே தவிர, உண்மையில் அப்படி எந்த சலசலப்பும் கட்சிக்குள் இல்லை.

எனவே, இதுபோன்ற கற்பனைக் குதிரை செய்திகள் எல்லாம் 'இல்லாத பூனையை இருட்டறைக்குள் தேடிக்கொண்டு, அதைக் கொல்லாமல் விடமாட்டேன்' என்று சொல்வதைப்போலவே இருக்கிறது.''

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

'' 'மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்' என மு.க.ஸ்டாலின் சொல்கிறாரே.... இது தேசிய அளவிலான தலித் மக்களின் வலிமையை பலவீனப்படுத்திவிடுமல்லவா?''

''இது வேடிக்கையான கேள்வி... மாநில சுயாட்சிக்கும் தலித் மக்களுக்கான அதிகார குறைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிற வேலை.

மாநில சுயாட்சி என்ற கோரிக்கை, மாநிலங்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெறுவதற்கு உண்டான முயற்சிதானே தவிர... 'நாடாளுமன்றம் என்ற அமைப்பே தேவையில்லை' என்று யாரும் சொல்லவில்லையே!''

''தேசிய அளவில் தலித்துகள் ஒன்றுபட்டு நிற்பதுதான் அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும் என்ற அம்பேத்கரின் நம்பிக்கையை 'மாநில சுயாட்சி' சிதறடிக்கும்தானே?''

''தேசிய அளவிலான தலித் ஒற்றுமைக்கும் மாநில சுயாட்சிக்கும் இடையே என்ன பிரச்னை? மாநில சுயாட்சியின் வழியே, மாநிலங்களுக்கு இன்னும் கூடுதல் அதிகாரம் கிடைக்கும்போது, இங்கேயிருக்கிற பட்டியலின மக்களுக்காக மாநில அரசே இன்னும் கூடுதலாக பணிகள் செய்யமுடியும் என்பதுதான் எதார்த்தம்.

எனவே, மாநில சுயாட்சி கோரிக்கை, தேசிய அரசியலில் பட்டியலின மக்களின் முக்கியத்துவத்தை துளியளவுகூட குறைப்பதாகாது.''

அம்பேத்கர்
அம்பேத்கர்

''மதவாத அரசியலை முன்னெடுத்துவரும் ஒரு மாநில அரசின் கையில் 'மாநில சுயாட்சி' அதிகாரமும் வழங்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் பட்டியலின மக்களின் நிலை என்னவாகும்?''

''முதலில், மாநில சுயாட்சியை ஒரு மாநிலத்துக்கான உரிமையாக மட்டுமே பார்க்கவேண்டும். எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்குமான உரிமையாக இதைப் பார்க்க முடியாது. ஏனெனில், நீங்கள் கூறுவதுபோல் மதவாத அரசியல் கட்சிக்கு மாற்றாக, பட்டியலின மக்களுக்கு ஆதரவான கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தால், அம்மக்களுக்கு கூடுதலான பணிகளைச் செய்யமுடியும் என்று அர்த்தப்படுகிறது அல்லவா? எனவே, மாநில சுயாட்சி உரிமையை கட்சி சார்ந்து பார்க்காமல், கருத்தியல் சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே பார்க்கவேண்டும்!''

''உள்ளாட்சிப் பதவிகளில் துணைத் தலைவர் பொறுப்புகளுக்கும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியிலேயே வி.சி.க முன்வைத்த கோரிக்கை இப்போதும் நிறைவேறவில்லையே ஏன்?''

''இது முதல் அமைச்சர் முடிவு எடுக்க வேண்டிய விஷயம். கடந்த ஆட்சியில் வி.சி.க இப்படியொரு கோரிக்கையை முன்வைத்ததாகச் சொல்கிறீர்கள். தற்போதும் முதல்வரிடம் இதுபோன்று அவர்கள் கோரிக்கை வைத்தால், நிச்சயம் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.''

திருமாவளவன்
திருமாவளவன்

''கடந்த காலத்தில், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து தி.மு.க தொடுத்த வழக்கிலும்கூட, 'துணைத் தலைவருக்கும் இட ஒதுக்கீடு' என்ற அம்சம் குறிப்பிடப்பட்டிருக்கிறதே?''

''கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலே நடைபெறாமல் இருந்துவந்தது. இதையடுத்து தி.மு.க-வின் தொடர் முயற்சிகளினால்தான் உள்ளாட்சித் தேர்தலே நடைபெற்றது. ஆக, முதலுக்கே மோசமாக இருந்த சூழலை மாற்றியமைத்து காப்பாற்றியதில் தி.மு.க-வின் பங்கு முக்கியமானது. எனவே, உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற மக்களாட்சி தத்துவத்தில் முதல் கட்டமாக நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். அதாவது ஊரக, நகர்ப்புற பகுதிகளில் எந்தவொரு சிறு குற்றச்சாட்டும் வந்துவிடாத அளவில் மிகச்சிறப்பாக தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம்.''

''இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழா குறித்து தி.க தலைவர் கி.வீரமணி எழுப்பியிருந்த கேள்விகள் நியாயமானவைதானே?''

''சிவராத்திரி விழாவை கோவில் நிர்வாகம்தான் நடத்துகின்றன என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்கெனவே நல்லதொரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு கோயில்களுக்கும் தனித்தனியே சிறப்புகள் இருக்கின்றன, விழாக்களும் இருக்கின்றன. அந்தவகையில் சிவன் கோயில்களுக்கு சிவராத்திரி உள்ளிட்ட திருவிழாக்கள் இருக்கின்றன. இதேபோல், வைணவக் கோயில்களுக்கென்று ஏகாதசி உள்ளிட்ட விழாக்கள் இருக்கின்றன. இந்த விழாக்களை எல்லாம் அந்தந்த கோயில்கள்தான் நடத்திவருகின்றன. எனவே, உங்களது கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர் கூறியிருக்கும் பதிலே போதுமானதுதான்.''

கி.வீரமணி
கி.வீரமணி

''கடந்த காலங்களில் இதுபோன்ற நடைமுறைகள் இருந்தனவா... அரசியல் ரீதியாக தி.மு.க-வுக்கு எதிரான பிரசாரங்களை முறியடிக்கும் உத்தியாக ஆன்மிகத்தைக் கையில் எடுக்கிறதா தி.மு.க?''

''இல்லையில்லை.... சிவராத்திரி விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறதுதான். கடந்தகாலத்தைவிடவும் இப்போது கோயில்கள் சார்பில் சிறப்பாக விழா நடத்தப்படுவதால், பிரமாண்டமாக தெரியலாம். மற்றபடி, இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்கெனவே தெளிவான விளக்கத்தைக் கொடுத்துவிட்டார்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism