தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமைக்கான யுத்தம் உச்சத்தை எட்டியிருக்கிறது. அ.தி.மு.க-வின் இரட்டைத் தலைமைகளை கட்சி நிர்வாகிகள் மாறிமாறி சந்தித்து வரும் நிலையில், சுமுக முடிவு எட்டப்படுமா, இல்லை கட்சியில் பிளவு வருமா என்கிற அளவுக்கு அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலான நிர்வாகிகள், `ஒற்றைத் தலைமைக்கான முன்னெடுப்புகள் கட்சியில் நடந்துவருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன' என வெளிப்படையாகச் சொல்லிவிட்ட பின்னரும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மட்டும் ஒற்றைத் தலைமை என்கிற பேச்சுக்கே இடமில்லை என மிகவும் உக்கிரமாக முழங்கி வருகின்றனர். அதற்கான பின்னணி என்ன என்பது குறித்து பார்ப்போம்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. அப்போது கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கோரிக்கைகள் பெருவாரியான மா.செ-க்களால் முன்வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. எம்.ஜி.ஆர் மாளிகையின் மேல்தளத்தில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே ஒற்றைத் தலைமை வேண்டும் என்று ஒரு குழுவும், ஓ.பன்னீர்செல்வம்தான் அ.தி.மு.க-வுக்குத் தலைமை ஏற்கவேண்டும் என ஒரு குழுவும் மாறிமாறி கீழ்தளத்தில் கோஷங்களை எழுப்ப அந்த இடம் சிறிதுநேரம் பரபரப்பானது. கூட்டம் முடிந்து, வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், `அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை எனக் கூறியிருக்கிறார்கள்' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அன்றிலிருந்து தற்போதுவரை அ.தி.மு.க-வில் பல்வேறு காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநேற்று காலை, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம், ஆர்.பி.உதயக்குமார், வளர்மதி, சென்னை மாவட்டச் செயலாளர்களான சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, விருகை ரவி உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினர். அதேபோல, ஓ.பி.எஸ் வீட்டில், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்கள் ஆலோசனை நடத்தினர். இவர்களில் ஆர்.பி.உதயகுமாரும், திண்டுக்கல் சீனிவாசனும் ஓ.பி.எஸ்& இ.பி.எஸ் இருவரின் வீடுகளிலுமே அலோசனை நடத்தினர். தொடர்ந்து, இன்று காலை கட்சித் தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, சி.வி.சண்முகம், மூத்த தலைவர்கள் செம்மலை, பொன்னையன், கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட 11 பேர்கொண்ட தீர்மானக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் வருகை தரவிருப்பதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலோசனைக்கூட்டத்தை வேறொரு நாளைக்கு ஒத்திவைத்து, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி ஆகியோர் கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து, மற்றவர்களுடன் ஓ.பி.எஸ் அலோசனையில் ஈடுபட்டார். இப்படி கடந்த இரண்டு நாள்களாக பரபரப்புக்கும்... விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் அரசியல் அதிரடிகள் அ.தி.மு.க-வை மையமிட்டு அரங்கேறி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ்-ஸின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.
``முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், தங்கள் ஆதரவாளர்களுக்கு எம்.எல்.ஏ சீட் உள்ளிட்ட பல விஷயங்களில் ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்காக ஓ.பி.எஸ் பல்வேறு விஷயங்களை விட்டுக்கொடுத்தார். உட்கட்சித் தேர்தல் நடந்துபோதுகூட முதலில், சரிபாதி மா.செயலாளர், ஒன்றியச் செயலாளர் இடங்களைக் கேட்டுப் பெறவேண்டும் என்கிற முடிவில் இருந்தவர், கட்சி நலனுக்காக, கட்சியில் எந்தக் குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, பெரும்பாலானவர்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்தான் எனத் தெரிந்தபோதும், ஏற்கெனவே பதவியில் இருப்பவர்களே தொடர்வதற்கு அனுமதித்தார். கட்சியில் தொடர் தோல்விகளால், பலர் ஓ.பி.எஸ் பக்கம் சாயத் தொடங்கியிருந்த நிலையில், சரியாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை நடத்தி அதையும் எடப்பாடி ஆஃப் செய்தார். இப்போது சரியாக, ஒற்றைத் தலைமைக்கான விவகாரத்தையும் கையிலெடுத்துத் தெளிவாகக் காய் நகர்த்தி வருகிறார். அதனால் `கட்சிக்கு நான் எந்த துரோகமும் செய்யலயே. ஏன் என்னை இப்படி நடத்துறாங்க' என தனக்கு நெருக்கமானவர்களிடம் கண் கலங்கியிருக்கிறார் ஓ.பி.எஸ்.

வெளியில், அவரின் ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுவதும், கோஷம் போடுவதாக இருந்தாலும், பெரும்பாலான நிர்வாகிகள், எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடியின் ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது அவருக்கும் தெரியும். அதனால்தான், அடுத்து என்ன செய்வது என தன் ஆதரவாளர்களிடம் தொடர்ச்சியாக ஆலோசித்து வருகிறார். பொதுக்குழு நடந்தால் நிச்சயமாக ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, தன்னுடைய அதிகாரத்தைப் பறித்துவிடுவார்கள் என நினைக்கிறார். இதுவரைக்கும் எப்போதும் பார்த்திராத வகையில் சோகத்துடனும் அதேயேளவு கோபத்துடனும் இருக்கிறார். சட்ட ரீதியான முயற்சிகளின்மூலம் பொதுக்குழுவுக்கு தடை கோரும் முயற்சிகளைத்தான் அவரின் ஆதரவாளர்கள் எடுத்து வருகின்றனர். நிச்சயமான அதிரடி நடவடிக்கைகளில் அவர் இறங்குவார், அவர் எந்தளவுக்கு உச்சத்துக்குப் போனாலும் எடப்பாடி தரப்பும் விடுவதாக இல்லை. இதுதான் கட்சியின் தற்போதைய உண்மையான நிலை'' என்கிறார்கள்.