Published:Updated:

தீ...தி - 5: மம்தா பானர்ஜிக்கு இருப்பது தைரியமா, திமிரா... வெற்றிகள் எப்படி சாத்தியமாகின்றன?

கம்யூனிஸ்ட்டா, காங்கிரஸா என்பது மாறி, கம்யூனிஸ்ட்டா, திரிணாமுல் காங்கிரஸா என்ற நிலைக்கு தன் கட்சியை கொண்டுவந்து நிறுத்தினார் மம்தா.

பிரதமரை அவமதித்த முதலமைச்சர்களின் கதை இங்கு நிறையவே இருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பலமுறை தான் யார் என்பதை காக்கவைத்து காட்டியிருக்கிறார் ஜெயலலிதா. வாஜ்பாய்க்கும் இது நடந்திருக்கிறது. இந்திய அரசியல் வரலாற்றில் நடக்காத ஒன்று இப்போது நடந்துவிடவில்லை. ஆனால், மற்ற பிரதமர்களைப் போல அல்லவே நரேந்திர மோடி.

சர்வ வல்லமை பொருந்திய ஆட்சியாளர், அதுவும் ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் கைகளுக்குள் அடக்கிவைத்திருக்கும் பெரும் பலசாலியான மோடியை இப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் டீல் செய்ததைத்தான் டெல்லியால் இப்போது தாங்கிக்கொள்ள முடியவில்லை. மோடியை மட்டுமல்ல, அவரின் டாடியையும் இப்படித்தான் மம்தா டீல் செய்திருப்பார். ஏனென்றால், மம்தாவின் வரலாறு அப்படி!

மம்தா பானர்ஜிக்கு எப்போதும் அசட்டுத் துணிச்சல் அதிகம். எண்பதுகளில் இந்திரா காந்தி எமர்ஜென்சி அறிவித்தபோது நாடு முழுக்க அதற்கு எதிர்ப்பு அலை வீசியது. ஆனால், காங்கிரஸில் இருந்த இளம் தொண்டரான மம்தா, எதிர்ப்பு அலைக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.

இந்திராகாந்தியின் இறப்புக்குப்பின் நடைபெற்ற 1984 பொதுத்தேர்தலில் ராஜீவ் காந்தியால் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர். 29 வயதில், தனது முதல் தேர்தலிலேயே மூன்றுமுறை எம்பியான சோம்நாத் சாட்டர்ஜியை கிட்டத்தட்ட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் மம்தா. 98-ல் எப்படிப்பட்ட சூழலில் தனியாகக் கட்சி ஆரம்பித்து, யார் யாருடன் எல்லாம் கூட்டணி அமைத்து, தன்னுடைய அரசியல் பாதையை எப்படி அமைத்துக்கொண்டார் என்பதைத்தான் இந்த தொடரின் முந்தைய பாகங்களில் பார்த்தோம்.

மம்தா
மம்தா

மம்தா எப்போதுமே அதிரடிதான். பொறுமை, நிதானம், பக்குவம் எல்லாம் அவருக்குக் கொஞ்சமும் கிடையாது என்பதைப் பல சந்தர்ப்பங்கள் உணர்த்தியிருக்கின்றன. ஆனாலும், மம்தாவால் 2011-ல் எப்படி ஆட்சியைப் பிடிக்க முடிந்தது?!

தமிழ்நாட்டைப் போலவே தான் மேற்குவங்க அரசியலும். உள்ளுக்குள் சாதி அரசியல், மத அரசியல் புதைந்து இருந்தாலும் தேர்தல் என வந்துவிட்டால் தி.மு.க-வா, அ.தி.மு.க-வா என்றுதான் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதேபோல் மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ்டா, காங்கிரஸா என்பதுதான் போட்டி. ஆனால், ஒரே வித்தியாசம் என்னவென்றால் ஒரு கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்துவிட்டால் அவர்களைத் தொடர்ந்து ஆட்சியில் தக்கவைப்பார்கள் மேற்கு வங்க மக்கள். இதுதான் அம்மாநிலத்தின் கடந்த கால வரலாறு.

இதனால், காங்கிரஸை மூன்று தசாப்தங்களாக ஆட்சிக்கு வரவிடாமல் வீட்டுக்குள் முடக்கியது கம்யூனிஸ்ட் கட்சி. 34 ஆண்டுகள் அவர்களின் ஆட்சி தொடர்ந்தது. ஜோதிபாசு இந்திய வரலாற்றில் நீண்டகால முதலமைச்சராக சாதனைப் படைத்தார். இவருக்கு அடுத்து புத்ததேவ் பட்டாச்சார்யா வந்தார். ஆனால், 2006- 2011 ஆட்சி காலத்தில் புத்ததேவ் மக்களின் நிலங்களை கையப்படுத்தி டாடா உள்ளிட்ட கார்ப்ரேட்டுகளுக்கு கொடுக்க முயற்சி செய்ய, மக்களைக் காக்கும் மீட்பரானார் மம்தா.

கம்யூனிஸ்ட்டா, காங்கிரஸா என்பது மாறி, கம்யூனிஸ்ட்டா, திரிணாமுல் காங்கிரஸா என்ற நிலைக்கு தன் கட்சியை கொண்டுவந்து நிறுத்தினார் மம்தா.

இப்போது மோடி பிரச்னையால் தலைமைச் செயலாளரை ஓய்வு பெற வைத்து தன்னுடைய ஆலோசகராக நியமித்தது போல 2011-லேயே கம்யூனிஸ்ட் அரசு மீது வெறுப்பில் இருந்த பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தன்னுடைய கட்சியின் வேட்பாளராக நிறுத்தினார் மம்தா. இதன் மூலம் அவர் சொல்ல வந்தது சாதாரண மக்கள் மட்டுமல்ல மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் உயரதிகாரிகளும், படித்தவர்களும்கூட ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதுதான்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

2011 சட்டமன்றத் தேர்தலுக்கு, ஆரம்பகாலத்திலேயே தன்னோடு வந்து இணைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அறிவுசார் சமூகம், கம்யூனிஸ்டுகளின் ஆதரவாளர்களாக முன்னர் இருந்தவர்கள் என அத்தனை பேரையும் ஒன்றுதிரட்டி தன்னுடைய கட்சியின் வேட்பாளராக நிறுத்தினார். பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்தால் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் காங்கிரஸோடு கூட்டணி அமைத்தார். எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்திய மம்தா பானர்ஜி இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

மம்தா அலை நகரம், கிராமம் என எந்த வித்தியாசமும் இன்றி மேற்கு வங்கம் முழுக்க வீசியது. கம்யூனிஸ்ட் கட்சியை சுனாமி போல சுருட்டினார் மம்தா. ‘’தாய், தாய்மண், மக்கள்'’ என்கிற மம்தாவின் முழுக்கம் மேற்கு வங்கம் முழுக்க ஓங்கி ஒலித்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றது திரிணாமுல் காங்கிரஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

294 தொகுதிகளில் 227 தொகுதிகளில் வென்றது திரிணாமுல் - காங்கிரஸ் கூட்டணி. திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே 184 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேற்குவங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா அவரது அமைச்சர்கள் பலரும் முதல் முறை வேட்பாளர்களிடம் படுதோல்வியை சந்தித்தனர். ஒரு பெண் நீண்ட காலம் ஜனநாயக முறைப்படி நடந்துவந்த கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். ‘’எதிர்பாராத முடிவு... ஆனால் மக்களின் முடிவுக்கு தலைவணங்குகிறோம்'’ என்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

20.05.2011 அன்று மேற்கு வங்கத்தின் முதல்வராகப் பதவியேற்றார் மம்தா பானர்ஜி. மதியம் 1:01 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க நல்ல நேரம் குறித்து, வீட்டில் இருந்து குட்டி சான்ட்ரோ காரில் ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார் மம்தா. பதவியேற்றதும், "சிங்கூர், நந்திகிராமில் விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்’’ என உத்தரவாதம் அளித்தார். மாவோயிஸ்ட் பிரச்னை மூன்றே மாதங்களில் தீர்க்கப்படும் என்றார். ஆனால் இவை எதுவும் அவர் சொன்னபடி நடக்கவில்லை.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இரும்பு கரம் கொண்டு ஆட்சி நடத்த விரும்பும் மோசமான கோபக்கார ஆட்சியாளராக உருவெடுத்தார் மம்தா. அவரால் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. எதிர்த்து கேள்விகேட்ட பத்திரிக்கை நிருபர்கள் தொடங்கி மாணவர்கள் வரை பலரையும் ‘’நீ கம்யூனிஸ்ட்’’, ‘’நீ மாவோயிஸ்ட்’’ என அடையாளப்படுத்தி அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை எடுத்தார் மம்தா பானர்ஜி.

தன் கட்சிக்காரர்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருந்தார். கற்பழிப்பு, கொலை, கொள்ளை என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ஒற்றை வரியில் பதில் சொன்னார். ‘’எல்லாமே தன் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க எதிர்க்கட்சிகள் செய்யும் சதி'’ என்றார். இதன் உச்சமாக ஆட்சிக்கு வந்ததும் பழிவாங்கும் உணர்ச்சி அவரிடம் அதிகம் இருக்கிறது என்பதற்கான நிறைய சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து நடந்தன. சிலர் மீது வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சில வழக்குகள் ஒன்றும் இல்லாமல் செய்யப்பட்டன.

ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில், 2012 ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸோடு முரண்பட்டு நின்றார் மம்தா. கொள்கைக்காக அல்ல, தனிப்பட்ட விரோதத்துக்காக. 1990-களில் காங்கிரஸ் உள்கட்சி தேர்தலில் தான் தோற்கடிக்கப்பட பிரணாப் முகர்ஜியே காரணம் என சொல்லிவந்த மம்தா, 2012 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பிய பிரணாபை பழிவாங்கத் துடித்தார்.

சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவுடன் இணைந்து பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக வேறு மூன்று பெயர்களை பரிந்துரைத்தார் மம்தா. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மம்தா - முலாயம் கூட்டணி அப்துல் கலாம், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சோம்நாத் சாட்டர்ஜி என மூன்று பெயர்களை முன்மொழிந்தது. இந்தப் பட்டியலில் மன்மோகன் சிங்கின் பெயரைப் பார்த்து மிரண்டு போனது காங்கிரஸ்.

வங்காளியை எதிர்க்கிறார் என்கிற அவப்பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் முதன்முதலில் தேர்தலில் தோற்கடித்த சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரை இதில் கொண்டுவந்துசேர்த்தார் மம்தா.

அப்துல் கலாம்
அப்துல் கலாம்

பின்னர் ‘’கலாம்தான் எங்கள் முதல் சாய்ஸ்’’ என்று மம்தாவும், முலாயமும் அறிவித்தார்கள். ஆனால், மம்தா எதிர்பாராத ட்விஸ்ட்டாக முலாயம் சிங் யு-டர்ன் அடித்தார். ‘’நான் கலாம் என்கிற பெயரையே சொல்லவில்லை’’ என முலாயம் பல்ட்டி அடிக்க, காட்சிகள் மாறின. மம்தா தனித்து விடப்பட்டார். கட்சிகளின் இந்தக் குழப்ப கோதாவாவில் குதிக்க விரும்பாமல் அப்துல் கலாம் தேர்தலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். ஜெயலலிதாவின் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளராக அசாமின் பி.ஏ.சங்மா முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்துல் கலாம் ஒதுங்கியதால் பா.ஜ.க-வும் சங்மாவை ஏற்றுக்கொண்டது.

ஆனால், முலாயம் சிங், மாயாவதி ஆகியோர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிக்க, காங்கிரஸின் கை ஓங்க ஆரம்பித்தது. இருந்தாலும் அவ்வளவு சீக்கிரத்தில் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராகயில்லை மம்தா. சஸ்பென்ஸை நீட்டித்துக்கொண்டே போன மம்தா, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ‘’வேறு மாற்று வேட்பாளர்கள் இல்லாததால் கனத்த இதயத்தோடு பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறேன்'’ என அறிவித்தார்.

இதற்கு அடுத்துத்தான் மம்தாவின் அரசியல் வாழ்க்கையில் இப்போது வரை புயல் வீசிக்கொண்டிருக்கும், சாரதா, நாரதா (இந்தப் பெயர் வேண்டும் என்றே வைக்கப்பட்டது) சம்பவங்கள் நடைபெற்றன. சாரதா சிட் ஃபண்ட் நிறுவனம் மக்களிடம் இருந்து பணத்தை வாங்கி, அதை வேறு இடங்களில் முதலீடு செய்து இரண்டே ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவோம் என ஆசைகாட்டியது.

‘’இரண்டு லட்சம் போட்டால் நாலு லட்சம்’’ எனப் பேராசைப்பட்டு மக்களும் மூதலீடு செய்ய, சாரதா நிறுவனத்துக்காக பிரபலங்களும் விளம்பரங்களில் தோன்ற, கிட்டத்தட்ட 17 லட்சம் மக்கள் முதலீடு செய்த 43 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை சுருட்டியது சாரதா நிறுவனம். இதன் நிர்வாகி சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். ஆனால், ‘’அரசியல்வாதிகள் என்னிடம் இருந்து பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்கள்'’ என அவர் குற்றம் சாட்ட, மீடியாவும் இதில் ஆளும் கட்சிக்குத் தொடர்பிருக்கும் என சந்தேகம் எழுப்ப வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றிபெற்றார் மம்தா பானர்ஜி. மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 34 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. "சாரதா எங்களை ஒன்றும் செய்யாது, எங்கள் கைகள் கறைபடியாதவை" என்று அறிவித்தார் மம்தா.

தீ...தி | மம்தா பானர்ஜி தொடர்
தீ...தி | மம்தா பானர்ஜி தொடர்

சாரதா வழக்கைத் தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் அம்பலப்படுத்திய ஊழல்தான் நாரதா ஊழல் வழக்கு. மேத்யூ சாமுவேல் இதற்கு முன்னதாக தெஹல்கா பத்திரிகையில் பணியாற்றி பல்வேறு ஊழல்களை வெளி கொண்டுவந்தவர். பத்திரிகையாளர் என தெரியாமல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏ எனப் பலரும் லஞ்சம் வாங்க, அதையெல்லாம் வீடியோ எடுத்து நாரதா நியூஸ் என்ற பெயரில் வெளியிட்டார் சாமுவேல். இது 2016 தேர்தலுக்கு முன்பாக நடந்தது. ஆனால், இந்த ஸ்டிங் ஆபரேஷன் 2014-ல் செய்யப்பட்டது. ஊழல் வழக்கு மீடியாக்களில் வெளிவந்தும், மிகப்பெரிய சர்ச்சையாகியும், 2016 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் மிகப்பெரிய வெற்றிபெற்றார் மம்தா பானர்ஜி. 294 தொகுதிகளில் 211 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகளிலேயே அவரால் வெல்ல முடிந்தது. 12 எம்பிக்களை இழந்தது திரிணாமுல். ஆனாலும், 2021 தேர்தலில் திரிணாமுல் மீண்டும் பெருவெற்றிபெற்றது எப்படி, கட்சி வென்றாலும் மம்தா பானர்ஜி நந்திகிராமில் தோற்றது ஏன்?! அடுத்த வாரம் அலசுவோம்!

- வங்கம் விடாது..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு