Election bannerElection banner
Published:Updated:

ஒதுங்கியிருக்கிறாரா, விலகியிருக்கிறாரா? - சசிகலா கடிதம் உணர்த்தும் 5 விஷயங்கள்

சசிகலா
சசிகலா

`தியாகத் தலைவி' என்று தன் தொண்டர்கள் மத்தியில், தனக்கிருக்கும் அடையாளத்தைக் கழக தொண்டர்களிடையே வலுப்படுத்திக்கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும் என்று சசிகலா நினைக்கிறாரா?

லுதமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் தாக்கம் எப்படியிருக்கும் என அனைவரும் விவாதித்துக்கொண்டிருக்கும்போது, `அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்' எனத் தொண்டர்களுக்குக் கடிதம் வெளியிட்டிருக்கிறார் சசிகலா.
சசிகலா, சி.ஆர்.சரஸ்வதி
சசிகலா, சி.ஆர்.சரஸ்வதி

கடிதம் மூலம் சசிகலா சொல்ல வருவது என்ன... கவனிக்க வேண்டியது என்ன?

1. கழகக்கொடி மிஸ்ஸிங்:

நேற்று முன்தினம் (மார்ச் 2) சசிகலாவை அ.ம.மு.க-வின் கொள்கைபரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி சந்தித்துவிட்டுச் சென்றார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், `கழகப் பொதுச்செயலாளர், முகாம் அலுவலகம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க கொடியுடன் அந்தச் செய்திக்குறிப்பு வெளியாகியிருந்தது. அந்தச் செய்திக்குறிப்பு வெளியான அடுத்த நாளே, கடித வடிவத்திலான மற்றொரு செய்திக்குறிப்பு சசிகலாவின் கையெழுத்தோடு வெளியானது. அதில், கழகக்கொடியோ, பொதுச்செயலாளர் என்ற அடையாளமோ இல்லை. மாறாக, `அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்' என்கிற அதிர்ச்சி தரும் அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

2. `ஒருங்கிணந்து ஒற்றுமையுடன்...’

கடிதத்தின் முதல் பத்தியில், ``என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்துக்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.

ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் ஆகிய இரண்டு வார்த்தைகளை சசிகலா பயன்படுத்தியிருப்பதன் மூலம், `அ.தி.மு.க., அ.ம.மு.க எனப் பிரிந்திருக்கும் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என அழைப்பு விடுத்திருப்பதாகவே தெரிகிறது. இந்த இடத்தில் 1989-ல் நடந்த ஒரு விஷயத்தை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ஜானகி
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ஜானகி
1952 டு 2016: ஆளுங்கட்சி Vs  எதிர்க்கட்சி! #ElectionRewind

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 1989 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்தன. ஜெயலலிதா அணி 22.3 சதவிகித வாக்குகளையும், ஜானகி அணி 9.1 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தன. தி.மு.க., அந்தத் தேர்தலில் எளிதாக வெற்றிபெற்றதற்குக் காரணம் அ.தி.மு.க இரண்டாக உடைந்ததுதான் என்று பரவலாகப் பேசப்பட்டது.

இதையடுத்து ஜானகி ஓர் அறிக்கை வெளியிட்டார். `எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவளியுங்கள். நான் அரசியலிலிருந்து விலகுகிறேன்' என்பதே அந்த அறிக்கையின் சுருக்கம். `கழகம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காக ஜானகி எடுத்த முடிவு இது' என்று அந்தச் சமயத்தில் சொல்லப்பட்டது.

தற்போது கிட்டத்தட்ட அதே மாதிரியான கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சசிகலா. ஆனால், ஜானகியின் கடிதத்தில் வெளிப்படையாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. சசிகலா கடிதத்தில் `அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும்' என்று மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது.

3. பொது எதிரி

சசிகலா கடிதத்தின் இரண்டாம் பத்தியில், ``நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்குக் காட்டிய தி.மு.க-வை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் என்ன மாற்றம் நிகழும்? #VikatanPoll

`தி.மு.க ஆட்சிக்கு வரக் கூடாது, அம்மாவின் பொற்கால ஆட்சி நிலவிட வேண்டும்' என்பதே முதல் இரண்டு பத்திகளின் சுருக்கம். `அம்மாவின் ஆட்சியைத் தருவோம்' என்று அ.ம.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே கூறிவருவதால், யாருக்கு வேண்டுமானாலும் தொண்டர்கள் வாக்களித்துக்கொள்ளலாம் என்று சசிகலா சொல்லியிருப்பதாகவும் பொருள்படுகிறது. மற்றொரு வகையில், `எதிரிகளுக்கு வாக்குகள் செல்லக் கூடாது’ என்று வலியுறுத்துவதாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம்.

4. ` தியாகத் தலைவி’ பட்டம்:

இந்தக் கடிதத்தின் மற்றொரு பத்தியில், ``நான் என்றும் பதவிக்காகவும், பணத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் ஆசைப்பட்டதில்லை. புரட்சித்தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்'' என்று கூறியிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா பேசிய அதே வார்த்தைகள்தாம் இவை. இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் அ.தி.மு.க அமைச்சர்கள் சசிகலாவை நேரில் சந்தித்து, `கழகப் பொதுச்செயலாளராக நீங்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்' என்று கோரிக்கை வைத்த நிகழ்வு அரங்கேறியது. இப்போதும் சசிகலா அதே வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று அலசலாம்.

சசிகலா
சசிகலா

வருகிற சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வுக்காக சசிகலா பிரசாரம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி நடந்து, ஒருவேளை அ.தி.மு.க தோற்றுவிட்டால், `அம்மாவின் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுத்தி, அ.தி.மு.க வாக்குகளைப் பிரித்துவிட்டார் சசிகலா. அதனால்தான் நாம் தோற்றுவிட்டோம்' என்று அ.தி.மு.க தலைமை கூறுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. இவையெல்லாம் நடந்தால் சசிகலாவை துரோகியாக சித்திரிக்க அ.தி.மு.க தலைமை முயலும்.

ஆனால், தற்போது `அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தொடர உழைக்க வேண்டும். நான் அரசியலில் இருந்து ஒதுங்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார் சசிகலா. இதன் காரணமாக, ``அம்மாவின் ஆட்சி தொடர வேண்டுமென்பதற்காகவும், கழகம் உடைந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான் சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கி தியாகம் செய்திருக்கிறார்'' என்று கழகத் தொண்டர்களிடையே பேச்சுகள் அடிபடும். `தியாகத் தலைவி' என்று தன் தொண்டர்கள் மத்தியில், தனக்கிருக்கும் அடையாளத்தைக் கழகத் தொண்டர்களிடையே வலுப்படுத்திக்கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும்.

சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கிய பிறகு அ.தி.மு.க தேர்தலில் தோல்வியடைந்துவிட்டால், `அ.தி.மு.க தலைமைக்கு ஆளுமை இல்லை' என்ற பேச்சுகள் எழும். தேர்தல் தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க-வின் முக்கியப்புள்ளிகள் சிலரே, `சசிகலாதான் அ.தி.மு.க-வுக்கு தலைமையேற்க வேண்டும்' என்று கொடிபிடிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அந்தச் சமயத்தில் ரீ-என்ட்ரி கொடுத்து அ.தி.மு.க-வை சசிகலா கைப்பற்ற முயலலாம்.

சசிகலா
சசிகலா

5. ஒதுங்கியிருக்கிறாரா அல்லது விலகியிருக்கிறாரா?

இந்தக் கடிதத்தில், அரசியலைவிட்டு ஒதுங்கியிருக்கப்போவதாக மட்டுமே கூறியிருக்கிறார் சசிகலா. விலகப்போவதாக அவர் குறிப்பிடவில்லை. விலகியிருப்பதற்கும் ஒதுங்கியிருப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. ``சசிகலா, தண்டனை பெற்ற குற்றவாளி என்பதால் வரப்போகும் தேர்தலில் அவர் போட்டியிட முடியாது. எனவே `ஒதுங்கியிருக்கிறேன்’ என்று சொல்லி சசிகலா பதுங்கியிருக்கிறார்'' என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்தக் கடிதத்தின் மூலம் தன் அரசியல் வாழ்வுக்கு சசிகலா முற்றுப்புள்ளி வைத்ததாகத் தெரியவில்லை. தன்னை வலுப்படுத்திக்கொண்டு அரசியலில் ரீ-என்ட்ரி கொடுக்க, சசிகலா போட்டிருக்கும் பிள்ளையார்சுழியாகக்கூட இந்தக் கடிதம் இருக்கலாம்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு