Published:Updated:

PUBG:`FAU-G' அறிமுகம்; ஜிடிபி வீழ்ச்சி; சீனாவுக்கு எச்சரிக்கை - பப்ஜி தடையின் பின்னணி என்ன?

FAU-G vs PUBG
FAU-G vs PUBG

பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டதற்கான உண்மைக் காரணம் என்ன என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை.

அடி, உதை, துப்பாக்கிச்சூடு என ரத்தம் தெறிக்கத் தெறிக்க விளையாடப்படும் ஒரு வீடியோ கேம் `பப்ஜி.' இந்தியாவில் தினசரி சுமார் ஐந்து கோடிப் பேர் விளையாடிவந்த பப்ஜி விளையாட்டை, பாதுகாப்பு காரணங்களுக்காகக் கடந்த வாரத்தில் தடை செய்தது மத்திய அரசு.

நான்கு பேர் சேர்ந்து குழுவாக விளையாடும் வசதிகொண்ட இந்த விளையாட்டின் இறுதியில், விளையாடிய நான்கு பேரும், விளையாட்டில் எத்தனை பேரைக் கொன்றிருக்கிறார்கள் என்பது காட்டப்படும். அதில் அதிகம் பேரைக் கொன்றவர் `நான்தான் கெத்து' என்று மார்தட்டிக்கொள்வார். இந்த விளையாட்டுக்குள்ளாக மட்டும் கொலைகள் நடப்பதில்லை. பப்ஜி-யின் காரணமாக நிஜத்திலும் சில கொலைகள், உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. அதில் சில சம்பவங்களைப் பார்ப்போம்.

Pubg
Pubg

பப்ஜியால் ஏற்பட்ட கொடூரங்கள்!

கர்நாடக மாநிலம், பெலாகவியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்திருக்கிறார். பப்ஜி ஆடத் தொடங்கியதால், வேலை தேடுவதைக் கைவிட்டார் அவர். எந்நேரமும் பப்ஜி ஆடியதால், அந்த இளைஞரை அடிக்கடி கண்டித்திருக்கிறார் அவரின் தந்தை. ஒருநாள் இன்டர்நெட் ரீசார்ஜ் செய்யத் தந்தையிடம் அந்த இளைஞர் பணம் கேட்க, `அதெல்லாம் தர முடியாது. பப்ஜியை நிறுத்திவிட்டு வேலை தேடு' என்று கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அன்றிரவு தன் பெற்றோர்கள் உறங்கிய பின் ஒரு கூர்மையான கத்தியைக் கொண்டு தன் தந்தையைச் சரமாரியாகக் குத்தி கொலை செய்துவிட்டார் அந்த இளைஞர்.
அதேபோல டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், வீட்டுக்குத் தெரியாமல் பள்ளியை கட் அடித்துவிட்டு பப்ஜி ஆடியிருக்கிறார். பலமுறை கண்டித்த பிறகு, `இனிமேல் விளையாட மாட்டேன்' என்று சொல்லிவிட்டு வீட்டுக்குத் தெரியாமல் மீண்டும் பப்ஜியில் மூழ்கியிருக்கிறார் அவர். இது குறித்து பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார் அந்தப் பள்ளி மாணவரின் உடன்பிறந்த சகோதரி. அதன் பிறகு மீண்டும் அவரை மிகக் கடுமையாகப் பெற்றோர்கள் கண்டித்திருக்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவர், தாய், தந்தை, அக்கா ஆகிய மூவரையும் குத்திக் கொலை செய்துவிட்டார்.
மகாராஷ்டிர மாநிலம், தானேவைச் சேர்ந்த 15 வயது சிறுவன், `இனிமேல் நீ பப்ஜி விளையாடக் கூடாது' என்று கண்டித்ததற்காக தன் அண்ணனையே அடித்துக் கொன்றுவிட்டான். அதே மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ஹிங்கோலி மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், ரயில்வே ட்ராக்கில் அமர்ந்து பப்ஜி ஆடியிருக்கிறார்கள். பப்ஜி விளையாடும் ஆர்வத்தில் ரயில் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. ரயில் அவர்கள்மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் ஒருபுறம் நடக்க, பப்ஜி விளையாட்டு காரணமாக சில விநோத சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே பார்ப்போம்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், பப்ஜி விளையாடிக்கொண்டே தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டைக் குடித்துவிட்டார். இதன் காரணமாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக்கொண்டார். ஆனால், ஆசிட் அருந்திய காரணத்தால் அவருக்கு அல்சர் ஏற்பட்டு, வயிற்றில் எரிச்சலும் உண்டாகியிருக்கிறது. அந்த எரிச்சலைக்கூடப் பொருட்படுத்தாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போதே பப்ஜி ஆடியிருக்கிறார் அவர்.

PUBG
PUBG

மற்றொரு சம்பவத்தில், கர்நாடக மாநிலத்தில் முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர் ஒருவர், விடைத்தாளில் பப்ஜி குறித்து எழுதியிருக்கிறார். எகனாமிக்ஸ் பரீட்சையில் கேள்வித்தாளில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுதாமல், பப்ஜி விளையாட்டில் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது என்று எழுதிவைத்திருக்கிறார் அவர். பள்ளியில் நன்றாகப் படித்துக்கொண்டிருந்த மாணவர், கல்லூரியில் இப்படி எழுதியிருப்பதைக் கண்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் பப்ஜி விளையாட்டு எப்படி ஒருவரை மாற்றிவிடுகிறது என்பதற்கான உதாரணங்கள். `சாதாரண செல்போன் விளையாட்டு என்று பப்ஜியை எளிதாகக் கடந்துவிட முடியாது. விளையாடும் அனைவரையும் அடிமையாக்கிவிடும் சக்திகொண்டது பப்ஜி விளையாட்டு’ என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

ஜி.டி.பி வீழ்ச்சியும் பப்ஜி தடையும்!

பப்ஜி விளையாட்டை பாகிஸ்தான், ஜோர்டான், ஈராக் உள்ளிட்ட சில நாடுகள் ஏற்கெனவே தடை செய்துள்ளன. நேபாளத்திலும் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் அந்தநாட்டின் உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கியது. `சமூக மற்றும் மனநலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது; இளைஞர்களை அடிமைப்படுத்தி வன்முறைக்கு ஆளாக்குகிறது; இளைஞர்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வையே சீரழிக்கிறது...’ போன்ற காரணங்களை முன்வைத்துத்தான் மேற்கண்ட நாடுகள் அனைத்தும் பப்ஜி விளையாட்டைத் தடை செய்தன.

ஆனால், இந்திய அரசு இந்த விளையாட்டைத் தடை செய்திருப்பதற்கான காரணமே வேறு. தகவல் தொழில்நுட்ப சட்டம் 69A பிரிவின்படி கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்கீழ் அவசரகால அடிப்படையில், தொடர்ந்து இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற காரணத்துக்காகத்தான் இந்த பப்ஜி உள்ளிட்ட 177 செயலிகளைத் தடை செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், சிலர் இந்த பப்ஜி தடைக்கு வேறொரு காரணத்தை சமூக வலைதளங்களில் முன்வைக்கிறார்கள்.
ஜி.டி.பி
ஜி.டி.பி
3 பிள்ளைகள்... ஒரே செல்போன்; ஆன்லைன் வகுப்புகளால் அதிகரிக்கும் தற்கொலைகள் - தீர்வு என்ன?

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) வரலாறு காணாத சரிவைப் பெற்றிருக்கிறது. இந்த நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து -23.9 சதவிகிதமாக இருப்பதாகக் கடந்த வாரம் தகவல் வெளியிட்டது மத்திய அரசு. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பலதரப்பினரும் மத்திய அரசுமீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து இணையவெளி, செய்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை திசை திருப்பத்தான் இந்தச் சமயத்தில் பப்ஜி உள்ளிட்ட 118 சீனச் செயலிகளை மத்திய அரசு தடை செய்திருக்கிறது என்ற கருத்து நெட்டிசன்கள் மத்தியில் பரவலாகச் சொல்லப்பட்டன.

இந்திய நிறுவனத்தின் புதிய விளையாட்டுக்காகத் தடை செய்யப்பட்டதா பப்ஜி?

`ஜி.டி.பி வீழ்ச்சியை மறைக்கவே இந்த பப்ஜி தடை' என்ற கருத்து இணையவெளியில் பரவ ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே புதிய அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். அந்த அறிவிப்பின் மூலம், பப்ஜிக்கு இணையான இந்திய நிறுவனம் தயாரிக்கும் `FAU-G’ என்ற கேம் ஒன்று விரைவில் வெளிவரவிருப்பதாகப் பதிவு செய்திருந்தார் அக்ஷ்ய் குமார்.

பிரதமர் மோடியின் ஆத்மநிர்பார் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில், ஒரு மல்ட்டி பிளேயர் அதிரடி விளையாட்டை வெளியிடுவதில் பெருமிதம்கொள்கிறேன். இளைஞர்கள் இதை விளையாடுவதன் மூலம் அச்சமற்ற ராணுவ வீரர்களின் தியாகங்களைப் பற்றி அறிந்துகொள்வார்கள். இந்தச் செயலியின் வருவாயில் 20 சதவிகித தொகை பிரதமரின் `பாரத் கே வீர்' அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.
அக்‌ஷய் குமார்

இந்த அறிவிப்பை அக்‌ஷய் குமார் வெளியிட்டவுடன், ``டென்சன்ட் கேம்ஸ் நிறுவனத்தின் `கால் ஆஃப் டியூட்டி' என்ற விளையாட்டும் சீன நிறுவனத்தைச் சேர்ந்ததுதான். பப்ஜி விளையாட்டைத் தயாரித்த நிறுவனம்தான் இந்த விளையாட்டையும் தயாரித்திருக்கிறது. ஆனால், `கால் ஆஃப் டியூட்டி' விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் அவ்வளவு பிரபலமில்லை என்பதால் தடை செய்யப்படவில்லை. அதேநேரத்தில் பப்ஜி விளையாட்டைத் தடை செய்தால்தான் FAU-G என்ற கேம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடையும். எனவேதான் பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது'' என்று நெட்டிசன்கள் பலரும் பப்ஜி தடைக்கு புதுக் காரணம் ஒன்றைப் பதிவிடத் தொடங்கினர்.

FAU-G
FAU-G

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு விளக்கமளித்திருக்கிறார், FAU-G விளையாட்டைத் தயாரித்திருக்கும் `nCore games' நிறுவனத்தின் துணை நிறுவனர் விஷால் கொன்டால்...

FAU-G விளையாட்டுத் தயாரிப்பை நாங்கள் எப்போதோ தொடங்கிவிட்டோம். இந்த ஆண்டு மே மாதம் முதலே இந்த விளையாட்டுத் தயாரிப்பில் நாங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். பப்ஜி தடையும் FAU-G அறிவிப்பும் தற்செயலாக நடைபெற்ற ஒன்று.
விஷால் கொன்டால்

உண்மையில் பப்ஜி தடைக்குக் காரணம் என்ன?

`பப்ஜி விளையாட்டு இளைஞர்களை அடிமையாக்கி அவர்களை வன்முறைக்குத் தூண்டுகிறது' என்று சொல்லி குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட், சூரத் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் அமைப்பு, `பப்ஜி விளையாட்டால் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் பெருமளவு குறைந்துவிட்டன. எனவே, அந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டும்' என ஜம்மு காஷ்மீர் ஆளுநரிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்திருந்தனர். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தொடர்ச்சியாக பப்ஜி விளையாட்டைத் தடை செய்ய வேண்டுமென மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்திவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்து வருகின்றனர்.

பப்ஜி
பப்ஜி
Vikatan
`இவ்வளவு வன்முறைகள், உயிரிழப்புகள், கோரிக்கைகள் என எதற்காகவும் பப்ஜியைத் தடை செய்யாத மத்திய அரசு, எல்லைப் பதற்றம் காரணமாக, சீன அரசுக்குச் சவால்விடும் வகையில்தான் தற்போது இந்த விளையாட்டைத் தடை செய்திருக்கிறது’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

`` இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதால் பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட 177 செயலிகளைத் தடை செய்திருப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது. ஒரு செயலிக்கு நம் நாட்டில் செயல்பட அனுமதி அளிக்கப்படும்போதே, அது பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உள்ளது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், பாதுகாப்பற்ற 177 செயலிகளை அனுமதித்ததே தவறு. இந்த 177 செயலிகளுக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை இவை அனைத்துமே சீனாவைச் சேர்ந்த செயலிகள் என்பதுதான். அப்படிப் பார்க்கையில், `வேறு எந்த நாட்டைச் சேர்ந்த செயலியும் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கவில்லையா?’ என்ற கேள்வி எழுகிறது.

பொதுவாக, செயலிகள் தடை செய்யப்படும்போது இப்படியான பொது அறிவிப்புகள் வெளிவருவதில்லை. எனவே, இது பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கைபோல தெரியவில்லை. சீனா-இந்தியா எல்லைப் பதற்றம் அதிகரித்துவரும் இந்தச் சூழலில் சீன அரசுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுவதாகத்தான் இந்த நடவடிக்கையைப் பார்க்க முடிகிறது. எது எப்படியோ, இளைஞர்களின் நேரத்தை வீணடித்து, அவர்களுக்குள் வன்முறையைத் தூண்டும் இது போன்ற செயலிகள் தடை செய்யப்பட்டது நல்ல விஷயம்தான். அதேநேரத்தில் இந்த விளையாட்டுக்கு மாற்றாக சில விளையாட்டுகள் வரப் போவதாகக் கிடைத்த தகவல்கள் வேதனையளிக்கின்றன" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அடுத்த கட்டுரைக்கு