Published:Updated:

அண்ணாமலையை ரவுண்டு கட்டும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்! - பின்னணி என்ன?

அண்ணாமலை

பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை திமுக தலைவர்களும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் விமர்சித்துவருகிறார்கள். என்ன காரணம்?

அண்ணாமலையை ரவுண்டு கட்டும் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள்! - பின்னணி என்ன?

பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை திமுக தலைவர்களும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் விமர்சித்துவருகிறார்கள். என்ன காரணம்?

Published:Updated:
அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை திமுக தலைவர்களும் அமைச்சர்களும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் சகட்டுமேனிக்கு விமர்சித்துவருகிறார்கள். அதுபோக, திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அண்ணாமலையை விமர்சிக்கிறார்கள். இது இன்று அல்ல... கடந்த சட்டமன்றத் தேர்தலில் இன்றைய அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் அண்ணாமலை விமர்சித்தார். அதற்கு, தி.மு.க எம்.பி கனிமொழி கடுமையாக எதிர்வினையாற்றினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலினின் சமீபத்திய துபாய் பயணம் குறித்து விமர்சன கருத்து தெரிவித்ததற்காக அண்ணாமலையிடம் அவதூறு பரப்பியதாக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு தி.மு.க வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, “முதல்வர் குறித்த பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்புக் கேட்காவிட்டால், அவர்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி.மு.க அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “தகுதியற்ற நபர்கள் பொது இடங்களில் தெரிவிக்கும் தவறான தகவல்களுக்கு பதில் அளிப்பது என் வேலை இல்லை” என்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், ``அண்ணாமலைக்கு அரசியல் பேசத் தெரியவில்லை. அதனால், அரசியல் தலைவர்களைப் பற்றி அவர் பேசிவருகிறார். தன்மீது கவனத்தை ஈர்ப்பதற்காக, தி.மு.க-வைப் பற்றியும் முதல்வரின் துபாய் பயணம் பற்றியும் அவர் விமர்சனம் செய்துவருகிறார்” என்றார்.

“பொதுவெளியில் அண்ணாமலை பேசிவரும் கருத்துகள் அருவருப்பு தரும் அநாகரிக அரசியலாகும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சாடியுள்ளார். “அண்ணாமலை, அரசியலில் ஒரு கத்துக்குட்டி” என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் விமர்சனம். இப்படியாக, தி.மு.க தலைவர்களும், தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் அண்ணாமலையைத் தொடர்ச்சியாக விமர்சித்துவருவது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்.

வன்னி அரசு
வன்னி அரசு

“தங்களின் அரசியல் எதிரிகள்மீது அவதூறுகளை அள்ளிவிடுவது, உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவது என்பது பா.ஜ.க-வுக்கே உரிய பாணி. மிக மோசமான அவதூறைப் பரப்பிவிட்டு, அதைப் பின்னர் ஒரு காலத்தில் மறுக்கவும் செய்வார்கள். அல்லது ‘அது கட்சியின் கருத்து அல்ல... அது தனிப்பட்ட கருத்து...’ என்று சொல்லி நழுவிக்கொள்வார்கள். அந்த வகையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசுகிற பேச்சுகளை, அண்ணாமலை என்கிற தனிப்பட்ட ஒரு நபரின் பேச்சுகளாகவோ, அவதூறுகளாகவோ நான் பார்க்கவில்லை.

தி.மு.க., வி.சி.க., இடதுசாரிக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் மீது அண்ணாமலை தொடர்ச்சியாக வெளியிடும் அவதூறுகளும், அர்த்தமற்ற பேச்சுகளும் ஒரு கவன ஈர்ப்பு அரசியல். ‘தமிழ்நாட்டு அரசியல் என்பது தி.மு.க Vs அ.தி.மு.க அல்ல... அது, தி.மு.க Vs பா.ஜ.க அரசியல் என்று சொல்வதற்காக எந்த எல்லைக்கும் போய் தி.மு.க-வை அவர் விமர்சனம் செய்கிறார். ‘தி.மு.க-வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி. எங்கள் இரு கட்சிகளுக்கு இடையிலான அரசியல்தான் நடக்கிறது’ என்று நிறுவுவதற்காக எவ்வளவு மோசமான பொய்களையும் அபாண்டங்களையும் சொல்வதற்குத் தயங்காத கட்சியாக பா.ஜ.க இருக்கிறது.

‘தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்கிறேன் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துவிட்டு முதல்வர் சென்றார். அதை, பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரின் உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத்திலேயே பாராட்டினர். அந்தப் பயணத்தை அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார். அதன் மூலமாக, தமிழர்களையும் தமிழ்நாட்டையும் கொச்சைப்படுத்துகிறார்.

அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலம் தன் பக்கம் கவனத்தை ஈர்ப்பது என்கிற மலிவான அரசியல் உத்தியை அண்ணாமலை கையாள்கிறார். தன் பின்னால் வலிமைவாய்ந்த ஓர் அரசு இருப்பதால், எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும், அதிலிருந்து எளிதாகத் தப்பிக்க முடியும் என்றும் நினைத்து இப்படியெல்லாம் அண்ணாமலை நடந்துகொள்கிறார். இது மிகவும் ஆபத்தானது, ஜனநாயகத்துக்கு எதிரானது.

தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழிசை சௌந்தர்ராஜன்

பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர்களாக இல.கணேசன், தமிழிசை சௌந்தரராஜன் போன்ற தலைவர்கள் இருந்தபோது, தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டனர். ஆனால், அண்ணாமலையிடம் அதைப் பார்க்க முடியவில்லை. முதல்வர் மீதும், மற்ற கட்சிகளின் தலைவர்கள் மீதும் பொறுப்பற்ற முறையில், ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் ஒருவர் அள்ளிவிடும்போது, அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? அதனால்தான், அண்ணாமலையை எங்கள் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விமர்சிக்கிறார்கள்” என்றார் வன்னிஅரசு.

இது குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் குமரகுருவிடம் பேசினோம்.

“தி.மு.க தலைவர்களை அண்ணாமலை விமர்சிக்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், விமர்சிக்கும் அளவுக்கு அந்தத் தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் பிரச்னை. தங்களிடம் தவறுகளை வைத்துக்கொண்டு யாரும் தங்களை விமர்சிக்கக் கூடாது என்று சொன்னால் எப்படி?

குமரகுரு
குமரகுரு

அண்ணாமலை கேட்கும் கேள்விகளுக்கு முறையாக பதில் சொல்வதுதான் ஆரோக்கியமான அரசியல். மாறாக, தன்னை விமர்சித்துவிட்டார், தன்னைக் கேள்வி கேட்டுவிட்டார் என்பதற்காக, அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியல்ல. மேலும், ‘உனக்கு என்ன தெரியும்... ஐ.பி.எஸ்-ஸுக்கு என்ன அரசியல் தெரியும்?’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவரைக் கேட்கிறார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். பதில் சொல்லவேண்டிய இடத்தில் இருக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். அப்படியல்லாமல், ‘அவருக்கு எந்த அறிவுமே இல்லை’ என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனிநபர் தாக்குதலில் இறங்குகிறார். தி.மு.க-வைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் அப்படித்தான் பேசுகிறார்கள்.

ஒவ்வொரு தலைவரின் அரசியல் பாணியும் ஒவ்வொன்றாக இருக்கும். எம்.ஜி.ஆர் பாணியை கருணாநிதியிடம் எதிர்பார்க்க முடியாது. கருணாநிதி பாணியை ஜெயலலிதாவிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், எல்லோரும் தலைவர்கள்.

இல.கணேசன்
இல.கணேசன்

அதுபோல, இல.கணேசன், தமிழிசை சௌந்தரராஜன் போன்ற தலைவர்களின் பாணிகள் வெவ்வேறானவை. இவர்களும் எதிரணித் தலைவர்களை விமர்சித்தவர்கள்தான். ஆனால், இவர்கள் கொஞ்சம் மென்மையாகச் சொல்வார்கள். அண்ணாமலையோ துணிச்சலாக அடிக்கிறார். அன்றைக்கு இருந்த சூழல் வேறு. இன்றைய சூழல் வேறு. அன்றைக்கு கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பெரிய பெரிய தலைவர்கள் இருந்தார்கள். இன்று முதல்வராக இருப்பவர் ஸ்டாலின். அவருக்கு ஏற்றபடி அண்ணமலை பேசுகிறார்” என்கிறார் குமரகுரு.