Published:Updated:

டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் கைதுக்கான பின்னணி என்ன?

மருத்துவர் சுப்பையா

2020-ல் பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து பிரச்னை செய்ததற்காகத் தொடரப்பட்ட வழக்கில், இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Published:Updated:

டாக்டர் சுப்பையாவுக்கு ஜாமீன்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் கைதுக்கான பின்னணி என்ன?

2020-ல் பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து பிரச்னை செய்ததற்காகத் தொடரப்பட்ட வழக்கில், இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மருத்துவர் சுப்பையா

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணரான டாக்டர். சுப்பையா சண்முகம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறைத் தலைவராகவும், 2017 முதல் 2020 வரை ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் தேசியத் தலைவராகவும் இருந்தவர். தற்போது அதே ஏபிவிபி அமைப்பின் மாநில நிர்வாகியாகப் பதவி வகித்துவருகிறார். ஆதம்பாக்கத்தில் சுப்பையா வசித்துவரும் குடியிருப்பின் பக்கத்து வீட்டில் மூதாட்டி ஒருவரும் வசித்துவருகிறார். மூதாட்டிக்கு என ஒதுக்கப்பட்ட கார் நிறுத்தும் இடத்தில் தனது காரினை நிறுத்திக்கொள்வதாகவும், அதற்கான வாடகையும் மாதாமாதம் கொடுத்துவிடுவதாகவும் சொல்லி காரை நிறுத்திவந்துள்ளார் சுப்பையா.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

சொன்னதுபோல வாடகை எதுவும் கொடுக்காததால், மூதாட்டி சுப்பையாவிடம் பலமுறைப் பேசிப்பார்த்திருக்கிறார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மூதாட்டி கேட்டுக்கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த சுப்பையா செய்த காரியம்தான் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. அதாவது, மூதாட்டியின் வீட்டு வாசலில் நள்ளிரவில் யாரும் பார்க்க வகையில் சிறுநீர் கழித்து அசிங்கம் செய்தார் சுப்பையா. ஏற்கெனவே வாடகை கொடுக்காமல் ஏமாற்றி வந்தது மட்டுமல்லாமல், வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததையும் பொறுத்துக்கொள்ள முடியாத மூதாட்டி, உடனடியாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் 2020-ம் ஆண்டு புகாரளித்தார்.

டாக்டர் சுப்பையா மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்ததில், சுப்பையா சிறுநீர் கழிப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், அப்போது டாக்டர் சுப்பையாவை போலீஸார் கைது செய்யவில்லை. ஆட்சியிலிருந்த அதிமுக-வுக்கு பாஜக-வின் தயவு தேவைப்பட்டதால் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

வீட்டு வாசலில் சிறுநீர் கழிக்கும் காட்சிகள்
வீட்டு வாசலில் சிறுநீர் கழிக்கும் காட்சிகள்

இந்நிலையில், இரண்டாண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் கடந்த பின்னர், கடந்த மார்ச் 19-ம் தேதி அதே வழக்கில் ஆதம்பாக்கம் போலீஸார் டாக்டர் சுப்பையாவைக் கைதுசெய்துள்ளனர். அனைவரும் அவ்விவகாரத்தை மறந்தே போய்விட்ட நிலையில், திடீர் கைதுக்கானப் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்தோம்.

இதுகுறித்து தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவர் நம்மிடம் பேசினார். ``அச்சம்பவம் நடைபெற்ற சமயத்திலேயே சுப்பையாவை ஏன் கைது செய்யவில்லை என்று திமுக-வே கேள்வி எழுப்பியிருக்கிறது. மோடி, அமித் ஷாவை முதலாளிகளாக மனதில் நிறுத்தி அடிமை ஆட்சி நடத்திக் கொண்டிருந்த எடப்பாடி அரசுக்கு, ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பு நிர்வாகியைக் கைது செய்யும் அளவுக்குத் துணிச்சல் இல்லை.

அமித் ஷா - நரேந்திர மோடி
அமித் ஷா - நரேந்திர மோடி

இப்போது கைது செய்வதற்குச் சிலக் காரணங்கள் இருக்கின்றன. தி.மு.க ஆட்சியமைத்தப் பத்து மாதங்களில் பலதுறைகளில் ஊழல் நடப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அடிக்கடி ஆளுநர் ரவியைப் பார்த்து ஏதாவதொரு புகார் மனுவைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். மத்திய அரசும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்த்துவருகிறது.

சில பாஜக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். இதனால், பாஜக மற்றும் அதன் கிளை அமைப்புகளில் உள்ளவர்கள் மீது பதியப்பட்டிருக்கும் வழக்குகளைத் தூசுதட்டி எடுக்குமாறு மேலிடத்திலிருந்து போலீஸாருக்குத் தகவல் சென்றது என்கிறார்கள். அதில் தலைநகர் சென்னையில் சிக்கிய முதல் வழக்கு டாக்டர் சுப்பையா மீதான வழக்குதான். அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களை மட்டுமல்ல, தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான புகார்களைக் கூறினால் பாஜக-வைச் சார்ந்தவர்கள் மீதும் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிப்பதற்கான முதல் அஸ்திரம் இது.

அண்ணாமலை - தமிழ்நாடு ஆளுநர்
அண்ணாமலை - தமிழ்நாடு ஆளுநர்

இதுமட்டுமின்றி, தஞ்சாவூர் மாணவி லாவண்யா மதமாற்ற சர்ச்சையில்தான் இறந்தார் என்று பொய்களைப் பரப்பி, மாணவியைத் துன்புறுத்தி பேசவைத்து வீடியோ எடுத்து, அதனை சட்டத்துக்குப் புறம்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி பெரும் சர்ச்சைக் கிளப்பியது பாஜக. அதுமட்டுமின்றி, ’லாவண்யாவுக்கு நீதி வேண்டும்’ என்று ஏ.பி.வி.பி நிர்வாகிகள் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் வீட்டருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களையும் எழுப்பினர். போலீஸார் அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

அச்சமயம் சிறையிலிருந்த ஏபிவிபி நிர்வாகிகளை, அதன் மாநில நிர்வாகியாக இருந்த டாக்டர் சுப்பையா நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்கள் ஜாமீனில் வெளிவருவதற்கும் உதவி புரிந்தார். அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருந்துகொண்டு, முதல்வருக்கு எதிராகப் போராடியவர்களை சந்தித்துப் பேசியது ஆளும் தரப்புக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அப்போதே அவர் மீதான சிறுநீர் கழித்த வழக்கு நிலுவையில் இருப்பதை நோட் போட்டு அனுப்பியிருக்கிறார்கள் போலீஸார். அதன்மீதுதான் இப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஏபிவிபி அமைப்பு
ஏபிவிபி அமைப்பு

இன்னொருபுறம், அரசு மருத்துவர்களில் சிலரும் டாக்டர் சுப்பையா மீது புகார்களைத் தட்டிவிட்டு, நடவடிக்கை எடுக்க பிரஷர் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். இப்படிப் பலவகைகளிலும் வலைகள் பின்னப்பட்டு ஒருவழியாக சுப்பையா கைதும் செய்யப்பட்டுவிட்டார்” என்று முடித்தார்.

இதனிடையே இந்த வழக்கில் ஜாமீன் கோரி சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பையாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடதக்கது.