Published:Updated:

`டார்கெட் ஆ.ராசா' : ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் முடக்கம்... பின்னணி என்ன?

ஆ.ராசா

2015-ம் ஆண்டு ஆ.ராசா மீது அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் அவரின் 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. திடீரென இந்த வழக்கு வேகமெடுப்பதன் பின்னணி என்ன?

`டார்கெட் ஆ.ராசா' : ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் முடக்கம்... பின்னணி என்ன?

2015-ம் ஆண்டு ஆ.ராசா மீது அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் அவரின் 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. திடீரென இந்த வழக்கு வேகமெடுப்பதன் பின்னணி என்ன?

Published:Updated:
ஆ.ராசா

தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா 2004 - 2007 வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது, குருகிராமில் இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கியதற்கு லஞ்சமாக குறிப்பிட்ட தொகை வாங்கினார் எனப் புகார் எழுந்தது. மேலும், லஞ்சமாகப் பெற்ற பணத்தை ஆ.ராசா தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் தொடங்கிய பினாமி நிறுவனத்தின் மூலம் வருமானமாகக் கணக்கு காட்டியதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக அவர்மீது 2015-ம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியது.

அப்போது, சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூரில் ஆ.ராசாவுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதோடு, ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவுசெய்து, விசாரணையை நடத்தியது. விசாரணையின் இறுதியில் அந்த நிறுவனம் ஆரம்பத்திலிருந்து எந்த ஒரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், நிறுவனத்தில் பெறப்பட்ட முழுப் பணமும் ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்திலிருந்து லஞ்சமாகப் பெறப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

ஆ.ராசா
ஆ.ராசா

இதனடிப்படையில், கோவையில் பினாமி பெயரில் ஆ.ராசா வாங்கியுள்ள 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை மத்திய அமலாக்கத்துறை முடக்கி, அது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடந்துவருவதாகக் கூறப்பட்டுள்ளது. திடீரென ஆ.ராசாவின் மீதான அமலாக்கத்துறை வழக்கு வேகமெடுப்பதன் பின்னணி என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்.

``தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு அமைந்தது முதல் அதன்மீது ஊழல் புகார் சுமத்தவும், சட்டம் - ஒழுங்குப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பவும் பா.ஜ.க தரப்பில் முயன்றனர். ஆனால், தி.மு.க அரசுமீது முன்வைத்த எந்தப் புகாருக்கும் இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிட முடியாததால், ஊழல் புகாரை அழுத்தமாக வைக்க முடியவில்லை. இதன் மற்றொரு பகுதியாக அமைச்சர்கள்மீது முன்பு பதிவுசெய்யப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் மூலமும் தி.மு.க அரசுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எதிர்பாராதவிதமாக அமைச்சர் கீதா ஜீவன் மீதான அமலாக்கத்துறை வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை வழக்கும் சாதகமாக இல்லை’’ என்கிறார்கள்.

மேலும், ``செந்தில் பாலாஜி மீது அவர் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது பதிவுசெய்யப்பட்ட பண மோசடி வழக்கை விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், இன்னும் விசாரணை செய்வதற்கான அனுமதி அளிக்கப்படவில்லை. இப்போதைக்கு அமலாக்கத்துறை பிடியில் இருப்பது அமைச்சர் ஐ.பெரியசாமியின் வழக்கு மட்டுமே. எனவே, அமலாக்கத்துறை மூலம் தி.மு.க-வுக்குக் கொடுக்க நினைத்த நெருக்கடியிலும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் 2015-ல் ஆ.ராசாமீது பதிவுசெய்த வழக்கை தூசுதட்டி இப்போது விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தேர்தல் நெருங்கிவிட்டதால் இது மத்திய அரசு தி.மு.க-வுக்கு வைக்கும் முதல் செக்” என்கிறார்கள் விவரமறிந்த சிலர்.

அமலாக்கத்துறை அலுவலகம்
அமலாக்கத்துறை அலுவலகம்

அண்ணாமலை தனது வாட்ச் விவகாரத்தை அடுத்து, `ஏப்ரல் மாதம் தி.மு.க நிர்வாகிகள், அவர்களின் பினாமிகளின் சொத்து விவகாரங்களை வெளியிடுவேன்’ எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது!