Published:Updated:

தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அரசு ஒத்துழைக்கவில்லையா?! - நிதின் கட்கரி குற்றச்சாட்டின் பின்னணி

நிதின் கட்கரி

`தமிழ்நாட்டில் சாலைப் பணிகள் நடக்க மாநில அரசு ஒத்துழைக்கவில்லை’ என மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். `நிதின் கட்கரியின் குற்றச்சாட்டு வியப்பாக இருக்கிறது’ என்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்... இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணி என்ன?

தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அரசு ஒத்துழைக்கவில்லையா?! - நிதின் கட்கரி குற்றச்சாட்டின் பின்னணி

`தமிழ்நாட்டில் சாலைப் பணிகள் நடக்க மாநில அரசு ஒத்துழைக்கவில்லை’ என மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். `நிதின் கட்கரியின் குற்றச்சாட்டு வியப்பாக இருக்கிறது’ என்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்... இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணி என்ன?

Published:Updated:
நிதின் கட்கரி

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ``தமிழ்நாட்டிலுள்ள அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், சாலை அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் தமிழ்நாட்டில் சாலைகளை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெறும். நிதி ஒதுக்கீட்டில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை. சொல்லப்போனால் தமிழ்நாட்டில் சாலைப் பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கவும் தயாராக இருக்கிறோம். உதாரணமாக, கேரளாவில் நிலத்தைக் கையகப்படுத்துவதில் பிரச்னைகள் இருந்தாலும், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆர்வத்துடன் இருப்பதால் அந்த மாநிலத்தில் சாலைகளை அமைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அதேபோல்தான், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் சிறப்பாக நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் அவ்வாறு ஒத்துழைப்பு கிடைப்பதில்லை" எனத் தமிழ்நாடு அரசின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

நிதின் கட்கரியின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பிறகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்டாலின் - நிதின் கட்கரி
ஸ்டாலின் - நிதின் கட்கரி

நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்களின் செயல்பாட்டுக்கு உதவும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்தெந்த விஷயங்களில் மேலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதைக் குறிப்பிட்ட அவர், தமது ஒத்துழைப்புக்கும் உறுதி அளித்ததோடு தமிழ்நாடு அரசின்மீது குற்றம் சுமத்தும் வகையில் நிதின் கட்கரி பேசியிருப்பது தமக்கு வியப்பை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். நிதின் கட்கரியின் விமர்சனத்தின் பின்னணி என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்…

நிதின் கட்கரியின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம். ``நிதின் கட்கரிக்கு உரிய விளக்கத்தைத் தமிழக முதல்வர் மிகத் தெளிவாக தனது கடிதத்தில் சொல்லியிருக்கிறார். தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லாத வகையில்தான் ஒன்றிய அரசுக்கு நிர்வாகரீதியில் தி.மு.க அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிவருகிறது. நிதின் கட்கரி சொன்ன புகார் அ.தி.மு.க ஆட்சியைப் பற்றித்தானே ஒழிய தி.மு.க அரசைப் பற்றியது இல்லை” என்றார்.

அமைச்சரின் புகார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் விளக்கம் குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``முதல்வரின் கடிதத்தை நானும் படித்தேன். அமைச்சர் சொன்னதில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்வோம் எனக் கூறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அது வரவேற்கத்தக்கது. ஆனால், மத்திய அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகள் சுற்றுச்சூழல் அனுமதி, வனத்துறை அனுமதி என அரசிடமிருந்து வரவேண்டிய அனுமதிகள் குறித்தது. அரசு எடுக்கவேண்டிய முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருக்கிறது என்பதுதான் மத்திய அமைச்சர் வைக்கும் குற்றச்சாட்டு. தமிழ்நாட்டின் கட்டமைப்பைப் பெருக்குவதன் மூலம்தான் நமது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து மாநில அரசு செயல்பட வேண்டும்.

சரவணன் (திமுக) - நாராயணன் திருப்பதி (பாஜக)
சரவணன் (திமுக) - நாராயணன் திருப்பதி (பாஜக)

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. இனிமேல் ஹனிமூன் பீரியட் என்பது தி.மு.க அரசுக்கு இல்லை. எனவே, இனியும் தமிழ்நாட்டில் நடக்கும் விவகாரங்களுக்கு அடுத்தவரை கைகாட்டிக்கொண்டிருக்க முடியாது. மத்திய அமைச்சர் நேரடியாக தி.மு.க அரசை நோக்கித்தான் சொல்லியிருக்கிறார். தி.மு.க-வினர் வேண்டுமானால் அதை அ.தி.மு.க பக்கம் திருப்பிவிடலாம். ஆனால், மத்திய அமைச்சர் சொன்னது தி.மு.க-வைத்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை” என விளக்கமளித்தார்.

அ.தி.மு.க சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் இன்பதுரையிடம் மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுகள், தி.மு.க-வினர் அ.தி.மு.க மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டோம். ``தி.மு.க வழக்கறிஞர் சரவணன் வானத்தில் ஓவியம் வரையப் பார்க்கிறார். நிதின் கட்கரியோ மற்ற மத்திய அமைச்சர்களோ அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்த மாதிரி எந்தப் புகாரையும் தமிழ்நாடு அரசின் மீது சொன்னதில்லை. அந்த அளவுக்கு மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டன. மதுரை – தூத்துக்குடி, ஒட்டன்சத்திரம் – பழநி இடையே போடப்பட்ட சாலைப் பணிகள் மிக வேகமாக முடிக்கப்பட்டன. விக்கிரவாண்டி – தஞ்சை – கும்பகோணம் சாலைகள், சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் வேகமாக நடந்துவந்தன. தற்போது அந்தப் பணிகள் நடைபெறாமல் இழுத்துக்கொண்டிருக்கின்றன. சாலைப் பணிகளுக்கு என்றில்லை. எந்தத் திட்டத்துக்கும் ஒத்துழைப்பு தருவதில்லை. கடந்த எட்டு மாதங்களாக விளம்பரம் செய்து கொள்வதில்தான் குறியாக இருக்கிறார்களே தவிர திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதேயில்லை. அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பதினோரு மருத்துவக் கல்லூரிகளைத் தனது சாதனையாகக் கொண்டாடத் தெரிந்த தி.மு.க-வுக்கு நிதின் கட்கரி கொடுக்கும் இந்தப் பாரச் சிலுவையைத் தூக்கிச் சுமக்க மட்டும் கசக்கிறதா?

முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை - அதிமுக
முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை - அதிமுக

மத்திய அரசின் திட்டங்கள் என்றில்லை. மாநில அரசின் திட்டங்களுக்கும் இதுதான் நிலைமை. எனது தொகுதியிலுள்ள வள்ளியூர் – திருச்செந்தூர் சாலைப் பணியைத் தொடங்குவதற்கான எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்டம் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் வேகமாக நடந்தது. ஆனால், இப்போது அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. இது குறித்துக் கேட்கவேண்டிய தொகுதி எம்.எல்.ஏ அப்பாவு கள்ள மௌனம் சாதிக்கிறார். சட்டசபையின் மூலவரே இப்படி அமைதியாக இருக்கும்போது அரசை எப்படிக் குறை சொல்ல முடியும்... தி.மு.க அரசு வெற்று விளம்பரங்களின் வீண் அரசாக மட்டுமே இருக்கிறது” என்றார்.