Published:Updated:

`ஒரே நாடு ஒரே தேர்தல்’ - பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அடித்துச் சொல்வதன் பின்னணி என்ன?

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதையும், அதுவும் அந்தத் தேர்தல், 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடனே நடக்கும் என்றும் பேசிவருவதன் பின்னணி என்ன?

`ஒரே நாடு ஒரே தேர்தல்’ - பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அடித்துச் சொல்வதன் பின்னணி என்ன?

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதையும், அதுவும் அந்தத் தேர்தல், 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடனே நடக்கும் என்றும் பேசிவருவதன் பின்னணி என்ன?

Published:Updated:
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

``கடந்த 10 ஆண்டுக்காலம் அ.தி.மு.க சிறப்பான ஆட்சி தந்தது. அதைப் பத்தே மாதங்களில் கெடுத்துவிட்டார்கள் தி.மு.க-வினர். இதுவரை தி.மு.க ஆட்சியில் எந்தப் புதிய திட்டமும் வரவில்லை. இதே நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் வர அதிக வாய்ப்பு உள்ளது” என்று கரூரில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியிருக்கிறார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

அதேபோல சேலம் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ``2024-ம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வரவுள்ளது. அப்படி நடைபெற்றால் தமிழகத்தில் விரைவில் நம் ஆட்சி அமையும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும்” எனப் பேசினார். மேலும், 2024-ல் தமிழ்நாட்டுக்குச் சட்டமன்றத் தேர்தல் வரும் என 2021-ம் ஆண்டு, டிசம்பர் மாதம், சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போதும் கூறியிருக்கிறார். இவர்கள் இருவரையும் அடுத்து, ``தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என்று நான் இப்போதைக்குக் கூற முடியாது. அது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தி.மு.க ஆட்சி தமிழ்நாட்டில் எப்படி நடக்கிறது என்பதைப் பொறுத்தே 2024-ம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடைபெறுமா என்று சொல்ல முடியும். ஒருவேளை தி.மு.க அரசின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு மாறவில்லை என்றால் அதற்கும் வாய்ப்பிருக்கிறது” என அண்ணாமலையும் பேசியிருக்கிறார்.

அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர் -அதிமுக - பாஜக
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர் -அதிமுக - பாஜக

தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படும் என்ற கருத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எதிர்க்கட்சிகளால் பேசப்படுகிறது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் தமிழ்நாட்டுக்கு மட்டுமா அல்லது தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்தா என்ற கேள்வியோடு களத்தில் இறங்கினோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதையும், அதுவும் அந்தத் தேர்தல் 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுடனே நடக்கும் என்றும் பேசிவருவதன் பின்னணி என்ன என்ற கேள்வியை பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதியிடம் வைத்தோம். ``இந்தியா சுதந்திரம் அடைந்தபோது எப்படித் தொடங்கினோமோ அப்படி ஒரு தேர்தல் அமைப்பைக் கொண்டு வருவதுதான் இந்த ஒரே நாடு ஒரே தேர்தலின் நோக்கம். இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தொடர்ந்து பல ஆண்டுகளாக பா.ஜ.க-வால் முன்னெடுக்கப்படும் ஒரு முக்கியமான விஷயம். ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவதால், பொருளாதார இழப்பீடு மட்டுமல்ல பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளும் தடைப்படுகின்றன. மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் அரசின் நிர்வாகப் பணியில் ஈடுபடுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எல்லா மாநிலங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே தேர்தல் என்பதுதான் அரசியலமைப்பிலிருந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது தேவையில்லாத பல்வேறு காரணங்களுக்காக மாநில அரசுகளை, எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளைக் கவிழ்த்ததன் காரணமாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் பல்வேறு தேதிகளில் தேர்தல் நடத்தவேண்டிய இக்கட்டில் மாட்டிக்கொண்டோம்.

நாராயணன் - பா.ஜ.க செய்தி தொடர்பாளர்
நாராயணன் - பா.ஜ.க செய்தி தொடர்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏன் இந்தப் பேச்சு முக்கிய இடம் பெற்றது என்பது புரியவில்லை. உள்ளாட்சித் தேர்தல்களுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அத்வானி தொடங்கி பிரதமர் மோடி வரை பலகாலமாக இதைப் பேசிவருகிறார்கள். இதன் மூலம் மற்றவர்களை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கம் இதில் இருப்பதாக எதைவைத்துச் சொல்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

இந்தியாவிலிருக்கும் அனைத்து மாநிலங்களுக்காகவும்தான் இதைப் பேசிவருகிறோம். எங்கள் கொள்கையாகத் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கையாக இதை அறிவித்து, அதற்கான முன்னெடுப்புகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இதற்காகப் பல்வேறு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது என்பதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் இதைச் செயல்படுத்துவோம் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன்.” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது என எதிர்க்கட்சிகள் பேசிவருவது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், வழக்கறிஞர் கண்ணதாசனிடம் கேட்டோம். “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பா.ஜ.க பேசுகிறது என்றால் இந்தியத் திருநாட்டை ஒட்டுமொத்தமாகத் தன் சர்வாதிகாரத்தில் கொண்டுவர வேண்டும் என்ற உள்நோக்கம் அவர்களுக்கு இருக்கிறது, அதனால் அப்படிப் பேசுகிறார்கள். பா.ஜ.க-வின் தொங்கு சதையாகிவிட்டதால் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்-ஸும் அதையே பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று எந்த நோக்கமும் இல்லை. அப்படித்தான் இந்த விவகாரத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாட்டைப் பார்க்க வேண்டும். மோடியின் குரலாகத்தான் இப்போதும் இருக்கிறார்கள். அப்படிப் பேசினால்தான் இப்போதும் அவர்களால் அரசியல் செய்ய முடியும் என்ற சூழலை அவர்களே உருவாக்கிக்கொண்டதன் விளைவு இது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அடுத்து அ.தி.மு.க-வின் கூடாரத்தில் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும். அப்படி ஏதும் நடந்துவிடாமல் தவிர்க்க, இருக்கும் ஒருசில தொண்டர்களையாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 2024-ல் தேர்தல் நடக்கும் எனப் பேசுகிறார்கள். ஆனால், இது எதுவும் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது என்ற உண்மை அவர்களுக்குப் புரியவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்த மொழி, பண்பாடு இருக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் பல சட்டங்களில் வேறுபாடு இருக்கிறது. அப்படியிருக்கும்போது இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்தல் என்று பேசுவதெல்லாம் கேட்பதற்கே நகைச்சுவையாக இருக்கிறது.

கண்ணதாசன்
கண்ணதாசன்

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே சோறு என்று இவர்கள் பேசுவதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றது. ஒருவேளை இப்படிப் பேசுவதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று நினைத்தார்களென்றால் அது அ.தி.மு.க-வுக்கு எதிராகத்தான் போய் முடியும். தமிழ்நாட்டில் பா.ஜ.க-மீது இருக்கும் அதே வெறுப்பு அ.தி.மு.க-மீதும் மக்களுக்கு எழுந்திருக்கிறது. தங்களை அழித்து பா.ஜ.க-வை வளர்த்த தியாகிகளின் எண்ணம் தமிழ்நாட்டில் ஈடேறாது. எமர்ஜென்ஸியைப் பார்த்த கட்சி தி.மு.க. எனவே, இவர்களின் இந்த வெற்றுப் பேச்சுகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை” என விளக்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism