Published:Updated:

கறுப்புக்கொடி போராட்டம்: பாஜக அரசுக்கு எதிராக ஒன்றுதிரண்ட கட்சிகள்; சொல்லும் சேதி என்ன?

எதிர்க்கட்சிகள் மத்திய பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்றுதிரளவேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறிவருகிறது என்பதைப் புரிந்துகொண்ட தலைவர்கள் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதிரண்டு நாடு முழுவதும் போராட்டம் நடத்திவருவது மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது!

`புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள்', பொருளாதாரச் சரிவு, பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படுதல், உயர்ந்துவரும் விலைவாசி, பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு...' என மத்திய பா.ஜ.க தலைமையிலான அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில், தொடர்ந்து 2-வது முறையாக அசுர பலத்துடன் வெற்றிபெற்று மத்திய ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள பா.ஜ.க தலைமையிலான அரசு, தங்கள் கட்சியின் கொள்கை சார்ந்த பல்வேறு முடிவுகளை அதிரடியாக நிறைவேற்றிவருகிறது. பெரும்பான்மை பலத்தின் காரணமாக எந்தவிதத் தடையுமின்றி மத்திய அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றன. ஆனாலும் எதிர்க்கட்சியினரின் அனைத்துக் கேள்விகளுக்கும் 'முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது' என்ற ஒற்றைவரியை மட்டுமே தொடர்ந்து பதிலாக்கிவருகிறது பா.ஜ.க அரசு!

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மத்திய பா.ஜ.க அரசு எடுத்துவரும் தடாலடி நடவடிக்கைகள் நாடு முழுக்க அதிருப்தியைக் கிளப்பிவந்தாலும், அரசியல்ரீதியான மக்கள் ஆதரவு பா.ஜ.க-வுக்குப் பெருகிக்கொண்டே வருகிறது. `பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிமீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையே பா.ஜ.க-வின் தொடர் வெற்றிகளுக்குக் காரணம்' என்கின்றனர் பா.ஜ.க ஆதரவாளர்கள். இதற்கு பதிலளித்துப் பேசுகிற எதிர்க்கட்சியினர், 'பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய பா.ஜ.க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் குடிமக்களின் வாழ்வாதாரத்தையே படுகுழியில் தள்ளிவருகின்றன. ஆனால், தங்களுக்கு நேர்ந்துவரும் பாதிப்பைக்கூட அந்த எளிய மக்கள் அறிந்துவிடாத வகையில், 'தேச பக்தி, மதப் பாதுகாப்பு' என அடுத்தடுத்து உணர்ச்சி அரசியல்களைக் கட்டமைத்து எளிதாக வெற்றி பெற்றுவருகிறது பா.ஜ.க!' என்கின்றனர்.

ஏற்கெனவே பலம் குன்றிவிட்ட பொதுவுடைமைக் கட்சிகள், உட்கட்சித் தகராறுகளால் பலமிழந்துவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலைமை ஆகியவை பா.ஜ.க-வுக்குக் கூடுதல் தெம்பைத் தருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டவேண்டி, நாடு முழுக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதற்கிடையே, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மத்திய ஆட்சிப்பொறுப்பை தீர்மானிக்கிற வகையில் அதிக தொகுதிகளைக் கொண்டிருக்கும் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க வெற்றிபெற்றால், அது வரப்போகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே பா.ஜ.க ஆட்சி செய்துவருகிற - விரைவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிற மாநிலங்களில் முதல்வர்களை மாற்றியமைத்து தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை பா.ஜ.க வகுத்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் மத்திய பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்றுதிரளவேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறிவருகிறது என்பதைப் புரிந்துகொண்ட தலைவர்கள் அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மத்திய பா.ஜ.க அரசுடன் நேருக்கு நேர் மோதிவரும் மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமையில் எதிர்க்கட்சியினரை அணிதிரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். இதற்கிடையே, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் பா.ஜ.க-வுக்கு எதிரான அணியைக் கட்டமைக்கும் முயற்சியாக 'தேசியவாத காங்கிரஸ்' தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

கோபண்ணா
கோபண்ணா

பரபரப்பான இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. இதில், 'மத்திய பா.ஜ.க அரசின் யதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து, செப்டம்பர் 20-ம் தேதி முதல் அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்துவது' என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 'பா.ஜ.க அரசை எதிர்த்து நடத்தப்படுகிற இந்தப் போராட்டத்தின் பின்னணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நோக்கம் உள்ளது' என்கின்றனர் மத்திய ஆளுங்கட்சித் தரப்பினர்.

நாடு தழுவிய இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில், பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் இன்று காலையிலேயே கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டம் நடத்திவருகின்றன. இந்தநிலையில், '2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் தலைமையின் கீழ் ஒன்றுதிரட்டுகிற முயற்சிதான் இந்தப் போராட்டம் என்கிறார்களே...' என்ற கேள்வியை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் கேட்டபோது, ``பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கிற வகையில், நாடு முழுக்க 19 எதிர்க்கட்சிகளும் செப்டம்பர் 20-ம் தேதியில் ஆரம்பித்து 30-ம் தேதி வரையிலாக போராட்டம் நடத்துவது என்று கடந்த மாதமே காணொலிக் காட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துவிட்டோம். அந்த முடிவின்படி, தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சியினர் அனைவரும் இன்றைய தினம் அவரவர் வீடு முன்பு கறுப்புக்கொடி ஏந்தி - ஏற்றி, மத்திய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களோடு எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் ரசிகர்கள்; பல்ஸ் பார்க்கும் விஜய்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் தலைமையின்கீழ் சி.பி.ஐ., சி.பி.எம்., சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து போராட முடிவெடுத்திருப்பதே, எதிர்க்கட்சிகள் தரப்பிலான ஒற்றுமையை எடுத்துக்காட்டுகிறது. பா.ஜ.க ஆட்சியில், மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மக்களின் நலன்களுக்காகக் குரல்கொடுக்கவேண்டிய இடத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. அதில் காங்கிரஸ் கட்சி முன்னணி இடம் வகிக்கிறது. அதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் தவறான போக்குக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரவேண்டி வந்திருப்பது காலத்தின் கட்டாயம்.

2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுக்கு எதிராக மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தேசிய அளவில் ஒருங்கிணைவதற்கும் ஓரணியில் திரள்வதற்கான முன்னோட்டமாக இந்தப் போராட்டம் அமைந்திருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் போராட்டம் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, பிரதமர் மோடிக்கு எதிரான சக்திகள் அனைத்தும் இனி ஒன்று சேர்வதை யாரும் தடுக்க முடியாது'' என்கிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மத்திய பா.ஜ.க-வுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை தமிழ்நாட்டில் தலைமையேற்று நடத்திவரும் தி.மு.க., 'வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க கூட்டணிகள் வெற்றி பெறுவதற்காக, மத்திய பா.ஜ.க அரசை மக்கள் விரோத அரசாக சித்திரிக்கும் உத்தியாகவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது' என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கேட்டபோது,

``உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் மாநில அரசு நடத்தி முடிக்க வேண்டும் என்பது உயர் நீதிமன்றத்தின் ஆணை. அடுத்து, மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த வேண்டும் என்பது தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி முடிவெடுத்து அறிவித்துவிட்ட ஒன்று. உண்மை இவ்வாறு இருக்க, என்ன சொல்வது என்றுகூடத் தெரியாமல் எதையோ உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். காரணம், பா.ஜ.க இதுவரையிலும் இந்துத்துவாவை வைத்துக்கொண்டு பிழைப்புவாதம் நடத்திவந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 100 நாள்களிலேயே மக்கள் அனைவருக்கும் தேவையான 122 வாக்குறுதிகளை நிறைவேற்றித்தந்து பா.ஜ.க-வின் 'இந்துத்துவா' வாதத்தையே மழுங்கடித்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பட்டியல் சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம்; பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் நியமனத்தின் பின்னணி என்ன?

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே, நகர்ப்புறத் தேர்தலை நடத்தினால் தி.மு.க ஜெயித்துவிடும். எனவே, 'கிராமப்புற ஊராட்சித் தேர்தலை மட்டும் நடத்தி நாம் ஜெயித்துவிடுவோம்' என்ற நம்பிக்கையில்தான் அதை மட்டும் முதலில் நடத்தினார்கள். ஆனால், அதிலும் தி.மு.க-தான் 60 சதவிகித வெற்றியைப் பெற்றது. 10 ஆண்டுக்காலம் எதிர்க்கட்சியாக இருந்தபோதே, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க ஜெயிக்கிறது என்று சொன்னால், இப்போது ஆட்சிக்கு வந்து வரிசையாக வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் சூழலில் தி.மு.க மிக மிக எளிதாக ஜெயித்துவிடும்'' என்கிறார் நம்பிக்கையோடு.

தமிழக பா.ஜ.க-வின் விவசாய அணித் தலைவரான ஜி.கே.நாகராஜிடம், எதிர்க்கட்சியினரின் கறுப்புக்கொடி போராட்டம் குறித்து கருத்து கேட்டபோது,

ஜி.கே.நாகராஜ்
ஜி.கே.நாகராஜ்

''நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என தெரிந்திருந்தும்கூட, தங்களது தேர்தல் அறிக்கையில், 'நீட்டை ரத்து செய்ய நாங்கள் ஒரு ரகசியம் வைத்திருக்கிறோம்' என ஒரு பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கியவர்கள் தி.மு.க-வினர். அதேபோல், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் எந்தவோர் எதிர்ப்பும் இல்லாத சூழலிலேயே, அப்படியொரு வெறுப்பு இருப்பதுபோல் பொய்யான பிம்பத்தை உருவாக்க இது போன்ற போராட்டங்களை நடத்துகின்றனர் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.

அடுத்து, 'விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராட்டம்' என்கிறார்கள். விலைவாசி உயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறவர்கள், ஒவ்வொரு தனிமனித வருமானம் உயர்ந்திருப்பதை மட்டும் வசதியாக மறைத்துவிடுகிறார்கள். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போராடுகிற தி.மு.க அரசு, பெட்ரோல் விலையைக் குறைக்கும் வகையில் அதை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு மட்டும் மறுப்பு தெரிவிப்பது ஏன்?

ஒட்டுமொத்தத்தில் இருக்கின்ற இன்றைய சூழலை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் வகையில் வெட்டி அரசியல் செய்துகொண்டிருக்கின்றன இந்த எதிர்க்கட்சிகள்!'' என்கிறார் ஒரே போடாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு