Published:Updated:

ஓ.பன்னீர்செல்வம்: `நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு’ - பாடலின் பின்னணி என்ன?

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தது அதிமுக. அப்போது பேசிய ஓ.பி.எஸ். "நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு..." என்ற பாடலைப்போலத்தான் தன் நிலைமை எனக் கூறினார். அதன் பின்னணி என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை, பால்வளம், மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க-வும் வெளிநடப்பு செய்தது. அதையடுத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குறித்துச் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு அ.தி.மு.க-வினர் அவைக்குள் வந்ததும் தனது கருத்து ஓ.பன்னீர்செல்வத்தின் மனதைத் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியிருந்தால் அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார் துரைமுருகன். அதன் பிறகு பேசிய ஓ.பன்னீர்செல்வம் ‘நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு... இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு... இதுதான் தற்போது எனது நிலைமை’ என்ற சிவாஜி பாடலின் வரிகளைப் பாடி, “இப்படியான எனது நிலைமை சட்டசபை முன்னவர் துரைமுருகனுக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.

எடப்பாடி - ஓ.பி.எஸ்
எடப்பாடி - ஓ.பி.எஸ்

“நான் இருதலைக் கொள்ளியாகத் தவிக்கிறேன்” என ஓ.பன்னீர்செல்வம் பேசியதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக். அது, அவர் ஏன் அப்படிப் பேசினார், அதன் உள்நோக்கம் என்ன, கட்சி நிர்வாகிகளுக்குச் சொல்லவரும் கருத்து என்ன எனப் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்தப் பேச்சு எதை மையமிட்டது என்ற கேள்வியைவைத்து அந்தப் பாடலுடன் சில சம்பவங்களைப் பொருத்திப் பார்த்தோம்...

``நதியில் வெள்ளம்; கரையில் நெருப்பு;"
ஓ.பி.எஸ் பாடலின் பின்னணி?!

``நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு... என்ற இந்தப் பாடலை அப்போதைய சபை நடவடிக்கையில் பொருத்திப் பார்க்கும்போது ‘வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால், அ.தி.மு.க-வில் இருந்துகொண்டு பா.ஜ.க-வை உடன் வைத்துக்கொண்டு அதைச் செய்ய முடியாமல் தவிக்கிறேன்’ என ஓ.பன்னீர்செல்வம் கூறுவதாகத்தான் தோணும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அப்படிச் சொல்லியிருப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஏனெனில், அ.தி.மு.க அளித்த ஆதரவின் பேரிலேயே வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதுமட்டுமல்ல, ஜெயலலிதா இறந்தது முதல் ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பா.ஜ.க தலைமையிடம் கேட்டுத்தான் அரங்கேற்றப்பட்டன என்பதும் அரசியல் விமர்சகர்களின் கருத்து. அதை உறுதி செய்யப் பல நிகழ்ச்சிகளை நாம் உதாரணமாகப் பார்க்கலாம்.

பன்னீர்செல்வம், மோடி
பன்னீர்செல்வம், மோடி

பா.ஜ.க-வுக்கு எவ்வளவு ஆதரவாக இருந்தாலும், தனக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு கிடைப்பதில்லை. முதல்வர் வேட்பாளராகத் தான் அறிவிக்கப்படவில்லை. கட்சியில் இருக்கும் ஒரே ஒரு மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சரவைப் பதவி கிடைக்கவில்லை. இப்படி எல்லா வகையிலும் அ.தி.மு.க - பா.ஜ.க-வால் கைவிடப்பட்ட தான் இப்போது கட்சி சொல்வதை மட்டுமே கேட்கும், செய்யும் சூழலில் இருக்கிறேன். இது துரைமுருகனுக்கும் தெரியும் என்றரீதியிலேயே ஓ.பன்னீர்செல்வம் அந்தப் பாடலைப் பாடியிருக்க வாய்ப்பிருக்கிறது” என்று அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள்.

Tamil News Today: பிரதமர் மோடியைத் தொடர்ந்து அமித் ஷாவைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `தேனும் பாலும்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை மட்டுமல்ல, அசரீரிகளின் சிரிப்பு சத்தங்களுக்கு இடையே குழப்பமான மனநிலையில் சிவாஜி கணேசன் இந்தப் பாடலைப் பாடுவதுபோல காட்சிப்படுத்தியிருப்பதையும் மனதில்வைத்தே ஓ.பன்னீர்செல்வம் அதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். ஏனெனில், தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அ.தி.மு.க - பா.ஜ.க.,இ.பி.எஸ். - வி.கே.எஸ்., கொடநாடு வழக்கு - புளியந்தோப்பு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஊழல் எனப் பல்வேறு விஷயங்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு என்ன செய்வது என்று தான் தவிப்பது அவரது கண்முன் வந்து போயிருக்க வாய்ப்புகள் அதிகம்’’ என்கிறார்கள்.

சசிகலா - பன்னீர்செல்வம்
சசிகலா - பன்னீர்செல்வம்

``ஒருபாதை போட்ட நாயகன்-அதை வேலி போட்டு மூடினான்... மனம் வேலி தாண்டிப் போனது... அதைத் தாலி வந்து கேட்டது...” என்ற வரிகளையும் சேர்த்துப் பார்க்கும்போது அ.தி.மு.க என்ற கட்சிக்குப் பாதை போட்ட நாயகன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற வேலியைப் போட்டுத் தன்னை எங்கும் நகரவிடாமல் தடுத்துவிட்டார். போக வேண்டும் என்று நினைத்தாலும் தன்னிடம் இருக்கும் விசுவாசம் எங்கும் போகவிடாமல் செய்துவிட்டது என்பதைச் சொல்லாமல் சொல்கிறாரோ என்னவோ” எனவும் புது விளக்கம் கொடுக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கொடநாடு வழக்கு: `என்கிட்ட வாங்கின 4 செல்போன் எங்கே?!’ - நீதிமன்றத்தில் போலீஸாரிடம் சயான் வாக்குவாதம்

``தேனுக்குள் விழுந்து... திகைத்தது எறும்பு... இதயத்தின் பிணைப்பு... இறைவனின் சிரிப்பு...” என்ற வரிகளையும் சேர்த்துப் பார்த்தால் தேன் என்பதை பா.ஜ.க எனக் குறிக்கிறார் என்றே வைத்துக்கொண்டாலும் தனக்குத் தேன் மீது அதீத பற்று இருக்கிறது. தான் எப்போது சென்றாலும் பிரதமரை நேரில் சந்தித்துப் பார்க்கும் அளவுக்கு நெருக்கம் இருக்கிறது. ஆனால், அதுவே தனக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. கொடநாடு பிரச்னையில் எடப்பாடி பழனிசாமி பெயர் அடிபடுவது, அவரைச் சிக்கவைக்க அ.தி.மு.க-விலேயே சிலர் முயல்வது, சசிகலா இதைப் பயன்படுத்தி எடப்பாடிக்கு எதிராகக் காய்நகர்த்துவது இதற்கெல்லாம் ஜெயலலிதாவின் மரணம்தான் காரணம். இதில் நான் என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கிறேன் என்பதைக் கூற `ஒரு நீதி கூண்டில் நின்றது... ஒரு நீதி சாட்சி சொன்னது... ஒரு நீதி தெய்வம் ஆனது இதில்... தர்மம் எங்குப் போனது?’ என்ற வரிகளையும் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறாரோ என்னவோ...” என்றவர்கள்...

அதிமுக-வினர் தர்ணா
அதிமுக-வினர் தர்ணா

``மற்றவர்கள் கட்சி மாறுவதே கடுமையாக விமர்சிக்கப்படும் சூழலில் ஜெயலலிதா பெயரைவைத்து அரசியல் செய்துவரும் தான் கட்சி மாறுவது தனக்கு மிகப்பெரிய நெகட்டிவாக இருக்கும். மற்றொரு புறம் கொடநாடு கொலை, ஊழல் எனப் பல வழக்குகள் தன்னைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்பதை `ஒரு பக்கம் இருட்டு... ஒரு பக்கம் வெளிச்சம்... ஒரு பக்கம் வழக்கு... இறைவனின் சிரிப்பு...’ இந்த வரிகளோடு பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்ளுங்கள்” என்கின்றனர் அவரை நன்கு அறிந்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

மிஸ்டர் கழுகு: கொடநாடு விவகாரம்... தி..மு.க-வுக்கு உதவுகிறாரா சசிகலா?

ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி ஏதாவது ஒரு வாசகத்தைச் சொல்வதும், அது அந்தக் காலகட்டத்தில் பரபரப்பான பேசுபொருளாக மாறுவதும் இன்று நேற்றல்ல... காலம் காலமாகத் தொடருவதுதான். தர்மயுத்தம் எனத் தொடங்கித் தான் ஒரு பரதன் என்று சொன்னதுவரை இப்படித்தான் புயலைக் கிளப்பி புஸ்வாணமாக அடங்கியிருக்கின்றன. நாம் எத்தனை காரணங்கள் தேடினாலும் தனக்கிருக்கும் மன வேதனையில் என்ன சொல்வது எனத் தெரியாமல் வழக்கம்போல ஏதோ ஒன்று சொல்லப்போக அதற்கு என்ன காரணம் என அரசியல் விமர்சகர்கள் டீ கோட் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

கட்சி சார்போ, கூட்டணிப் புலம்பலோ அல்லது தன்னுடைய சொந்த ஆதங்கமாகவோதான் இருக்குமே தவிர நிச்சயம் அதில் மக்கள்நலன் சார்ந்து ஒரு துளி கூட இருக்காது என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் இதற்குப் பொதுவாக வைக்கப்படும் விமர்சனம். காலம்தான் அதற்கு விடை சொல்ல வேண்டும். பொறுத்திருப்போம்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு