Published:Updated:

`ஒன்றிய அரசு விவகாரம்'- பாஜக-வுக்கு ஆதரவாக திமுக-வுடன் ஓ.பி.எஸ் மோதுவது ஏன்?'

ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின்
ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின்

`ஒன்றிய அரசு’ என தி.மு.க பயன்படுத்திவருவது மத்திய அரசைச் சிறுமைப்படுத்தும் விஷயம் என அறிக்கை வெளியிட்டுள்ள ஓ.பி.எஸ்., திமுக இந்தப் போக்கைக் கைவிட்டு மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

`ஒன்றியம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது மத்திய அரசைச் சிறுமைப்படுத்துவது போன்றது’ எனக் கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம், ‘தமிழ்நாட்டில் தேசியத்துக்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது தமிழ்நாடு திசைமாறிச் செல்கிறது என்கிற எண்ணம் பொதுமக்களிடையே மேலோங்கி உள்ளது. மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று தி.மு.க குறிப்பிட்டுப் பேசுவதும், அதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கமும் விசித்திரமாக இருக்கிறது' என்றவர், 'ஒன்றியம்' என்ற வார்த்தை என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கும் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும், ‘நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணா ஒன்றியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை’ என்றும், ‘மாநிலங்கள் திருப்பித் தரப்பட்டுள்ளன என்றுதான் அண்ணாவே 1963-ல் மக்களவையில் பேசியிருக்கிறார். அதாவது மாநிலங்களைப் பிரித்துக் கொடுப்பதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்’ எனவும் தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ‘அதேசமயத்தில் இந்திய அரசைப் பற்றிக் குறிப்பிடும்போது 'கவர்மென்ட் ஆஃப் இந்தியா' என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, இந்திய நாட்டை ஆளும் ஓர் அரசைக் குறிப்பிடும்போது எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், 'இந்திய அரசு' என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமான ஒன்றாகும். ஆனால், இப்போதைய திமுக அரசு 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிடுகிறது. தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட பல அரசினர் தீர்மானங்களில் 'இந்தியப் பேரரசு' என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டிருப்பதை இந்த தருணத்தில் நான் நினைவூட்ட விரும்புகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளவர்...

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

‘மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ்நாட்டின் உரிமைகளை, கோரிக்கைகளை, வாழ்வாதாரப் பிரச்னைகளை, நலன்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள்நலன் பயக்கும் செயல் அல்ல என்பதையும், இது போன்ற செயல் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனவும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

`தமிழகம் - தமிழ்நாடு - இந்திய ஒன்றியம்..'  - வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் சொல்வதென்ன?

ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஓபிஎஸ்ன் அறிக்கை குறித்து தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வி.பி.துரைசாமியிடம் கேட்டோம். ``ஒன்றிய அரசு என்று சொல்வதே தவறு. மறைந்த முதல்வர், தி.மு.க தலைவர் கலைஞர் மிகப்பெரிய தமிழறிஞர். முத்தமிழறிஞர். மாநில சுயாட்சி என்ற நூல் வெளியே வருவதற்குக் காரணமாக இருந்தவர். 70 ஆண்டுக்காலம் அரசியலிலிருந்த கலைஞர் 'ஒன்றியம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதே இல்லை. தேர்தலுக்கு முன்புகூட தி.மு.க தலைவர் ஸ்டாலின் 'ஒன்றியம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் யாரோ ஒருவர் சொல்லிக் கொடுத்ததன்பேரில் 'ஒன்றியம்' என்ற வார்த்தையைத் தொலைக்காட்சியிலும் பொது இடங்களிலும் சட்டப்பேரவையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திவருகிறார். பிரிவினைவாதிகளாகவோ, நக்சலைட்டுகளாகவோ, தீவிரவாத எண்ணத்தை விரும்புபவர்கள்தான் உண்மையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.

வி.பி.துரைசாமி
வி.பி.துரைசாமி

காலம் காலமாக நாம் பயன்படுத்திவரும் மத்திய அரசு என்றோ, இந்திய அரசு என்றோ சொல்வதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று தெரியவில்லை. அப்படித்தான் பயன்படுத்தவும் வேண்டும். முன்னாள் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர், தேசப்பற்று மிக்கவர் ஓ.பன்னீர்செல்வம். தி.மு.க-வின் தேசவிரோதப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கத்தான் செய்வார். அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பத்ல்லாம் தேவையில்லாத செயல்” என ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டது குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

ஓ.பி.எஸ் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். ``கடந்த மாதம் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குடும்பத்துடன் சென்று வடநாட்டிலிருந்த ஒரு சாமியாருக்கு பூஜை செய்திருக்கிறார். அப்போது, தான் மத்திய அமைச்சர் ஆக வேண்டும். அதற்கு ஏதாவது பூஜை செய்யலாமா எனக் கேட்க. அதற்கு அந்தச் சாமியார் "பா.ஜ.க என்ன சொன்னாலும் உங்க அப்பாவை ஆதரித்துப் பேசச் சொல்லு. அதுதான் நீ அமைச்சர் ஆவதற்காக நீ செய்ய வேண்டிய ஒரே பூஜை" எனச் சொல்லியனுப்பியிருக்கிறார். சாமியாரைச் சந்தித்த போட்டோகூட வெளியானது. தன்னுடைய அப்பா அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சொல்ல, அதன் பின்னர்தான் `ஒன்றியம் என தி.மு.க சொல்லிக்கொண்டிருப்பது தவறான போக்கு’ எனப் பேச ஆரம்பித்திருக்கிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஓபிஎஸ்-ஸின் கருத்துகளெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க-வின் கருத்தாகத்தான் இருக்கும். பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொள்ள முடியாது இல்லையா... அதனால், பா.ஜ.க கருத்துக்கு ஒத்துப்போய்விட்டால் போதும், பையனுக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிடும் இல்லையா...” என்றவர்...

`தமிழகம் - தமிழ்நாடு - இந்திய ஒன்றியம்..'  - வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் சொல்வதென்ன?

ஜெயலலிதா பல முறை 'ஒன்றியம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் ஏன் பேசவில்லை... ஜெயலலிதாவுக்கு இல்லாத அரசியல் அறிவா ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது? 'ஒன்றியம்' என்ற வார்த்தையை அண்ணா சொல்லவில்லை என்கிறார். ஆனால், அண்ணா சொன்னதாக நாடாளுமன்றக் குறிப்பில் எப்படி இடம்பெற்றது? 'யூனியன்' என்ற சொல்லுக்குத் தமிழில் வேறு என்ன சொற்கள் இருக்கின்றன? கடந்த வாரம் புதுச்சேரியில் `இந்திய ஒன்றிய பிரதேசமான புதுச்சேரிக்கு அமைச்சராகப் பொறுப்பேற்கிறேன்’ என்றுதானே அந்த மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்... ‘யூனியன் டெரிட்டரி’ என்பதை 'ஒன்றியம்' என்றுதானே மொழிபெயர்த்திருக்கிறார்கள். வேறொரு வார்த்தை இருந்திருக்குமானால் அதை ஏன் அவர்கள் பயன்படுத்தவில்லை?

ரவீந்திரநாத் - பன்னீர்செல்வம்
ரவீந்திரநாத் - பன்னீர்செல்வம்

தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவராக இருந்தவர், துணைநிலை ஆளுநர் தமிழிசை 'ஒன்றியம்' என்று சொல்கிறார் என்றால் என்ன அர்த்தம்... தமிழ்நாட்டில் மட்டும் எப்படி 'யூனியன்' என்பதற்கு வேறு பொருளில் மொழிபெயர்க்க வேண்டும் என்று சொல்ல முடியும்... உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு ஒரு நியாயமா? ஓ.பன்னீர்செல்வம் பாவம்... தன் பையனை அமைச்சர் ஆக்க வேண்டும் என்பதற்காக, திராவிடக் கொள்கைகளை எங்கெங்கோ அடமானம்வைக்கிறார்” என ஓ.பி.எஸ் அறிக்கைக்கு உள்நோக்கம் இருப்பதாக விவரித்தார்.

அடுத்த கட்டுரைக்கு