Published:Updated:

`பெகாசஸ் விவகாரம்' மறுப்பதற்கு இரண்டு வாரங்களா? - மத்திய அரசின் அணுகுமுறைக்குப் பின்னால்?

 'பெகாசஸ்' விவகாரம்
'பெகாசஸ்' விவகாரம்

பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றம் முடங்கிவரும் வேளையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு மத்திய அரசு சார்பில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பதிலளிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணைக்குழு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருவதால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் 15 நாள்களுக்கும் மேலாக முடங்கியுள்ளன. இரு அவைகளிலும் எந்த அலுவலும் நடைபெறாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவை முடங்கியிருந்தாலும், மற்றொருபுறம் மத்திய அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றிவருகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்
ANI

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் என்று 300-க்கும் மேற்பட்டவர்களின் மொபைல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட சர்ச்சை கிளம்பியது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெகாசஸ் விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்று கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ``மோடியும், அமித் ஷாவும் இந்தியாவின் ஜனநாயகத்துக்கு எதிராக பெகாசஸ் மென்பொருளை ஏன் பயன்படுத்தினர்... பிரதமர் மோடி இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவைக் காயப்படுத்திவிட்டார். இந்த நாட்டின் இளைஞர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். பிரதமர் மோடி உங்களின் மொபைல்போனுக்கு பெகாசஸ் எனும் ஆயுதத்தை அனுப்பியிருக்கிறார். அந்த ஆயுதத்தை எனக்கு எதிராகவும் பயன்படுத்தியிருக்கிறார். என்னிடம் மட்டுமல்ல, விஞ்ஞானிகள், அறிஞர்கள், நீதிபதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரிடமும் பயன்படுத்தியிருக்கிறார். விவசாயிகள் பிரச்னை, பணவீக்கம், பெகாசஸ் விவகாரம் போன்றவற்றில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதித்தே ஆக வேண்டும்" என்றார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
ANI

தொடர்ந்து பேசியவர், ``நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் நெரிக்கப்பட்டுவருகின்றன. நாடாளுமன்றத்தில் நாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை. மத்திய அரசு குறிப்பிட்ட சில நபர்களுக்கு எதிராகப் பயன்படுத்த பெகாசஸ் மென்பொருளை வாங்கியதா இல்லையா என்பதை மட்டும்தான் தொடர்ந்து கேட்டுவருகிறோம். ஆம், இல்லை என்று பதில் சொல்ல மறுக்கிறார்கள். நாங்கள் எங்களின் கடமையை மட்டும்தான் செய்கிறோம். இந்த விவகாரம் குறித்து விவாதம் நடைபெறாது என்று அரசு தெரிவித்திருக்கிறது. ஏன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாது?" என்று கேட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது மனுக்களின் மீதான விசாரணை, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி ரமணா, ``நாங்கள் விவாதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கும்போது, இங்குதான் விவாதிக்க வேண்டும். வெளியில் விவாதிக்கக் கூடாது. அரசியல் தலைவர்கள் யாரும் வரம்பு மீறக் கூடாது" என்று கூறினார்.

பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்துவந்த நிலையில், ஆகஸ்ட் 9-ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கேள்வி நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் வி.சிவதாசன் ``பெகாசஸ் மென்பொருளை உருவாக்கிய என்.எஸ்.ஓ குழுமத்துடன் மத்திய அரசு ஏதேனும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதா?" என்ற கேள்வியை எழுப்பினர். இந்தக் கேள்விக்கு ``என்.எஸ்.ஓ குழுமத்துடன் ராணுவ அமைச்சகம் எவ்விதமான வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை" என்று ராணுவ இணை மந்திரி அஜய் பட் எழுத்துபூர்வமாகப் பதிலளித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு விசாரணையின்போது பேசிய நீதிபதி ரமணா,``பெகாசஸ் தொடர்பாக வெளிவந்த செய்தி உண்மையென்றால் இந்த விவகாரம் தீவிரமானது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டது என்று கூறுகிறார்களே தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை. ஏன் யாரும் வழக்கு தொடரவில்லை" என்று கேட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 14 எதிர்க்கட்சிகள் சார்பில் ஆகஸ்ட் 4-ம் தேதி கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், `` பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் மீது அவதூறு பரப்பும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. நாடாளுமன்றம் முடங்குவதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் மீது குற்றச்சாட்டு வைப்பது தவறானது. இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. அதை அரசு ஏற்க மறுத்துவருகிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு முன்வர வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து ஆறாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திடம் பேசினோம். ``கடந்த ஆட்சியைவிட தற்போது மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் எந்தக் கேள்வியையும் செவிகொடுத்துக் கேட்கக்கூடத் தயாராக இல்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நான் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அத்வானி கலந்துகொண்ட கூட்டங்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். அவர்களெல்லாம் எதிர்க்கட்சிகள் என்ன கூறுகிறது என்று கேட்பார்கள். தவிர்க்க முடியாத விஷயங்களுக்கு ஒப்புதல் வழங்குவார்கள். நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு அதிக பலம் இருப்பதால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைக் கேட்பதுகூட கிடையாது" என்றார்.

எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
எஸ்.எஸ். பழனிமாணிக்கம்

தொடர்ந்து பேசியவர், ``முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசும்போதுகூட பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அவ்வப்போது இந்தியில் பேசுவார்கள். இப்போதெல்லாம் பெரும்பாலும் இந்தியில் மட்டுமே பேசுவார்கள். எதிர்க்கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவதில்கூட பல மாற்றங்கள் நடக்கின்றன. எங்களுக்கும் அவை நடக்க வேண்டும் என்றுதான் ஆசை. எங்களின் கோரிக்கைகளை அவர்கள் என்னவென்று கேட்பதுகூட கிடையாது. ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் கூடும்போது அளவிலா உற்சாகத்தோடு அவைக்குச் செல்வோம். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம். கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஏக்கத்தோடு பிரிவோம். அப்போதெல்லாம் அவை அனைவருக்குமானதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. மத்திய அரசின் இந்தப் போக்கு நல்ல ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல. இந்த முறை நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போதுதான் ஏன் நாடாளுமன்றத்துக்கு வந்தோம் என்ற அளவுக்கு நாடாளுமன்ற நடைமுறைகள் முழுதும் ஜனநாயக விரோதமா மாறியுள்ளன. நான் 1996-ல் நாடாளுமன்றத்தில் நுழைந்தபோது இருந்த நாடாளுமன்றம் இப்போது இல்லை. எங்களது முன்னோர் ஒப்படைத்த நாடாளுமன்றத்தை, அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க முடியுமா என்று அஞ்சுகிறோம்" என்று மிக வருத்தமாகக் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, சட்டத்துக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை என்று தெளிவாக மத்திய அரசு கூறிவிட்டது. தவறாக எதுவும் நடந்திருந்தால், குற்றம் நடந்திருந்தால் ஏன் புகார் வழங்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்குப் பாராளுமன்றத்தை முடக்க வேண்டும் என்ற ஓர் எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரியவருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், மத்திய அரசின் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவாக இருந்துவிடக் கூடாது; அதோடு எதிர்க்கட்சிகள் மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் இருக்கின்றன என்பதைத்தான் இது உணர்த்துகிறது" என்றார்.

பெகாசஸ் விவகாரம்: அதிரவைக்கும் உண்மைகளும் ஆட்டம் காணும் பா.ஜ.க அரசும்!
நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

மேலும், ``எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது அவை குறித்து விவாதித்து, மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, சுகாதாரத்தை மேம்படுத்த பேசித் தீர்வு காண்பதையெல்லாம் விட்டுவிட்டு ராகுல் காந்தியின் தொலைபேசியையும், மற்றவர்களின் தொலைபேசியையும் ஒட்டுக்கேட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என்பது முறையா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்க பல்வேறு விஷயங்கள் இருக்கும்போது, எந்த ஒரு முகாந்திரமும் இல்லாத குற்றச்சாட்டு குறித்து விவாதம் நடத்தி மக்களின் நேரத்தையும், மக்களின் பணத்தையும் வீணடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 40 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியதை அன்று ஏளனம் பேசியவர்கள், இன்றுவரை 51 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுவிட்டன என்பதை ஏற்க பயந்து இது போன்ற அநாவசியமான செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும்" என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு