Published:Updated:

வேகத்தைக் கூட்டும் ஓ.பி.எஸ்... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுவதன் பின்னணி என்ன?!

ஓபிஎஸ் - அதிமுக

ஓ.பி.எஸ்-ஸின் இந்த திடீர் வேகத்துக்குக் காரணம் என்ன?

வேகத்தைக் கூட்டும் ஓ.பி.எஸ்... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டுவதன் பின்னணி என்ன?!

ஓ.பி.எஸ்-ஸின் இந்த திடீர் வேகத்துக்குக் காரணம் என்ன?

Published:Updated:
ஓபிஎஸ் - அதிமுக

அதிமுக பொதுக்குழு வழக்கு இன்னும் உச்ச நீதின்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறும்' என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தால் பிளவுபட்டிருக்கும் அதிமுக-வில் மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை நியமித்துவந்த, ஓ.பன்னீர்செல்வம் தற்போது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். விரைவில் பொதுக்குழுவைக் கூட்டத் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஓ.பி.எஸ்-ஸின் இந்த திடீர் வேகத்துக்குக் காரணம் என்ன?

பன்னீர் - எடப்பாடி
பன்னீர் - எடப்பாடி

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த பிறகு கட்சியிலிருந்து நிர்வாகிகளை நீக்குவதும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதுமான அறிவிப்புகளை ஓ.பி.எஸ் & இ.பி.எஸ் இருவருமே வெளியிட்டுவந்தனர். ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புதிய நியமனங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அதேவேளையில், உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்த நேரத்தில் சிலகாலம் நியமனங்களை நிறுத்திவைத்திருந்தார் பன்னீர். பின்னர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு எடப்பாடிக்குச் சாதகமாக வந்தபோதும் அமைதியாக இருந்தார் பன்னீர். பின்னர், கட்சியின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்து நிர்வாகிகள் நியமனத்தை மீண்டும் தொடங்கினார்.

தமிழகம் முழுவதும் கட்சிரீதியாக 88 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அவைத்தலைவர், இணைச் செயலாளர்கள், பொருளாளர், இளைஞரணி, மாணவரணி, வர்த்தக அணி என அனைத்துப் பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமித்தார் பன்னீர். இந்த நிலையில், வரும் 21-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை வேப்பேரியிலுள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில், மா.செ-க்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம், அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓ.பி.எஸ் அணியில் இணைந்த சந்திரசேகரன்
ஓ.பி.எஸ் அணியில் இணைந்த சந்திரசேகரன்
நா.ராஜமுருகன்

இந்த நிலையில், பன்னீர் அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில் பன்னீரின் இந்த வேகத்துக்குக் காரணம் என்ன?

அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

``உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஆரம்பகாலத்தில், நிர்வாகிகள் நியமனம் என்பது ஆக்டிவ்வாகக் காட்டிக்கொள்வதற்காக மட்டுமே செய்யப்பட்டது. பொதுக்குழு வழக்கு எப்படியும் தனக்குச் சாதகமாக வரும் என தீர்க்கமாக நம்பினார் ஓ.பி.எஸ். ஆனால், தற்போதுள்ள சூழலில் அவருக்கு அந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. அதனால்தான், நிர்வாகிகள் நியமனத்தை வேகப்படுத்தி, விரைவில் பொதுக்குழு, செயற்குழுவையும் கூட்ட முடிவெடுத்திருக்கிறார். பொதுக்குழுவில், இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தையும், துணை ஒருங்கிணைப்பாளராக ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டதையும் மற்றும் மாவட்ட அளவில் செய்யப்பட்டுள்ள நியமனங்களையெல்லாம் தீர்மானமாக நிறைவேற்றி, பொதுக்குழு ஒப்புதலுடன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவதற்கு முடிவு செய்திருக்கிறார்'' என்றவர்கள், தற்போதைய பன்னீரின் இந்த வேகத்துக்கான காரணங்களையும் அடுக்கினர்.

``ஜி20 மாநாடு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் என்கிற முன்னொட்டுடன் எடப்பாடி பழனிசாமியை அழைத்ததை ஓ.பி.எஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அது குறித்து உடனடியாக பிரகலாத் ஜோஷிக்குக் கடிதமும் எழுதினார். ஆனால், குஜராத் முதல்வராக பூபேந்திர பட்டேல் பதவியேற்பு நிகழ்வுக்கு ஓ.பி.எஸ்-ஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கே, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தன் மன ஆதங்கத்தையெல்லாம் கொட்டித்தீர்த்துவிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம், அமித் ஷா
ஓ.பன்னீர்செல்வம், அமித் ஷா

`நீங்கள் உங்கள் பணிகளை வேகப்படுத்துங்கள்... வேறு எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள்' என நம்பிக்கையளிக்கும்விதத்தில் பதில் வந்திருக்கிறது. தொடர்ந்து, அந்த நிகழ்வில் ஓ.பி.எஸ்-ஸுக்கு மோடி அளித்த முக்கியத்துவமும் டெல்லி தலைமை இன்னும் நம்மைக் கைவிடவில்லை என்கிற நம்பிக்கையை அவருக்கு அளித்திருக்கிறது. அதனால்தான், வேகமாக அடுத்தடுத்த பணிகளைத் தொடங்கிவிட்டார்'' என்கிறார்கள்.