Election bannerElection banner
Published:Updated:

பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை பெயர் மாற்றம்..! - உள்ளரசியல் என்ன?

பெரியார் ஈ.வெ.ரா சாலை
பெரியார் ஈ.வெ.ரா சாலை

பெயர் மாற்றம் தொடர்பாகக் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் நேற்று இரவு மீண்டும் `பெரியார் ஈ.வெ.ரா சாலை’ எனப் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் முத்துசாமி பாலத்திலிருந்து மதுரவாயல் சந்திப்பு வரையிலான 14 கி.மீ நீளமுள்ள சாலை, `பூந்தமல்லி நெடுஞ்சாலை’ என்றும், `பெரியார் ஈ.வெ.ரா சாலை’ என்றும் அழைக்கப்பட்டுவருகிறது. இதில் `ஈ.வெ.ரா பெரியார் சாலை’ என்ற பெயர் எந்த முன்னறிவிப்பும் இன்றி, `கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என்று பெயர் மாற்றப்பட்டு, சாலை நெடுகிலும் கடந்த சில நாள்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பாக போர்டுகள் வைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை வைத்த போர்டுகளிலிருந்த கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற பெயரை திராவிடர் விடுதலை கழகத்தினர் கறுப்பு மையை வைத்து அழித்ததுடன், மீண்டும் `பெரியார் ஈ.வெ.ரா சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்து புதிய போர்டுகள் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கைவைத்த்னர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும் இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

பெரியார் ஈ.வெ.ரா.சாலை
பெரியார் ஈ.வெ.ரா.சாலை
பெயர் மாற்றம் தொடர்பாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் நேற்று இரவு மீண்டும் `பெரியார் ஈ.வெ.ரா சாலை’ எனப் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரியார் ஈ.வெ.ரா சாலை, சென்னை
பெரியார் ஈ.வெ.ரா சாலை, சென்னை

கறுப்பு மையைவைத்து நெடுஞ்சாலைத்துறை போர்டுகளில் இருந்த கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற பெயரை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதியிடம் பேசினோம்...

"தமிழகத்தில் எடுபடாது!" - பெரியார் மீதான பா.ஜ.க விமர்சனத்துக்கு செல்லூர் ராஜு பதில்

``சென்னை மாநகராட்சி பதிவேட்டில் ‘பெரியார் ஈ.வெ.ரா சாலை’ என்ற பெயர்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்த பதிவேட்டில்தான் `கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என்ற பெயர் இருக்கிறது. பெரியார் நூற்றாண்டு விழாவின்போது எம்.ஜி.ஆர்-தான் இந்தச் சாலைக்கு பெரியார் பெயரை வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் பெரியார் பெயரை எந்த அறிவிப்பும் இல்லாமல், யாருக்கும் தெரியாமல் மாற்ற வேண்டிய தேவை அரசுக்கு எங்கிருந்து வந்தது? தங்களை திராவிடக் கட்சிகள், எம்.ஜி.ஆரின் வாரிசுகள், அம்மாவின் ஆட்சி நடத்துகிறோம் என்று இவர்கள் சொல்லிக்கொண்டாலும் பா.ஜ.க-வுடன் சென்ற பின் மாநில சுயாட்சி என்ற கொள்கையை மறந்துவிட்டார்கள்.

ஜெயலலிதா எதிர்த்த பல விஷயங்களை பா.ஜ.க-வின் மாற்று வடிவமாக இருந்துகொண்டு தமிழகத்தில் அனுமதித்துவருகிறார்கள். அதேபோல எம்.ஜி.ஆர் அறிவிப்பையும் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி தமிழகம் வந்துபோனபிறகு நடந்திருக்கும் இதை, தற்செயலானது என எடுத்துக்கொள்ள முடியாது. தேர்தல் பணிகளில் இருந்ததால் எங்களது கவனத்துக்கு இது வர கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது. ஆனால், பெயர் மாற்றப்பட்டது எங்கள் கவனத்துக்கு வந்ததும், அதைக் கறுப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

உமாபதி, தி.வி.க - தென்சென்னை மாவட்ட செயலாளர்
உமாபதி, தி.வி.க - தென்சென்னை மாவட்ட செயலாளர்

பா.ஜ.க-வால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. இதற்கு பெரியார் காரணமாக இருக்கிறார் என்பதால், அந்தப் பெயரைக் கேட்டதுமே பா.ஜ.க-வுக்கு அலர்ஜியாக இருக்கிறது. அம்பேத்கர், எம்.ஜி.ஆர்., அண்ணா போன்றவர்களின் சிலைகளுக்குக் காவி பூசியவர்களால் பெரியார் சிலை அருகில்கூட செல்ல முடியவில்லை என்ற ஏமாற்றம் வேறு.

இதனால் பெரியாரிய அமைப்புகளைத் தடுப்பது, பெரியார் கொள்கைகளின் பரப்புரைகளைத் தடுப்பது, பெரியாரிய சிந்தனையாளர்கள் மீது வழக்கு தொடுப்பது என்று பெரியாரின் பெயரை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். ஆனால், பெரியாரின் பெயரை அழிக்கிறோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பெரியார் தொடர்பான உரையாடல்கள் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக பேசப்படுவதற்குக் காரணமாக இருக்கின்றன என்பதை மறந்துவிடுகிறார்கள்.

கறுப்பு மையால் அழிக்கப்பட்ட போர்டு - சென்னை
கறுப்பு மையால் அழிக்கப்பட்ட போர்டு - சென்னை

பெரியார் இறந்து 40 ஆண்டுகளான பின்னும் அவரின் தத்துவம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை பா.ஜ.க-வால் ஜீரணிக்கவே முடியவில்லை” என்றார்.

சாலையின் பெயர் மாற்ற விவகாரம் குறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் அன்பழகனிடம் பேசினோம். ``ஒரு வரலாற்று நிகழ்வையோ, ஆவணத்தையோ மாற்றும், திருத்தும் வேலையை அ.தி.மு.க அரசு என்றைக்குமே செய்தது கிடையாது. இதையெல்லாம் செய்வது தி.மு.க-தான். கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரத்தை கட்டிய ஏக்நாத்ஜி ரானாடே-வைக்கொண்டு திருவள்ளுவர் சிலை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-தான். ஆனால், இடைப்பட்ட காலத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி தன்னுடைய சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க செயலாளர் மூலம் அந்த அடிக்கல்லைப் பிடுங்கி அப்புறப்படுத்திவிட்டு அதன் தடமே இல்லாமல் செய்துவிட்டார். இந்த மாதிரி வரலாற்று ஆவணத்தை தி.மு.க மாற்றி அமைத்ததற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்-தான் 1970-ம் ஆண்டில் கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்ற பெயரை `பெரியார் ஈ.வெ.ரா சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்தார். இப்போதும் அதே பெயரில்தான் இருக்கிறது. நெடுஞ்சாலைத்துறையில் இருந்த பழைய ஆவணத்தின் அடிப்படையில் போர்டு வைத்துவிட்டார்கள்.

நாஞ்சில் அன்பழகன் - அ,தி.மு.க செய்தித் தொடர்பாளர்
நாஞ்சில் அன்பழகன் - அ,தி.மு.க செய்தித் தொடர்பாளர்

எங்கோ ஓர் ஓரத்தில் அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்துவிட்ட தவறுதான் அது. தலைவர் எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் நடக்கும் அரசு அவர்களின் கருத்துகளுக்கு முரணாக எதையும் செய்யாது. தற்போது அந்தத் தவறு சரிசெய்யப்பட்டு மீண்டும் `பெரியார் ஈ.வெ.ரா சாலை’ என போர்டு வைக்கப்பட்டுள்ளது” என அவர் விளக்கமளித்தார்.

பெரியார் ஈ.வெ.ரா சாலையைத் தொடர்ந்து தற்போது அண்ணா, காமராஜர் சாலைகளின் பெயர்களும் நெடுஞ்சாலைத்துறை பதிவேட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவை குறித்தும் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய மாற்றங்களைச் செய்வார்கள் என்று நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு