Published:Updated:

எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது ரவுண்டு ரெய்டு - முறையான நடவடிக்கையா, அரசியல் பழிவாங்கலா?

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இரண்டாவது முறையாக ரெய்டு நடந்திருக்கிறது. `அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணம்’ என அ.தி.மு.க-வினரும், `ஊழல் செய்தவர்கள் மீதான உண்மையான நடவடிக்கை’ என்று தி.மு.க-வினரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். உண்மை என்ன?

எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது ரவுண்டு ரெய்டு - முறையான நடவடிக்கையா, அரசியல் பழிவாங்கலா?

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இரண்டாவது முறையாக ரெய்டு நடந்திருக்கிறது. `அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணம்’ என அ.தி.மு.க-வினரும், `ஊழல் செய்தவர்கள் மீதான உண்மையான நடவடிக்கை’ என்று தி.மு.க-வினரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். உண்மை என்ன?

Published:Updated:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. ஆகஸ்ட் 10, 2021-ல் 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது. காலை 6 மணிக்குத் தொடங்கிய ரெய்டு எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான அ.தி.மு.க நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள் என மாலை 7 மணி வரை நீண்டது. இதையொட்டி பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி, அவரின் சகோதரர் உள்ளிட்டோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

முன்னர் நடந்த ரெய்டைப்போலவே இப்போதும் வேலுமணியின் வீட்டின் முன் கூடிய அ.தி.மு.க தொண்டர்களுக்குக் காலை உணவு, ஸ்நாக்ஸ், குளிர்பானம், மதிய உணவு, டீ போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரெய்டையொட்டி வேலுமணியின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பண்ணன், தங்கமணி, செங்கோட்டையன், உதயகுமார் ஆகியோர் வந்திருந்ததோடு ரெய்டு முடியும் வரை வேலுமணியுடனேயே இருந்தனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில, செல்போன், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், தங்கம், வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறது.

வேலுமணி ரெய்டு
வேலுமணி ரெய்டு

“என் வீட்டில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை நடத்தி எங்கள் வேலைகளை முடக்க நினைக்கிறார். ஆனால், அது நடக்காது” என வேலுமணி பேசியிருக்கிறார். வேலுமணி மீதான சோதனையின் பின்னணி என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க வழக்கறிஞர்கள் பிரிவுப் பிரதிநிதி இன்பதுரையிடம் பேசினோம். “நிச்சயம் இது பழிவாங்கும் நடவடிக்கைதான். ஆறு மாத இடைவெளியில் மற்றொரு சோதனை நடத்தவேண்டிய தேவை என்ன? புதிதாக எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடலாம். புதிதாக ஏதாவது தகவல் உங்களுக்குக் கிடைத்திருக்குமானால் வேலுமணிக்கு சம்மன் கொடுத்து விசாரணை செய்திருக்கலாம். அதை விட்டுவிட்டு அதிகாரிகளைச் சுவர் ஏறிக் குதிக்கவைத்து சோதனை நடத்தியிருப்பதெல்லாம் உண்மையில் பழிவாங்கும் நடவடிக்கையாக அல்லாமல் வேறு எப்படிப் பார்ப்பது. காவல்துறையை வைத்து தி.மு.க அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கையென்றால் ராஜேந்திர பாலாஜிக்கு பாஸ்போர்ட்டே இல்லை. ஒரே ஒரு முறை வெளிநாடு சென்றிருக்கிறார். அதுவும் அரசு முறைப் பயணம் என்பதால் டிப்ளமஸி பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது.

வழக்கறிஞர் இன்பதுரை - அதிமுக
வழக்கறிஞர் இன்பதுரை - அதிமுக

ஜெயக்குமார் வழக்கில் நில அபகரிப்பு வழக்கில் 397 என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. இது கொடூரமான ஆயுதத்தை வைத்துக் கொள்ளை அடித்ததற்குப் பதிவு செய்வது ஆகும். சென்னை உயர் நீதிமன்றம் ஜெயக்குமார் வைத்திருந்த ஆயுதம் என்ன என்று கேட்டபோது அரசுத் தரப்பில் அதற்கான பதிலே இல்லை. இப்படி எல்லா வழக்குகளையும் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பதிவுசெய்து அ.தி.மு.க தலைவர்களை அசிங்கப்படுத்துகிறது தி.மு.க அரசு" என்றவர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பணம், கிரிப்டோகரன்ஸியெல்லாம் கைப்பற்றப்பட்டதாக அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையே போலியானது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்துவிட்டதாகத்தான் இவர்கள் வேலுமணி மீது குற்றம்சாட்டி சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசின் மேற்பார்வையில் நடப்பது. வேலுமணி அந்தத் திட்டம் தொடர்பாக எதிலும் கையெழுத்துக்கூட போட்டதில்லை. எனும்போது எதைவைத்து ஊழல் செய்ததாகச் சொல்கிறார்கள் என்பது புரியவில்லை.

`பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்பார்கள். அப்படித் தெரிந்தோ, தெரியாமலோ தமிழக மக்கள்மீது தி.மு.க ஆட்சி வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி முடியும் வரை தி.மு.க-வின் அரசியல் வெறியாட்டத்தையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. இவை எல்லாவற்றையும் நாங்கள் நீதிமன்றத்தின் துணையோடு எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி வழக்கில் புகார் அளித்தவர், `விஜய நல்லதம்பியிடம்தான் பணம் அளித்தோம்’ எனச் சொல்லியிருந்தார். எந்த இடத்திலும் `ராஜேந்திர பாலாஜியிடம் பணம் கொடுத்தேன்’ எனச் சொல்லவில்லை. ஆனால், ராஜேந்திர பாலாஜியைச் சிக்கவைப்பதற்காக இரண்டாவது ஒரு புகாரை வாங்கி, அதில் ராஜேந்திர பாலாஜியைச் சேர்த்து, அவரைக் குற்றவாளிபோலத் துரத்தினார்கள். ஆனால், இறுதியில் உச்ச நீதிமன்றத்திடம் குட்டுப்பட்டார்கள். இப்போது வேலுமணி விவகாரத்திலும் அதுதான் நடக்கிறது. இதையும் நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்” என்றார்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தது குறித்து தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தியிடம் பேசினோம். “வேலுமணி மீதான சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. இது குறித்து வேலுமணி சொன்னபோது, “என்கூடப் பழகியவர்கள், வாக்கிங் போனவர்கள் எல்லோர் வீட்டிலும் சோதனை நடத்தியிருக்கிறார்கள்” என்றிருக்கிறார். அமைச்சராக இருந்தவர், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ரகசியக் காப்பு பிரமாணம் எடுத்தவர், பக்கத்து வீட்டுக்காரர்கள், வாக்கிங் வந்தவர்கள் என எவ்விதத் தகுதியும் இல்லாதவர்களிடம் அரசின் ஒப்பந்தங்களைக் கொடுத்து, கமிஷன் வாங்கி, பல கோடி ரூபாய் கொள்ளையடித்ததால்தான் அவரோடு தொடர்புடைய அனைவரையும் விசாரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது.

ராஜீவ் காந்தி திமுக
ராஜீவ் காந்தி திமுக

ஏற்கெனவே செய்த விசாரணையில் பல கோடி ரூபாய் பணம், தங்கம், வெள்ளிப் பொருள்களின் விவரங்கள் சரிவரக் கிடைக்கப் பெறாததால்தான் தற்போது மீண்டும் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அரசின் ஒப்பந்தங்களை விற்பனை செய்து, கமிஷன் வாங்கி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததன் பலனைத்தான் தற்போது அனுபவித்துவருகிறார் என்றுதான் நான் பார்க்கிறேன்” என்றவர்...

“லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை மற்ற வழக்குகள் மாதிரிக் கையாள முடியாது. முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துவிட்டுத்தான் சோதனைக்கே செல்ல முடியும். இந்த முதல் தகவல் அறிக்கையில் அவர் சொத்து சேர்த்த விகிதம் மற்றும் சேர்த்த சொத்துகளின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அந்தத் தகவல் அறிக்கையை யார் வேண்டுமானால் பார்க்கலாம். அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து அமைச்சர்களையும் தன் கைக்குள் வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதியாகக் காட்டிக்கொண்டு, ஊழல் மனநிலையோடு உலக, ஆசிய நிதிகளை மக்களின் வாழ்வியலுக்குப் பயன்படுத்தாமல் வெற்றுத் திட்டங்கள் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். அதற்காக மற்ற அமைச்சர்கள் புனிதர்களாக இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்கள்மீது குற்றச்சாட்டு இருக்கிறது. நீதிமன்ற உத்தரவு பெற்று அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலுமணி  கேரளா வீடு
வேலுமணி கேரளா வீடு

`என்மீது மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் ரெய்டு நடத்துகிறார்கள்?’ என வேலுமணி சொல்வதே தன் கட்சியினரையே காட்டிக்கொடுத்துவிட்டு, தான் தப்பித்துக்கொள்ள வேலுமணி செய்யும் மலிவான அரசியலாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. வேலுமணி செய்த ஊழலுக்கு இன்னும் அவர்மீதான நடவடிக்கைகள் தொடரும்” என விமர்சனங்களுக்கு விளக்கமளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism