Election bannerElection banner
Published:Updated:

``டெல்லிக்குச் சென்று பதிலைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' - உத்தரகாண்ட் முதல்வர் ராஜினாமா பின்னணி என்ன?

உத்தரகாண்ட் அரசியல்
உத்தரகாண்ட் அரசியல்

டெல்லிக்குச் சென்று பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்துவந்த அடுத்த நாளே, உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்தது ஏன்?!

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், தனது பதவியை நேற்று (மார்ச் 9) ராஜினாமா செய்திருக்கிறார். இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த திங்கள்கிழமை அன்று டெல்லி சென்று பா.ஜ.க தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்திருந்தார் திரிவேந்திர சிங் ராவத். அதன் பிறகு செவ்வாய்க்கிழமை அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் அவர்.

 திரிவேந்திர சிங் ராவத்
திரிவேந்திர சிங் ராவத்
உத்தரகாண்ட் பேரிடர்... உண்மைக் காரணம் என்ன?

உத்தரகாண்ட்டில் மொத்தம் 70 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. 2017 சட்டமன்றத் தேர்தலில் 57 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது பா.ஜ.க. வெற்றிக்குக் காரணமாக இருந்த முக்கியத் தலைவர்களுள் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத்தை, உத்தரகாண்ட் முதல்வர் ஆக்கினார் பிரதமர் நரேந்திர மோடி. சுமார் நான்காண்டு காலமாக அம்மாநிலத்தின் முதல்வராக இருந்துவந்த திரிவேந்திர சிங் ராவத், திடீரென ராஜினாமா செய்திருக்கிறார்.

ராஜினாமா செய்ததன் பின்னணி என்ன?

2017 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க வெற்றிபெற்ற பிறகு `முதல்வர் யார்?' என்கிற ரேஸில் முதல் ஐந்து இடங்களில்கூட இல்லாதவர்தான் திரிவேந்திர சிங் ராவத். பா.ஜ.க மத்திய தலைவர்களின் ஆதரவால் இவருக்கு முதல்வர் பதவி கிடைத்தது. இதன் காரணமாக அந்தச் சமயத்தில் பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலர் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினர். அதைத் தொடர்ந்து திரிவேந்திர சிங் ராவத், ஒரு சிலருக்கு மட்டுமே சாதகமாக நடந்துகொள்வதாகச் சொந்தக் கட்சியினரிடமிருந்தே எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. இது போன்ற நடவடிக்கைகளால் கட்சிக்குள்ளேயே இவருக்கு எதிராக ஓர் அணி செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், ``உத்தரகாண்ட்டில் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் மந்தமாக உள்ளன. சிறிய மாநிலமான உத்தரகாண்ட்டை திரிவேந்திர சிங் ராவத் ஒழுங்காக நிர்வாகம் செய்யவில்லை'' என்று தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஊழல் குற்றச்சாட்டுகளும் இவர்மீது அதிகம் வரத் தொடங்கின.

மோடி, ஜெ.பி நட்டா, அமித் ஷா
மோடி, ஜெ.பி நட்டா, அமித் ஷா

இது மட்டுமல்லாமல், 2018-ம் ஆண்டு `ஜனதா தர்பார்' என்கிற நிகழ்ச்சியில் பொதுமக்களோடு உரையாடினார் திரிவேந்திர சிங் ராவத். அப்போது பெண் ஆசிரியை ஒருவர், `பணி இடமாற்றம் வேண்டும்' என்று அவரிடம் கோரிக்கை வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த திரிவேந்திர சிங் ராவத், அப்போதே அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது `சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்' எனக் கோரிக்கை வைத்து சட்டமன்றத்துக்கு முன்பு போராடிய பெண்களை, லத்தி சார்ஜ் செய்து கலைக்குமாறு உத்தரவிட்டார். இது போன்று பொதுமக்களுக்கு எதிராக அவர் எடுத்த முடிவுகள் அம்மாநிலத்தில் பா.ஜ.க-வுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கின்றன. இவையெல்லாம்தான் திரிவேந்திர சிங் ராவத்தின் ராஜினாமாவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன.

``கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் திரிவேந்திர சிங் ராவத்மீது தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவந்தன. இன்னும் ஓராண்டில் உத்தரகாண்ட்டில், சட்டசபைத் தேர்தல் வரவிருக்கிறது. திரிவேந்திர சிங் ராவத் தொடர்ந்து முதல்வராக நீடித்தால், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்கிற பயத்தில்தான் பா.ஜ.க தலைமை இந்த முடிவை எடுத்திருக்கிறது'' என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரிவேந்திர சிங் ராவத், ``நான்கு ஆண்டுகள் உத்தரகாண்ட் முதல்வராக இருந்திருக்கிறேன். நான் நினைத்துக்கூடப் பார்க்காத இந்தப் பொன்னான வாய்ப்பை கட்சி எனக்கு அளித்திருக்கிறது. இப்போது வேறு ஒருவரை முதல்வராக்க வேண்டுமெனக் கட்சி முடிவெடுத்திருக்கிறது'' என்றார். `ஏன் கட்சி மேலிடம் உங்களுக்கு பதிலாக வேறொருவை முதல்வராக்க நினைக்கிறது?' என்ற கேள்வியைப் பத்திரிகையாளர்கள் பலமுறை அவரிடம் முன்வைத்தனர். அதற்குப் பின்வருமாறு பதிலளித்திருந்தார் அவர்...

டெல்லிக்குச் சென்று இதற்கான பதிலைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
திரிவேந்திர சிங் ராவத்
 திரிவேந்திர சிங் ராவத், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர்
திரிவேந்திர சிங் ராவத், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர்
இதையடுத்து உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் ஹரீஷ் ராவத், ``மாநிலத்தில் அதிகார மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய அரசு, மாநிலத்துக்காக ஒன்றுமே செய்யவில்லை என்பது மத்தியிலுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கே தெரிந்திருக்கிறது'' என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

அடுத்த முதல்வர் யார்?

இந்தநிலையில் உத்தரகாண்ட்டின் அடுத்த முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2012 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வென்ற இவர், 2013 முதல் 2015 வரை உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க-வின் தலைவராகவும் இருந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி-ஆகப் பணியாற்றினார். தற்போது பா.ஜ.க மேலிடம் இவரை உத்தரகாண்ட்டின் முதல்வர் ஆக்கியிருக்கிறது.

தீரத் சிங் ராவத்
தீரத் சிங் ராவத்
`தோப்பூர்' முதல் `தொகுதி இல்லை' வரை - தே.மு.தி.க-வின் 15 ஆண்டுக்கால அரசியல் ரீவைண்ட்!

புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் தீரத் சிங் ராவத், ``என்னை முதல்வராக தேர்ந்தெடுத்ததற்காகப் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறிய கிராமத்திலிருந்து கட்சிக்குள் சாதாரணத் தொண்டனாக வந்த எனக்கு, இன்று பெரிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பாடுபடுவேன்'' என்று உற்சாகமாகப் பேட்டியளித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு