Published:Updated:

பற்றி எரியும் மணிப்பூர்... கண்டவுடன் சுட உத்தரவு, களத்தில் ராணுவம் - என்ன நடக்கிறது?

மணிப்பூர் கலவரம்

மணிப்பூர் மாநிலம் கடந்த சில நாள்களாகவே வன்முறைக் காடாய் மாறியிருக்கிறது. வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுடும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:

பற்றி எரியும் மணிப்பூர்... கண்டவுடன் சுட உத்தரவு, களத்தில் ராணுவம் - என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலம் கடந்த சில நாள்களாகவே வன்முறைக் காடாய் மாறியிருக்கிறது. வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுடும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மணிப்பூர் கலவரம்

`மணிப்பூர் எரிகிறது. தயவுசெய்து உதவுங்கள்' என்று குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சமீபத்தில் ட்வீட் செய்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரை டேக் செய்தது ஒட்டுமொத்த இந்தியாவையே மணிப்பூரின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது. இது மட்டுமின்றி, அந்த மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், கலவரங்கள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. இந்தக் காணொளிகளின் உண்மைத்தன்மை எதுவும் உறுதிசெய்யப்படவில்லையென்றாலும், காண்போரைக் கண்கலங்கச் செய்கிறது. எதனால் இந்தக் கலவரம்... இனப் பிரச்னை எப்படி, இவ்வளவு பெரிய கலவரமாக வெடித்தது? 

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

இந்தியாவின் வடகிழக்கில் அமைந்திருக்கும் மணிப்பூர் மாநிலத்தில், பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும், மேதி சமூக மக்களும் (Meitei people) வசித்துவருகின்றனர். தங்களையும் பழங்குடி பட்டியலினத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பல காலமாக மேதி சமூக மக்கள் முன்வைத்து வந்தனர். ஆனால், இதை அம்மாநில பழங்குடி மக்கள் எதிர்த்து வந்தனர். இந்த நிலையில், மணிப்பூரின் உயர் நீதிமன்றம், ஏப்ரல் 19 அன்று, மேதி சமூகத்தைப் பட்டியலினத்தில் சேர்க்கும் கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலனை செய்ய உத்தரவிட்டது. மேலும், இதை மத்திய அரசின் பரிசீலனைக்கும் அனுப்ப உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம், கடந்த புதன்கிழமை அன்று, மணிப்பூரின் தலைநகரமான இம்பாலிலிருந்து, 65 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில், ஒற்றுமைப் பேரணியை நடத்தியது. இந்தப் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். சுராசந்த்பூர் மட்டுமல்லாமல் சேனாபதி, உக்ரூ, சந்தல் போன்ற பகுதிகளிலும் பல்வேறு பேரணிகள் நடத்தப்பட்டன. அந்தப் பேரணியின்போதுதான் வன்முறை வெடித்தது. பழங்குடியினருக்கும், பழங்குடியினர் அல்லாதவருக்குமிடையே மோதல்கள் வலுப்பெற்றதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான வன்முறைச் சம்பவங்கள் விஷ்ணுபுர், சுராசந்த்பூர் ஆகிய பகுதிகளில் நடந்தன. 

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

இதையடுத்து ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரியான கர்னல் மகேந்திர ராவத், தற்போது மணிப்பூரில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் வியாழக்கிழமை அன்றே கலவரங்கள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். இம்மாநில முதலமைச்சர் பைரன் சிங், `இந்தக் கலவரங்கள் இரு சமூகத்துக்குமிடையே ஏற்பட்ட தவறான புரிதல் காரணமான நடைபெற்றிருக்கிறது' என்றார். மேலும், மக்கள் ஒத்துழைத்து சட்டம்-ஒழுங்கைக் கடைப்பிடிக்க மாநிலத்துக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு ஒரு காணொளி வெளியிட்டார். 

மேதி சமூகத்துக்கும், பழங்குடியினருக்கும் என்னதான் பிரச்னை? 

மலைவாழ் மாநிலமான மணிப்பூரின் மக்கள்தொகை சுமார் இருபத்தி எட்டு லட்சம். இதில் மேதி சமூக மக்கள் ஐம்பத்து மூன்று சதவிகிதம் பேர். இவர்களே மாநில சட்டமன்றத்தில் ⅔ பங்கும் வகிக்கின்றனர். இங்கு, பல பழங்குடியினர் சமூகத்தை உள்ளடக்கிய ஓர் இனக்குழு 'குக்கி' (Kuki). இவர்களின் எண்ணிக்கை மணிப்பூரின் மக்கள் தொகையில் முப்பது சதவிகிதம். 

மேதி சமூகத்தினருக்குப் பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டால், அரசு வேலைகளிலும், கல்வி நிலையங்களிலும் தங்களது சேர்க்கை பாதிக்கப்படும் என்பதே பழங்குடியினரின் கவலையாக இருக்கிறது. மேலும், எஸ்.சி., ஓ.பி.சி-யின் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடும் வழங்கப்பட்டிருப்பதாகப் பழங்குடியினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இவர்களின் பிளவுக்கு இது மட்டுமே காரணமில்லை.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்
ட்விட்டர்

இரு சமூகத்தினரிடையே பல காலங்களாக, தொடர்ந்து உரசல் இருந்துவந்தது. மணிப்பூரின் தற்போதைய முறைப்படி, மலைப்பாங்கான இடங்களில் மேதி சமூகத்தினர் குடியேற முடியாது. ஆனால் பிற பழங்குடியினர், அங்கு குடியேறலாம். அதனால், சமவெளிகளிலும், வயல்வெளியிலும் பட்டியலின மக்கள் ஆதிக்கம் செய்துவருவதாக மேதி சமூகத்தினர் குற்றம்சாட்டிவருகின்றனர். மணிப்பூரின் நிலப்பரப்பில் 8-10 சதவிகிதம் மட்டுமே சமவெளி நிலங்கள்.

மேதி சமூகத்துக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்கிவிட்டால், தங்கள் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், இதனால் ஆறாவது அட்டவணையில் தங்களது இருப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் பழங்குடியினர் போராட்டங்களிலும் பேரணிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர். 

ஆனால், மேதி சமூகத்தைப் பட்டியலினத்தில் சேர்க்க இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை மணிப்பூர் மக்கள் தவறாகப் புரிந்துகொண்டதால்தான், இந்தக் கலவரம் வீரியமடைந்ததாக மூத்த பத்திரிகையாளர் பிரதீப் ஃபன்ஜோபம் தெரிவித்திருக்கிறார்.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்

இந்த வன்முறைச் சம்பவங்களுக்கிடையே, சுமார் 7,500 பேர் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பான அரசு வளாகங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். கலவரங்களைக் கட்டுக்குள் கொண்டுவர, இந்திய ராணுவம், அசாம் ரைபில்ஸின் உதவி பெறப்பட்டது. மே 4-ம் தேதி, தீவிர வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுடும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில், இணைய சேவையும் முடக்கப்பட்டிருக்கிறது. இதுவரை, கலவரங்களில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ராணுவப்படைகள், விரைவு அதிரடிப்படை, மத்திய காவல்துறை படைகள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

மணிப்பூரின் தற்போதைய கலவரங்கள், பழைய இனப் பிளவுகளை விரிவுபடுத்தியிருக்கிறது.