Published:Updated:

கே.டி.ராகவனுக்கு உறுதுணையா... தனிமனித உரிமைக்கு ஆதரவா? - சீமானின் சீற்றத்துக்குக் காரணம் என்ன?

கே.டி.ராகவன் - சீமான்
கே.டி.ராகவன் - சீமான்

சீமான் அளித்த பதில் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. பல தரப்பிலிருந்தும் அவர்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

``எது அநாகரிகம் என்று நீங்களே பாருங்கள். அவருடைய ஒப்புதல் இல்லை, அவருடைய அனுமதியும் இல்லை! அவருக்கே தெரியாமல், அவருடைய வீட்டின் படுக்கையறையிலும் கழிவறையிலும் கேமராவைவைத்து வீடியோ எடுத்துவிட்டு வருவதுதான் முதலில் சமூகக் குற்றம்! அதைச் செய்து வெளியிட்டவரைத்தான் முதலில் கைதுசெய்திருக்க வேண்டும். இந்த உலகத்திலேயே எங்கும் நடக்காத ஒன்றை இவர் செய்துவிட்டார் என்பதுபோலக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?" என்றார் சீமான்.

பா.ஜ.க முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த இந்த பதில் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பல தரப்பிலிருந்தும் அவர்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

``நாம் தமிழர் கட்சியிலிருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. பாஜக-விடமிருந்து மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஆபாசமான, அருவருக்கத்தக்க, ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் திரு சீமான் போன்றவர்களிடமும் பெண்களும், தமிழ்ச் சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஜோதிமணி
ஜோதிமணி
நா.ராஜமுருகன்

எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவோ, அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை திரு சீமான் நினைவில் கொள்ள வேண்டும். திரு சீமான் மீதும் கடந்த காலத்தில் இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் சீமான் 'பாஜகவின் பி-டீம்'-தான் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படியிருந்தாலும் திரு சீமானின் இந்தச் செயல் வெட்கக்கேடானது. சீமான், கே.டி.ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டின் பெண்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும். தமிழகம், குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும் மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்துகொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்யும் பெருந்தொண்டு'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

``சட்டசபையில்வைத்தே ஆபாசப் படங்களெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பொறுப்பில் இருப்பவர்கள் அதையெல்லாம் செய்யக் கூடாது. ஆனால், இவர் தனிப்பட்ட முறையில் செய்த ஒன்றை வீடியோ எடுத்துவைத்துக்கொண்டு அப்படிச் செய்துவிட்டார், இப்படி நின்றுவிட்டார் என்று சொல்வதையெல்லாம் பார்க்கும்போது, ஒரு கேடுகெட்ட சமூகமாக மாறிவிட்டதோ என்ற பயமே வருகிறது. யார் யாருடன் பேசுகிறார்கள், யார் என்ன பேசுகிறார்கள் என ஒட்டுக்கேட்பது, பதிவுசெய்வது, அதை வெளிவிடுவது... என்ன சாதித்துவிடப் போகிறார்கள், என்ன வந்துவிடப் போகிறது?"
சீமான்

இந்தநிலையில், சீமானின் பேச்சு குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி பேசும்போது,

``தமிழ்நாடு முழுவதும் வீடியோ விவகாரத்தைக் கண்டித்து கொண்டிருக்கும்போது, சீமான் ஏன் இப்படிப் பேசினார் எனத் தெரியவில்லை. சீமானுக்குத் தனிப்பட்ட முறையில் இப்படியொரு கருத்து இருந்தாலும், பொதுவெளியில் நியாயப்படுத்தும் விதத்தில் பேசியிருக்கக் கூடாது. கே.டி.ராகவன் மீதான எதிர்ப்பைவிட தற்போது சீமான் மீதான எதிர்ப்பு மேலோங்கியிருக்கிறது.

பாலபாரதி
பாலபாரதி

'எங்குதான் இப்படி நடக்கவில்லை' என சீமான் பேசியிருப்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாக் குற்றங்களையும் எங்குதான் நடக்கவில்லை என அங்கீகரிக்க முடியாது. சாதாரண ஒரு மனிதன் இப்படிப் பேசினால் தனிமனித உரிமையைப் பேசுகிறார் என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு இப்படிப் பேசுவது சரியல்ல. அதனால்தான் கடுமையான எதிர்ப்புகள் வருகின்றன. மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்காமல் இதை ஏன் பேசுகிறீர்கள் எனக் கேட்கிறார். அதையும் எதிர்க்க வேண்டும், இது போன்ற சம்பவங்களையும் எதிர்க்க வேண்டும். சீமான் இப்படிப் பேசியிருக்க வேண்டாம் என்பதே என் கருத்து'' என்கிறார் அவர்.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ... கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்த கே.டி.ராகவன்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீமானின் மீதான இந்த விமர்சனங்கள் குறித்து, நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாக்கியராசனிடம் பேசினோம்,

``தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கிடையிலான ஒரு விஷயம் வெளியில் வந்திருக்கிறது. அதை ஒரு விவாதமாக எடுத்து ஏன் நாம் பேசிக்கொண்டிருக்க வேண்டும்... தற்போதைய நெருக்கடியான அரசியல் சூழலில் அது பேசுவதற்கான டாபிக் இல்லை என்ற கருத்தையே அண்ணன் சீமான் முன்வைத்தார். ஆனால், அவர் சொன்ன கருத்தை எடுத்துக்கொண்டு இப்போது தேவையில்லாமல் விவாதித்து, சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ராகவனுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களை தொலைக்காட்சி விவாதங்களுக்குக்கூட அழைக்கக் கூடாது என மற்றவர்களைவிட எங்களைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருப்பவர் ராகவன். நாங்களும் அரசியல்ரீதியாக அவரை மிகக் கடுமையாக எதிர்த்துவருகிறோம். அந்தப் பேட்டியிலேயே, வேளாண் சட்டம், தனியார்மயம் குறித்து பா.ஜ.க-வை மிகக் கடுமையாக அண்ணன் சீமான் எதிர்த்து பேசியிருக்கிறார். ஆனால், எங்களை பா.ஜ.க-வின் பி டீம் என்பது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் களத்திலேயே அது இல்லை என நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜோதிமணிக்கு அவர்கள் கட்சியில் புதிதாகப் பொறுப்பு வரவிருக்கிறது. அதனால் ஆக்டிவாக இருப்பதுபோலக் காட்டிக்கொள்கிறார்.

பாக்கியராசன்
பாக்கியராசன்

நாங்கள் மரண தண்டனையை எதிர்த்துவருபவர்கள், ஆனால், பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை அளித்தாலும் தவறில்லை என அண்ணன் சீமானே பேசியிருக்கிறார். அதனால், பெண்ணுக்கு எதிரான அநீதியில் ராகவனுக்கு ஆதரவாக சீமான் நிற்கிறார் எனப் பேசுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை. சட்டப்படி நடவடிக்கைகளை முன்னெடுத்து ராகவனைக் கூண்டில் நிறுத்துங்கள். அதை விடுத்து பொதுவெளியில் இதை விவாதிப்பதால், எந்தத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இது போன்ற விஷயங்கள் அடுத்தடுத்து தொடர்ந்தால் சமூகத்துக்குத்தான் ஆபத்து என்பதே எங்களின் கருத்து'' என்கிறார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு