Published:Updated:

உயர்ந்தது கட்டுமானப் பொருள்கள் விலை; கேள்விக்குறியாகும் வீடுகட்டும் கனவு! - என்ன காரணம்?

கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு

கடந்த சில ஆண்டுகளாகக் கட்டுமானப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. தற்போது வரலாறு காணாத வகையில் கட்டுமானப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பேரிடர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க இன்னொருபுறம், பொருளாதார பாதிப்பு மற்றும் விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை மிகவும் அதிகரித்திருப்பது கட்டட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களைக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

கட்டுமானப் பணியாளர்கள்
கட்டுமானப் பணியாளர்கள்

தமிழக அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா பேரிடர் காரணமாகவும், ஊரடங்கு நடைமுறையில் இருப்பதாலும் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இந்தநிலையில் கட்டுமானப் பொருள்களின் திடீர் விலை ஏற்றம் கட்டுமானப் பணிகளை மேலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

விலைவாசி உயர்வு:

பொது முடக்கம் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாகச் சந்தைகளுக்குக் கம்பி, சிமென்ட், மணல் போன்ற கட்டுமானப் பொருள்களின் வரத்து குறைந்துள்ளது. தற்போது தளர்வு வழங்கப்பட்ட காரணத்தால் கடைகளிலுள்ள இருப்புகளவிட, தேவை அதிகமாகக் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து செயற்கையாகக் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

410-430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமென்ட்டின் விலை 470-500 ரூபாயாக அதிகரித்துள்ளது. 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கம்பியின் விலை 70-72 ரூபாயாக அதிகரித்துள்ளது. 3,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட எம் சாண்ட் ஒரு யூனிட் 4,000 ரூபாய்க்கும். 4,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வி சாண்ட் ஒரு யூனிட் 5,100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 23,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லோடு செங்கல் 28,000 ரூபாயாகவும், 8,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 3 யூனிட் ஜல்லி 9,500 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனங்கள் எதுவும் விலை உயர்வை அறிவிக்காத நிலையில், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் கட்டுமானப் பணியில் 50 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விலைவாசி உயர்வு காரணமாகக் கட்டுமானப் பணிகள் முடங்கும் அபாயத்தில் உள்ளன. சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விலை நிர்ணயம் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விலைவாசி உயர்வை உடனே தடுத்து நிறுத்துங்கள்..!

கட்டுமானப் பொருள்கள் விலைவாசி உயர்வு தொடர்பாக அருப்புக்கோட்டையில் வீடுகட்டிவரும் அமுதா என்பவரிடம் பேசினோம். ``கடந்த ஆண்டு ஊரடங்குக்கு முன்பு நாங்கள் வீடு கட்டத் தொடங்கினோம். கடந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு கட்டுமானப் பொருள்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. இப்போது வீடு கட்டி முடிக்கும் நிலையில் இருக்கிறது. மீண்டும் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு, அனைத்துப் பொருள்களின் விலையும் முன்பைவிட மிக அதிகமாகக் காணப்படுகிறது. நாங்கள் போட்ட பட்ஜெட்டைவிட மிக அதிகமாகச் செலவாகிவருகிறது. இதனால், வீடு கட்டி முடிக்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது. இவை அனைத்துக்கும் இந்த விலை உயர்வே காரணம்" என்று கூறினார்.

கட்டுமானப் பணிகள்
கட்டுமானப் பணிகள்

இந்த விலைவாசி உயர்வு தொடர்பாக ஈரோட்டைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளரும், ஒப்பந்ததாரருமான சிவகுமாரிடம் பேசினோம், ``இந்த விலைவாசி உயர்வு கட்டுமானப் பணிகளை முடக்கிப்போடுகிறது. விலை உயர்வு காரணமாகச் செலவினங்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தலையிட்டு இந்த நிலைமையை விரைந்து சரிசெய்ய வேண்டும். இந்த விலை உயர்வு வீடுகட்டும் பலரின் எண்ணத்துக்கும் தடையாக உள்ளது. அரசு சார்பில் விலைகள் நிர்ணயம் செய்யக் குழுவை அமைத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று பேசினார்.

இது தொடர்பாக அகில இந்தியக் கட்டுநர் வல்லுநர் சங்கம், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ராமபிரபுவிடம் பேசினோம். ``கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, கட்டுமானத் தொழில் செய்பவர்களை மட்டும் பாதிக்காது; பொதுமக்களையும் பெரிய அளவில் பாதிக்கும். செங்கல், மணல், கம்பி தொடங்கி, மரம், எலெக்ட்ரிக் பொருள்கள் என்று எல்லா பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இப்படியான விலையேற்றம் பெரிய கட்டுமான நிறுவனங்கள் தொடங்கி, சிறிய வீடு கட்டுபவர்கள் வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ராமபிரபு
ராமபிரபு

சிமென்ட் மற்றும் கம்பிகளின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திவருகிறோம். நீதிமன்றத்தை நாடியுள்ளோம். ஆனால், அதற்கு இன்னும் ஒரு தீர்வு கிடைத்தபாடில்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றத்தை, தமிழக அரசு தலையிட்டு உடனடியாக ஒரு தீர்வுகாண வேண்டும்" என்று கூறினார். இந்தநிலையில், சிமென்ட் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசனை மேற்கொண்டு, விலையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு